கதா நாயகர்
ஒரு பிரசித்திபெற்ற வேதாகமப் பயிற்சி கல்லூரியில், ஒரு மாணவன் தன்னுடைய வகுப்பில் பிரசங்கம் செய்தான். அந்த இளம் மாணவன் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தினான். உள்ளான உணர்வோடும், சரளமான பேச்சோடும் தன்னுடைய பிரசங்கத்தை முடித்து, மிகவும் திருப்தியடைந்தவனாய் அமர்ந்தான். அவனுடைய பேராசிரியர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், “இது மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டது. ஆனால், உன்னுடைய செய்தியின் எந்த பகுதியிலும் ஒரு வார்த்தை கூட தேவனைப்பற்றி சொல்லவேயில்லை” என்றார்.
சில வேளைகளில் நாமனைவரும் சந்திக்கின்ற பிரச்சனையையே அந்த பேராசிரியரும் குறிப்பிட்டார். நாம் நம்மையே முக்கியப்படுத்தி பேசுகின்றோம். (நாம் எதைச் செய்கின்றோம், எதைச் சொல்கின்றோம், என்பதையே முக்கியப்படுத்துகின்றோம்) உண்மையில் தேவன் தான் நம் வாழ்வின் கதாநாயகன். என் காரியங்கள் எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிக் கொண்டு, நம்முடைய செயல்கள் யாவும் என்னையேச் சார்ந்திருக்கின்றன என்பதாகச் செயல் படுகின்றோம்.
நம் வாழ்வின் காரணரும் நம்மை நடத்தும் மெய்யான வல்லமையும் தேவனே என வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றது. நம்முடைய விசுவாச செயல்களெல்லாமே “இயேசுவின் நாமத்தினாலும்” அவருடைய வல்லமையினால் மட்டுமே நடைபெறும் (சங். 118:10-11). தேவனே நம்மை இரட்சிக்கின்றார், நம்மை மீட்கின்றார், நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திக்கிறார். “அது கர்த்தராலே ஆயிற்று” (வச. 23).
எனவே நம்முடைய மனப் பாரங்களை விட்டு விடுவோம். நாம் பதட்டப்படவும், ஒப்பிடவும், நம்முடைய ஆவல்களை நிறைவேற்ற நம்மை வருத்திக் கொள்ளவும் வேண்டாம். தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீதுள்ள நம்பிக்கையோடு, அவர் காட்டும் வழி நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, அதன் வழி நடத்தலேயாகும்.
மறந்து விடாதே!
என்னுடைய உறவினர் ஒருவர், அவருடைய நான்கு வயது மகள் கெய்லினுடன் வந்திருந்தமையால், அந்தச் சனிக்கிழமை மாலை மிகவும் இனிமையாக இருந்தது. நாங்கள் வெளியில் சோப்புக் குமிழிகளை ஊதி மகிழ்ந்தோம், வண்ணமிடும் புத்தகத்தில் வண்ணமடித்தோம், நிலக்கடலை, வெண்ணெயோடு ரொட்டிகளைச் சாப்பிட்டு மகிழ்ந்தோம். அவர்கள் திரும்பிச் செல்லும்படி காரில் ஏறினபோது, கெய்லின் காரின் ஜன்னலைத் திறந்து இனிமையாக, “என்னை மறந்துவிடாதீர்கள், ஆனி அத்தை” என்றாள். நான் விரைந்து காரின் அருகில் சென்று, “என்னால் உன்னை மறக்கவே முடியாது, நான் சீக்கிரத்தில் உன்னை மீண்டும் சந்திப்பேனென உனக்கு வாக்களிக்கிறேன்” என்றேன்.
இயேசுவின் சீடர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் “அவர்கள் கண்களுக்கு முன்பாக” ஒரு மேகம் அவரை வானத்திற்கு எடுத்துக் கொண்டது என அப்போஸ்தலர் 1ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம் (வச. 9). தங்களுடைய எஜமானன் தங்களை மறந்து விடுவாரோ என்று அவர்கள் எண்ணியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவர் சீடர்களிடம், தன்னுடைய ஆவியை அவர்களோடிருக்கும்படி அனுப்புவதாகவும், அந்த பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பெலப்படுத்தி வரப்போகின்ற உபத்திரவக் காலத்தில் அவர்களை வழி நடத்த உதவுவார் எனவும் வாக்களித்தார் (வச. 8) மேலும், நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன் (யோவா. 14:3) என்றார். ஆனாலும் அவர்கள் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்கவேண்டுமென அதிசயித்தனர். ஒரு வேளை அவர்களும், இயேசுவே, எங்களை மறந்து விடாதீர்கள்! எனச் சொல்ல விரும்பியிருப்பார்களோ?
இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருக்கும் நமக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கின்றார். அவர் எப்போது மீண்டும் வந்து நம்மையும், அவருடைய படைப்புகள் அனைத்தையும் மீட்டுக் கொள்வார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம், இது நிச்சயம் நடக்கும். அவர் நம்மை மறந்து விடவில்லை. “ஆகையால் நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெச. 5:11).

பொறுமையோடு காத்திரு
என்னுடைய மாமனாரின் எழுபத்தெட்டாம் பிறந்தநாளின் போது, அவரைக் கனப்படுத்தும்படி எங்களுடைய குடும்ப நபர்களனைவரும் வந்திருந்தனர். அப்பொழுது ஒருவர் அவரிடம், “இத்தனை ஆண்டுகளில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான காரியம் என்ன?” என்று கேட்டார். அவருடைய பதில் “பொறுமையாய் காத்திரு” என்பதே.
பொறுமையாயிரு என்ற வார்த்தையைச் சொல்வது எளிதாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய மாமனார் ஒரு குருட்டு நம்பிக்கையை அல்லது நேர் முகச் சிந்தனையைக் கொடுப்பதற்காக இதனைச் சொல்லவில்லை. அவர் கடந்த எழுபத்தெட்டு ஆண்டுகளும் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்தவர். கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாக அல்ல. கிறிஸ்து அவருடைய வாழ்வில் செய்த கிரியையின் நிமித்தமே அவர் இப்படிச் சொன்னார்.
“பொறுமையாகக் காத்திரு” என்பதையே வேதாகமம் விடாப்பிடியான முயற்சியெனக் குறிப்பிடுகின்றது. அதுவும் நம்முடைய சொந்த முயற்சியால் நடக்கக்கூடியக் காரியமல்ல. தேவன் நம்மோடிருக்கின்றார், அவர் நமக்கு பெலனளிக்கின்றார், அவர் நம்முடைய வாழ்வில் நமக்கென வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவார் என தேவன் திரும்பத் திரும்ப வாக்களித்துள்ளார். எனவே தான் நாமும் விடாப்பிடியாகக் காத்திருக்கின்றோம். இந்தச் செய்தியை ஏசாயா இஸ்ரவேலருக்குச் சொல்கின்றார்.
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10).
அப்படியானால் “பொறுமையோடு காத்திருத்தல்” என்பது எதைக் காட்டுகிறது? ஏசாயா தீர்க்கனைப்பொறுத்தமட்டில் நம்பிக்கைக்கான அடிப்படையே, தேவனுடைய குணாதிசயங்கள்தான். தேவனுடைய நன்மையானது நம்மைப் பற்றியிருக்கும் பயத்தின் பிடியை முறித்து, அப்பா பிதாவையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் பற்றிக்கொள்ளும்படி செய்கின்றது. ஒவ்வொரு நாளும் அவர் நமக்குத் தேவையான பெலனையும் உதவியையும் தருகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மைத் தாங்கி, தேவன் நமக்குத் தரும் ஆறுதலையும் வல்லமையையும் தந்து நம்மை பெலப்படுதுகிறது.
புயலுக்கு அடைக்கலம்
1763 ஆம் ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில், சோமர்செட் என்ற இடத்தில், ஒரு மலை அடிவாரத்திலுள்ள சாலை வழியே ஒரு இளம் போதகர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஏற்பட்ட கொட்டும் மழைக்கும், பயங்கர மின்னலுக்கும் தப்பும்படி ஒரு குகையினுள் அடைக்கலமானார். அங்கிருந்து சேடர் பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்து வியந்து, தனக்கு அடைக்கலமும், சமாதானமும் ஈவாகத் தந்த தேவனைக் குறித்து தியானிக்கலானார். அங்கு காத்திருந்த வேளையில், ஒரு பாடலை எழுத ஆரம்பித்தார். “பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே...’’ என்று ஆரம்பிக்கும் பாமாலை பாடலை எழுதினார்.
அகஸ்டஸ் டோப்பிளாடி இப்பாடலை எழுதிய போது, இதேப் போன்று ஒரு மலையில் மோசே பெற்ற அனுபவத்தை நினைத்திருப்பாரோ, என்னவோ நமக்குத் தெரியாது (யாத். 33:22). ஒருவேளை அப்படியும் இருந்திருக்கலாம். தேவன் மோசேக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலரை விடுவிப்பதற்கான உறுதியையளிக்கின்றார் என்பதனை யாத்திராகமத்தின் இப்பகுதி விளக்குகின்றது. மோசே தேவனிடம் அவருடைய மகிமையைக் காண்பிக்கும்படி கேட்ட போது, தேவன் கிருபையாக அவனிடம், ’’ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது” என்றார் (வச. 20). அவர் மோசேயை கன்மலையின் வெடிப்பிலே வைத்து அவருடைய கரத்தினால் மூடி, அவ்விடத்தில் கடந்து சென்றார். அவருடைய பின் பக்கத்தை மட்டும் அவன் காணும்படிச் செய்தார். தேவன் அவனோடு இருக்கின்றார் என்பதை மோசே தெரிந்துகொண்டான்.
மோசேயிடம் தேவன் சொல்லிய வார்த்தைகளை நாமும் நம்புவோம். “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” (வச. 14) என்றார். நாமும் தேவன் தரும் அடைக்கலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மோசேயும் அந்த ஆங்கிலேயப் போதகரும் சந்தித்ததைப் போன்று நாமும் நம் வாழ்வில் அநேகப் புயல்களைச் சந்திக்கலாம். நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது அவருடைய பிரசன்னம் நம்மோடிருந்து, அவருடைய சமாதானத்தால் நம்மை நிரப்பும்.

மாயக்காரரைக் குறித்து தேவன்
“என்னுடைய குழுவிலுள்ள நபர் ஒருவர் இதைச் செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன்’’ என்று ஒரு கிரிக்கெட் வீரர், 2016 ஆம் ஆண்டு நடை பெற்ற ஒரு போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்வீரர் ஒருவர் ஏமாற்றியதைக் குறித்து இப்படிச் சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே கிரிக்கெட் வீரர், இதே போன்ற மற்றொரு ஏமாற்று வேலையைச் செய்தமைக்காகப் பிடிபட்டார்.
இப்படிப்பட்ட மாய்மாலமான செயல்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன .ஆதியாகமம் 38ல் குறிப்பிடப் பட்டுள்ள யூதாவின் மாய்மாலம் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தாமாரைத் திருமணம் செய்த தனது இரு மகன்களும் மரித்த பின்பு, யூதா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்து விடுகிறான் (வச. 8-11). ஏமாற்றமடைந்த தாமார் தன்னை மறைத்து, ஒரு வேசியைப் போல முக்காடிட்டுக் கொண்டு யூதாவைச் சந்தித்து, அவனோடு சேருகின்றாள் (வச. 15-16).
ஆனால் கைம்பெண்ணான தன்னுடைய மருமகள் கர்ப்பவதியானாள் என்று கேள்வி பட்டபோது ,அவன் அவளைக் கொலை செய்யும்படி எழும்புகின்றான். “அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்கின்றான் (வச. 24). ஆனால், யூதாவே அதற்குக் காரணமானவன் என்பதற்கு அவள் சான்று வைத்திருந்தாள் (வச. 25).
அங்கு யூதா உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இரட்டை வேடத்தை ஒத்துக்கொண்டான். அவளுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றான். என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்கின்றான் (வச. 26).
யூதா மற்றும் தாமாரின் இருண்ட பகுதியை தேவன் பிணைத்து நமக்கான மீட்பின் கதையை உருவாக்குகின்றார். தாமாரின் பிள்ளைகள், இயேசுவின் முன்னோர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் (மத். 1:2-3).
ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் ஏன் வேதாகமத்தில் இடம் பெற்றது? ஒன்று, மனிதனின் திருக்குள்ள இருதயத்தைக் காட்டவும் ,மற்றொன்று தேவனின் அன்பும், கிருபையும்,கருணையும் நிறைந்த இருதயத்தைக் காட்டவுமே.
