வேதாகமத்தில் பெயர்களின் பட்டியல் வரும்பொழுது, அவற்றை வாசிக்காமல் விட்டுவிட நமக்கு ஓர் எண்ணம் தோன்றும். ஆனால் இயேசு, அவரோடு இணைந்து ஊழியம் செய்ய அழைக்கப் பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் பொக்கிஷங்களைக் கண்டுகொள்ளலாம். அவர்களில் அநேகர் நம்மால் நன்கு அறியப்பட்டவர்கள் – பாறை என்று அர்த்தம்கொள்ளும் பேதுரு என்று இயேசுவால் பெயரிடப்பட்ட சீமோன், மீன் பிடிக்கும் சகோதரர்களான யாக்கோபு, யோவான், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரை நன்கு அறிவோம். ஆனால், இயேசுவின் சீஷர்கள் ஆகும் முன்பு ஒருவருக்கொருவர் எதிராளிகளாக இருந்திருக்கக்கூடிய ஆயக்காரனாகிய மத்தேயு, செலோத்தியனாகிய சீமோன் ஆகியோரை எளிதாக கவனிக்காமல் விட்டுவிடுவோம்.

மத்தேயு ரோமர்களுக்காக வரி வசூலித்தவன். ஆகவே, யூதர்கள் அவனை எதிராளியாக பார்த்தனர். ஆயக்காரர்கள் அவர்களது நேர்மையற்ற நடக்கைகளாலும், தேவனுக்கு மட்டுமே அல்லாது அவர்களை ஆண்டுவந்த ரோமர்களுக்கு வரிப்பணம் வசூலித்ததாலும் யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள். மறுபுரத்தில் இயேசுவின் அழைப்புக்கு முன்பாக செலோத்தியனாகிய சீமோன் யூதர்களின் தீவிரவாத குழுவில் சேர்ந்தவனாகவும், ரோமர்களை வெறுப்பவனாகவும், வன்முறையினால் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களது ஆட்சியை கவிழ்த்துப் போடவும் தீவிரமாக இருந்தவன்.

மத்தேயுவும், சீமோனும் எதிர் எதிரான அரசியல் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மனப்பூசல்கள் உடையவர்களாகவோ அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் இயேசுவை பின்பற்றின பொழுது அவர்களுக்கு இடையே முன்பிருந்த கருத்து வேற்றுமைகளை களைந்து எறிவதில் வெற்றி கண்டிருப்பார்கள்.

மனிதனாக அவதரித்த தேவகுமாரனாகிய இயேசுவின் மீது நாமும் கூட நமது கண்களைப் பதித்தால், பரிசுத்தாவியின் உதவியினால், உடன் விசுவாசிகளோடு உள்ள ஐக்கியத்தில் மேலும், மேலும் அதிகமாய் ஊன்றக் கட்டப்படுவோம்.