உலகின் சில பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பது மிக அரிதாக இருப்பதால், தண்ணீரே ஜீவன் என்ற நிறுவனம் “பருகக்கூடிய புத்தகம்” என்ற மிகச்சிறந்த மூல ஆதாரத்தை உருவாக்கியது. அந்தப் புத்தகத்திலுள்ள காகிதங்களில் பூசப்பட்டிருந்த மிக நுன்னிய வெள்ளித் துகள்கள் 99.9 சதவீத நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வடிகட்டி விடும் தன்மை உடையது. அப்புத்தகத்திலிருந்து கிழித்து பயன்படுத்தப்பட்ட காகிதத்தை மறுபடி மறுபடியும் பயன்படுத்தி 100 லிட்டர் சுத்தமான தண்ணீரை மிகக்குறைந்த விலையில் பெற இயலும்.

வேதாகமமும் வழக்கத்திற்கு மாறான “பருகக்கூடிய” புத்தகமாகும். யோவான் 4ம் அதிகாரத்தில் சிறப்பான தண்ணீரைப் பற்றியும் வாசிக்கிறோம். கிணற்றண்டை இருந்த அந்த பெண்ணிற்கு சரீர தாகத்தை தீர்ப்பதற்கு தேவையான, சுத்தமான தண்ணீருக்கும் மேலாக, தெளிவான ஜீவத்தண்ணீர் தேவையாக இருந்தது. அந்த ஜீவத்தண்ணீரை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிய மிக ஆவலாக இருந்தாள். தேவனிடமிருந்து மட்டும் கிடைக்கக்கூடிய கிருபையும், மன்னிப்பும் அவளுக்குத் தேவையாக இருந்தது.

தேவகுமாரனாகிய இயேசு மட்டுமே “ஜீவதண்ணீரைக்” கொடுக்கக்கூடியவர், என்று கூறும் தேவனுடைய வார்த்தையே (வேதாகமம்) தலைசிறந்த “பருகக்கூடிய” புத்தகமாக உள்ளது. இயேசு அருளும் அந்தத் தண்ணீரைக் குடிக்கிறவன் “நித்திய ஜீவகாலமாக ஊறுகிற நிரூற்றை” அவன் உள்ளத்திற்குள்ளாக அனுபவிப்பான்.