காற்று இல்லாத உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். குளங்கள் அமைதியாக இருக்கும். மரத்திலிருந்து கீழே விழும் இலைகள் தெருக்களில் பறக்காது. இப்படியிருக்க காற்று அசையாத இடத்தில் மரங்கள் தீடீரென விழக்கூடும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? ஆனால் அது நடந்தது. அரிசோனா பாலைவனத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்த வட்டவடிவ கண்ணாடி கோபுர மண்டபத்தில் பல மரங்கள் இருந்தது. பையோஸ்பியர் 2 (Biosphere 2) என்று அழைக்கப்படும் இம்மண்டபத்தில் துளி காற்று கூட கிடையாது. அப்படியிருக்க, இயல்பை விட இங்கு அதி வேகமாக வளரும் மரங்கள், அதின் பாரம் தாங்கமுடியாமலே திடீரென கீழே விழுந்து விடுகின்றன. இதைக்குறித்து இத்திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் இறுதியாக ஒரு விளக்கமளித்தார்கள். அதாவது, மரங்கள் வலுவானதாக வளர காற்றின் அழுத்தும் விசை தேவை என்பதே.

இயேசு தம்முடைய சீஷர்கள் விசுவாசத்திலே பெலனடைய பலத்த காற்றின் தாக்குதலை அவர்கள் எதிர்கொள்ள அனுமதித்தார் (மாற். 4:36-41). ஒரு இரவு நேரத்தில், அனுபவமிக்க மீனவர்கள் மிகவும் பழக்கப்பட்ட நீர் நிலையை கடக்கும் பொழுது, அவர்கள் எதிர்கொண்ட புயல்காற்றை சமாளிக்க முடியாமல் அஞ்சினார்கள். பலத்த காற்றும், அலைகளும் அவர்கள் சென்ற படகை அலைக்கழித்துக் கொண்டிருந்த பொழுது, இயேசுவோ படகின் பின் பகுதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். பீதியடைந்து அவர்கள் இயேசுவை எழுப்பினார்கள். அவர்கள் சாகப்போவதைக்குறித்து அவர்களுடைய போதகருக்கு கவலை ஏதும் இல்லையா? அவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? அதை அவர்கள் பின்பு அறிந்துகொண்டார்கள். இயேசு காற்றையும், கடலையும் அமைதியாய் இருக்கும்படி அதட்டிவிட்டு, தன் நண்பர்களை பார்த்து ஏன் அவர்களுக்கு அவர் மீது இன்னும் விசுவாசம் வரவில்லை எனக் கேட்டார்.

இக்காற்று வீசயிருக்கவில்லை என்றால் “இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” (மாற். 4:41) என்று அவரது சீஷர்கள் கேட்டிருக்க மாட்டார்கள்.

இன்று, ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வது என்பது கேட்பதற்கு நன்றாக தான் உள்ளது. ஆனால் பிரச்சனைகள் அலை கடலென எழும்பி சத்தமிடும் பொழுது, ‘அமைதாலாயிரு’ என்று நமக்கு நம்பிக்கையளிக்கும் அவருடைய சத்தத்தை நாமாகவே அறிந்து கொள்ளவில்லை என்றால், நம்முடைய விசுவாசம் எப்படி பெலனடையும்?