Archives: அக்டோபர் 2016

கிறிஸ்துவுக்குள் இணைக்கப்பட்டிருத்தல்

வேதாகமத்தில் பெயர்களின் பட்டியல் வரும்பொழுது, அவற்றை வாசிக்காமல் விட்டுவிட நமக்கு ஓர் எண்ணம் தோன்றும். ஆனால் இயேசு, அவரோடு இணைந்து ஊழியம் செய்ய அழைக்கப் பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் பொக்கிஷங்களைக் கண்டுகொள்ளலாம். அவர்களில் அநேகர் நம்மால் நன்கு அறியப்பட்டவர்கள் - கல் என்று அர்த்தம்கொள்ளும் பேதுரு என்று இயேசுவால் பெயரிடப்பட்ட சீமோன், மீன் பிடிக்கும் சகோதரர்களான யாக்கோபு, யோவான், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரை நன்கு அறிவோம். ஆனால், இயேசுவின் சீஷர்கள் ஆகும் முன்பு ஒருவருக்கொருவர் எதிராளிகளாக இருந்திருக்கக்கூடிய ஆயக்காரனாகிய மத்தேயு, செலோத்தியனாகிய சீமோன் ஆகியோரை எளிதாக கவனிக்காமல் விட்டுவிடுவோம்.

மத்தேயு ரோமர்களுக்காக வரி வசூலித்தவன். ஆகவே, யூதர்கள் அவனை எதிராளியாக பார்த்தனர். ஆயக்காரர்கள் அவர்களது நேர்மையற்ற நடக்கைகளாலும், தேவனுக்கு மட்டுமே அல்லாது அவர்களை ஆண்டுவந்த ரோமர்களுக்கு வரிப்பணம் வசூலித்ததாலும் யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள். மறுபுரத்தில் இயேசுவின் அழைப்புக்கு முன்பாக செலோத்தியனாகிய சீமோன் யூதர்களின் தீவிரவாத குழுவில் சேர்ந்தவனாகவும், ரோமர்களை வெறுப்பவனாகவும், வன்முறையினால் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களது ஆட்சியை கவிழ்த்துப் போடவும் தீவிரமாக இருந்தவன்.

மத்தேயுவும், சீமோனும் எதிர் எதிரான அரசியல் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மனப்பூசல்கள் உடையவர்களாகவோ அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் இயேசுவை பின்பற்றின பொழுது அவர்களுக்கு இடையே முன்பிருந்த கருத்து வேற்றுமைகளை களைந்து எறிவதில் வெற்றி கண்டிருப்பார்கள்.

மனிதனாக அவதரித்த தேவகுமாரனாகிய இயேசுவின் மீது நாமும் கூட நமது கண்களைப் பதித்தால், பரிசுத்தாவியின் உதவியினால், உடன் விசுவாசிகளோடு உள்ள ஐக்கியத்தில் மேலும், மேலும் அதிகமாய் ஊன்றக் கட்டப்படுவோம்.

பருகக்கூடிய புத்தகம்

உலகின் சில பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பது மிக அரிதாக இருப்பதால், தண்ணீரே ஜீவன் என்ற நிறுவனம் “பருகக்கூடிய புத்தகம்” என்ற மிகச்சிறந்த மூல ஆதாரத்தை உருவாக்கியது. அந்தப் புத்தகத்திலுள்ள காகிதங்களில் பூசப்பட்டிருந்த மிக நுன்னிய வெள்ளித் துகள்கள் 99.9 சதவீத நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வடிகட்டி விடும் தன்மை உடையது. அப்புத்தகத்திலிருந்து கிழித்து பயன்படுத்தப்பட்ட காகிதத்தை மறுபடி மறுபடியும் பயன்படுத்தி 100 லிட்டர் சுத்தமான தண்ணீரை மிகக்குறைந்த விலையில் பெற இயலும்.

வேதாகமமும் வழக்கத்திற்கு மாறான “பருகக்கூடிய” புத்தகமாகும். யோவான் 4ம் அதிகாரத்தில் சிறப்பான தண்ணீரைப் பற்றியும் வாசிக்கிறோம். கிணற்றண்டை இருந்த அந்த பெண்ணிற்கு சரீர தாகத்தை தீர்ப்பதற்கு தேவையான, சுத்தமான தண்ணீருக்கும் மேலாக, தெளிவான ஜீவத்தண்ணீர் தேவையாக இருந்தது. அந்த ஜீவத்தண்ணீரை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிய மிக ஆவலாக இருந்தாள். தேவனிடமிருந்து மட்டும் கிடைக்கக்கூடிய கிருபையும், மன்னிப்பும் அவளுக்குத் தேவையாக இருந்தது.

தேவகுமாரனாகிய இயேசு மட்டுமே “ஜீவதண்ணீரைக்” கொடுக்கக்கூடியவர், என்று கூறும் தேவனுடைய வார்த்தையே (வேதாகமம்) தலைசிறந்த “பருகக்கூடிய” புத்தகமாக உள்ளது. இயேசு அருளும் அந்தத் தண்ணீரைக் குடிக்கிறவன் “நித்திய ஜீவகாலமாக ஊறுகிற நிரூற்றை” அவன் உள்ளத்திற்குள்ளாக அனுபவிப்பான்.

சிலுவையைப் பற்றிக்கொள்ளுதல்

லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற போதகரான சார்லஸ் ஸ்பர்ஜன், போதகர்களை ஊழியத்திற்கு பயிற்றுவிப்பதற்காக போதகர்களுக்கான கல்லூரி ஒன்றை 1856ல் ஸ்தாபித்தார். 1923ம் ஆண்டு அது ஸ்பர்ஜன் கல்லூரி என்று மறுபெயர் சூட்டப்பட்டது. இன்று அந்தக் கல்லூரியின் அடையாள சின்னத்தில் சிலுவையைப் பற்றிப்பிடித்துள்ள ஒரு கரமும், “நான் பிடித்துள்ளேன், நான் பிடிக்கப்பட்டுள்ளேன்” என்ற அர்த்தம் கொள்ளும் லத்தீன் மொழி வார்த்தைகளும் உள்ளன. ஸ்பர்ஜன் அவரது சுய சரிதையில், “உறுதியான கரத்துடன் நாங்கள் சிலுவையைப் பற்றியுள்ளோம். ஏனென்றால் சிலுவை அதனுடைய ஈர்க்கும் சக்தியினால் எங்களை இறுகப்பற்றியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் சத்தியத்தைப் பற்றிக்கொள்ளவும், சத்தியத்தால் பற்றிக்கொள்ளப்படவும், விசேஷமாக சிலுவையில் மரித்த கிறிஸ்துவின் சத்தியத்தைப் பற்றிக்கொள்ள ஆவலாக இருக்கிறோம். இதுவே எங்களது கல்லூரியின் குறிக்கோள் வாசகம்” என்று எழுதியுள்ளார்.

பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் பவுல் இந்த சத்தியம் தான் அவரது விசுவாசத்திற்கு உறுதியான அடித்தளம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். “நான் அடைந்தாயிற்று… கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்” (பிலி. 3:12). இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மை, அவர் அவருடைய கிருபையினாலும், வல்லமையினாலும் தாங்குவதினால் சிலுவையின் செய்தியை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளுகிறோம். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20).

நம்முடைய கர்த்தர் ஒவ்வொரு நாளும் நம்மை அவரது அன்பின் பிடிப்பில் வைத்திருக்கிறார். அவருடைய இந்த அன்பின் செய்தியை நாம் பிறரோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.

துதித்தலும், விண்ணப்பித்தலும்

தவறான வழிகளில் எளிதாக செல்லக்கூடிய வாலிபப் பருவத்தினர் மத்தியில் ஊழியம் செய்வதற்காக, நியூயார்க் நகரத்தில், பதின்ம வயதினரின் சவால் என்ற ஊழியம் வழக்கத்திற்கு மாறான அர்ப்பணிப்பான ஜெபத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஸ்தாபகரான டேவிட் வில்கர்சன், அவரது தொலைக்காட்சி பெட்டியை விற்றுவிட்டு, அனுதினமும் இரவில் தொலைக்காட்சி பார்க்கும் இரண்டு மணிநேரத்தை ஜெபத்தில் செலவிட்டார். தொடர்ந்து வந்த மாதங்களில் அவரது புதிய முயற்சியைப் பற்றிய தெளிவு உண்டானதோடு, தேவனைத் துதிப்பதும், அவரிடம் உதவிக்கான விண்ணப்பங்களை ஏறெடுப்பதும் சமமாக இணைந்து செயல்படுவதிலுள்ள வெற்றியையும் பற்றி அறிந்து கொண்டார்.

இந்த சமநிலைப் பிரமாணத்தைப் பற்றி, தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த சாலொமோன் ராஜாவின் ஜெபம் தெளிவாக விளக்குகிறது. தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய உண்மைத் தன்மையையும் விவரித்து சாலமோன் அவரது ஜெபத்தை ஆரம்பித்தார். பின்பு அந்த தேவாலயம் சிறப்பாகக் கட்டிமுடிக்கப்பட தேவன்தாம் முழுமையான காரணம் என்று கூறி தேவனுடைய வல்லமையைப் புகழ்ந்து “இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (2 நாளா. 6:18) என்று அறிவித்தார்.

தேவனை மகிமைப்படுத்தி உயர்த்தின பின், ஆலயத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு காரியத்திலும், விசேஷமான கவனத்தைச் செலுத்தும்படி தேவனிடம் வேண்டிக் கொண்டார். மேலும் இஸ்ரவேல் மக்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், அவர்களது பாவங்களை அவர்கள் அறிக்கையிடும் பொழுது, மன்னித்து அவர்களது தேவைகளைச் சந்திக்கும்படியும் தேவனிடம் மன்றாடினார்.

“சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று” (2 நாளா. 7:1). நம்மால் இயலாத இந்த செயலின் மூலம் நாம் நமது ஜெபத்தில் துதித்து உரையாடும் தேவனே நம்முடைய தேவைகளைக் குறித்து கரிசனையுடன் கண்காணிக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

சிறந்த மருந்து

கானாவிலுள்ள அக்காரா நகரில் நடந்த போக்குவரத்து சண்டைகளுக்கு, வாடகைக் கார் (taxi) மற்றும் சிற்றுந்து (mini bus) ஓட்டும் வாகன ஓட்டிகள் மத்தியில் காணப்பட்ட கவனமற்ற முறையில் காரை ஓட்டுதல், வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் எரிச்சல், மேலும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற செயல்களே காரணங்களாக இருந்தன. ஆனால், போக்குவரத்தில் நான் கண்ட ஒரு நிகழ்ச்சி வேறுபட்ட விளைவை உண்டுபண்ணினது. ஒரு வாடகைக்காரை கவனமற்று ஓட்டிவந்த ஓட்டுநர் கிட்டத்தட்ட ஒர்  பேருந்தின்மேல் மோதி விட்டான். அந்தப் பேருந்து ஓட்டுநர் கோபப்பட்டு வாடகைக் கார் ஓட்டுநரை சத்தமாக திட்டப்போகிறான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, முகத்தில் ஏற்பட்ட கோப உணர்வை மாற்றி தவறுபுரிந்த வாகன ஓட்டியைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் சிரித்தான். அந்தச்சிரிப்பு ஆச்சரியமான விளைவுகளை உண்டுபண்ணினது. அந்த வாடகைக்கார் ஓட்டுநரும் பதிலுக்கு அவனது கைகளை உயர்த்தி, மன்னிப்பு கேட்டு, சிரித்துவிட்டு நகர்ந்து சென்றான். இறுக்கமான சூழ்நிலை தளர்ச்சி அடைந்தது.

சிரிப்பு, நமது மூளையில் ஆச்சரியமான வேதிமாற்றங்களை உண்டுபண்ணுகிறது. நாம் சிரிக்கும்பொழுது, நமது மூளையில் எண்டார்வின் (endorphin ) என்ற வேதிப்பொருள் செலுத்தப்படுகிறது. அது நமது சரீரப்பிரகாரமான சோர்வை தணிக்கும் சக்தி உடையது. சிரிப்பு இறுக்கமான சூழ்நிலையை மாற்றி அமைப்பதோடு, நமக்கு உள்ளாக இருக்கும் மன இறுக்கத்தையும் தளர்வுறச் செய்கிறது. நமது உணர்வுகள் நம்மை மட்டும் அல்லாது நம்மைச் சுற்றியுள்ள பிறரையும் பாதிக்கிறது. “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து,” (எபே. 4:31–32) என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது.

கோபமோ, மன இறுக்கமோ அல்லது கசப்பான உணர்வுகளோ நமக்கும் தேவனுக்கும், நமக்கும் பிறருக்கும் இடையே உள்ள உறவைப் பாதிப்பதாக இருந்தால் நம்முடைய சொந்த சந்தோஷத்திற்கும், உடல் நலத்திற்கும் “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என்பதை நினைவு கூருவது நல்லது.