பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் இங்கிலாந்து தேசத்திலுள்ள யார்க்ஷைர் டேல்ஸ் (Yorkshire Dales) என்னும் மாகணத்தின் தொலைக்கோடியில் உள்ள ஒரு கிராமத்து விடுதியில் தங்கியிருந்தோம். அங்கு எங்களைத் தவிர இன்னும் நான்கு தம்பதியினர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்நாட்டை சேர்ந்த, ஆங்கிலேயர்கள். முன்பின் அறியாத அவர்களோடு இரவு உணவிற்கு பின் கொஞ்சம் காபி குடித்தவாறு விடுதியின் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடைய உரையாடல் ஒவ்வொருவருடைய தொழிலை குறித்து திசை மாறியபொழுது, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்ற கேள்வி எழும்பியது. அச்சமயத்தில் நான் சிக்காகோவில் (Chicago) உள்ள மூடி வேதாகம நிறுவனத்தின் (Moody Bible Institute) தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்நிறுவனத்தைப் பற்றியோ அதன் நிறுவனர் டிவைட். எல். மூடியைப் (Dwight. L. Moody) பற்றியோ அவர்கள் ஒருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என எண்ணினேன். ஆனால் அக்கல்லூரியின் பெயரை சொன்ன மாத்திரத்தில் வந்த அவர்களுடைய பதில்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “மூடி மற்றும் சான்கி (Sankey) என்பவர்களா… அந்த மூடியா?” என்று ஒருவரும், “எங்களிடம் சான்கி தொகுத்த பாடல் புத்தகம் உள்ளது. அடிக்கடி நாங்கள் குடும்பமாக ஒன்று கூடி பியானோ (Piano) வாசிப்போடு அப்புத்தகத்தில் உள்ள பாடல்களை பாடுவோம்,” என்று மற்றொருவரும் கூறினார். அதைக்கேட்டு நான் மிகுந்த வியப்புற்றேன்! சுவிசேஷகரான டிவைட் மூடியும் இசைக் குழு நடத்துபவரான இரா சான்கியும் (Ira Sankey) 120 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் சுவிசேஷ கூட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடைய தாக்கத்தை, ஊழியத்தின் பயனை இன்றும் உணர முடிந்தது.

அன்று இரவு அவ்வறையை விட்டு கடந்து சென்ற பொழுது, தேவனுக்காக நம் வாழ்விலும் நீண்ட நிழல்களின் தாக்கத்தை எவ்வாறெல்லாம் வீசச் செய்ய முடியும் என எண்ணிக் கொண்டிருந்தேன். அது, ஒரு ஜெபிக்கும் தாய் தன் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கமாகவும் இருக்கலாம், ஒரு ஆசிரியர் அல்லது வழிகாட்டியினுடைய தைரியப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம், அல்லது ஒரு நண்பனின் அன்பு நிறைந்த சீர்ப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

“அவருடைய கிருபை… தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங் 100:5) என்னும் அற்புதமான வாக்குத்தத்தத்தில் நாமும் பங்களிக்க முடியும் என்பது நமக்கு கிடைத்த மகிமையான சிலாக்கியம்.