என்னுடைய மாமனாரின் எழுபத்தெட்டாம் பிறந்தநாளின் போது, அவரைக் கனப்படுத்தும்படி எங்களுடைய குடும்ப நபர்களனைவரும் வந்திருந்தனர். அப்பொழுது ஒருவர் அவரிடம், “இத்தனை ஆண்டுகளில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான காரியம் என்ன?” என்று கேட்டார். அவருடைய பதில் “பொறுமையாய் காத்திரு” என்பதே.

பொறுமையாயிரு என்ற வார்த்தையைச் சொல்வது எளிதாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய மாமனார் ஒரு குருட்டு நம்பிக்கையை அல்லது நேர் முகச் சிந்தனையைக் கொடுப்பதற்காக இதனைச் சொல்லவில்லை. அவர் கடந்த எழுபத்தெட்டு ஆண்டுகளும் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்தவர். கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாக அல்ல. கிறிஸ்து அவருடைய வாழ்வில் செய்த கிரியையின் நிமித்தமே அவர் இப்படிச் சொன்னார்.

“பொறுமையாகக் காத்திரு” என்பதையே வேதாகமம் விடாப்பிடியான முயற்சியெனக் குறிப்பிடுகின்றது. அதுவும் நம்முடைய சொந்த முயற்சியால் நடக்கக்கூடியக் காரியமல்ல. தேவன் நம்மோடிருக்கின்றார், அவர் நமக்கு பெலனளிக்கின்றார், அவர் நம்முடைய வாழ்வில் நமக்கென வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவார் என தேவன் திரும்பத் திரும்ப வாக்களித்துள்ளார். எனவே தான் நாமும் விடாப்பிடியாகக் காத்திருக்கின்றோம். இந்தச் செய்தியை ஏசாயா இஸ்ரவேலருக்குச் சொல்கின்றார்.
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10).

அப்படியானால் “பொறுமையோடு காத்திருத்தல்” என்பது எதைக் காட்டுகிறது? ஏசாயா தீர்க்கனைப்பொறுத்தமட்டில் நம்பிக்கைக்கான அடிப்படையே, தேவனுடைய குணாதிசயங்கள்தான். தேவனுடைய நன்மையானது நம்மைப் பற்றியிருக்கும் பயத்தின் பிடியை முறித்து, அப்பா பிதாவையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் பற்றிக்கொள்ளும்படி செய்கின்றது. ஒவ்வொரு நாளும் அவர் நமக்குத் தேவையான பெலனையும் உதவியையும் தருகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மைத் தாங்கி, தேவன் நமக்குத் தரும் ஆறுதலையும் வல்லமையையும் தந்து நம்மை பெலப்படுதுகிறது.