தவறான வழிகளில் எளிதாக செல்லக்கூடிய வாலிபப் பருவத்தினர் மத்தியில் ஊழியம் செய்வதற்காக, நியூயார்க் நகரத்தில், பதின்ம வயதினரின் சவால் என்ற ஊழியம் வழக்கத்திற்கு மாறான அர்ப்பணிப்பான ஜெபத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஸ்தாபகரான டேவிட் வில்கர்சன், அவரது தொலைக்காட்சி பெட்டியை விற்றுவிட்டு, அனுதினமும் இரவில் தொலைக்காட்சி பார்க்கும் இரண்டு மணிநேரத்தை ஜெபத்தில் செலவிட்டார். தொடர்ந்து வந்த மாதங்களில் அவரது புதிய முயற்சியைப் பற்றிய தெளிவு உண்டானதோடு, தேவனைத் துதிப்பதும், அவரிடம் உதவிக்கான விண்ணப்பங்களை ஏறெடுப்பதும் சமமாக இணைந்து செயல்படுவதிலுள்ள வெற்றியையும் பற்றி அறிந்து கொண்டார்.

இந்த சமநிலைப் பிரமாணத்தைப் பற்றி, தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த சாலொமோன் ராஜாவின் ஜெபம் தெளிவாக விளக்குகிறது. தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய உண்மைத் தன்மையையும் விவரித்து சாலமோன் அவரது ஜெபத்தை ஆரம்பித்தார். பின்பு அந்த தேவாலயம் சிறப்பாகக் கட்டிமுடிக்கப்பட தேவன்தாம் முழுமையான காரணம் என்று கூறி தேவனுடைய வல்லமையைப் புகழ்ந்து “இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (2 நாளா. 6:18) என்று அறிவித்தார்.

தேவனை மகிமைப்படுத்தி உயர்த்தின பின், ஆலயத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு காரியத்திலும், விசேஷமான கவனத்தைச் செலுத்தும்படி தேவனிடம் வேண்டிக் கொண்டார். மேலும் இஸ்ரவேல் மக்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், அவர்களது பாவங்களை அவர்கள் அறிக்கையிடும் பொழுது, மன்னித்து அவர்களது தேவைகளைச் சந்திக்கும்படியும் தேவனிடம் மன்றாடினார்.

“சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று” (2 நாளா. 7:1). நம்மால் இயலாத இந்த செயலின் மூலம் நாம் நமது ஜெபத்தில் துதித்து உரையாடும் தேவனே நம்முடைய தேவைகளைக் குறித்து கரிசனையுடன் கண்காணிக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.