“என்னுடைய குழுவிலுள்ள நபர் ஒருவர் இதைச் செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன்’’ என்று ஒரு கிரிக்கெட் வீரர், 2016 ஆம் ஆண்டு நடை பெற்ற ஒரு போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்வீரர் ஒருவர் ஏமாற்றியதைக் குறித்து இப்படிச் சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே கிரிக்கெட் வீரர், இதே போன்ற மற்றொரு ஏமாற்று வேலையைச் செய்தமைக்காகப் பிடிபட்டார். 

இப்படிப்பட்ட மாய்மாலமான செயல்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன .ஆதியாகமம் 38ல் குறிப்பிடப் பட்டுள்ள யூதாவின் மாய்மாலம் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தாமாரைத் திருமணம் செய்த தனது இரு மகன்களும் மரித்த பின்பு, யூதா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்து விடுகிறான் (வச. 8-11). ஏமாற்றமடைந்த தாமார் தன்னை மறைத்து, ஒரு வேசியைப் போல முக்காடிட்டுக் கொண்டு யூதாவைச் சந்தித்து, அவனோடு சேருகின்றாள் (வச. 15-16).

ஆனால் கைம்பெண்ணான தன்னுடைய மருமகள் கர்ப்பவதியானாள் என்று கேள்வி பட்டபோது ,அவன் அவளைக் கொலை செய்யும்படி எழும்புகின்றான். “அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்கின்றான் (வச. 24). ஆனால், யூதாவே அதற்குக் காரணமானவன் என்பதற்கு அவள் சான்று வைத்திருந்தாள் (வச. 25).

அங்கு யூதா உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இரட்டை வேடத்தை ஒத்துக்கொண்டான். அவளுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றான். என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்கின்றான் (வச. 26).

யூதா மற்றும் தாமாரின் இருண்ட பகுதியை தேவன் பிணைத்து நமக்கான மீட்பின் கதையை உருவாக்குகின்றார். தாமாரின் பிள்ளைகள், இயேசுவின் முன்னோர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் (மத். 1:2-3).

ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் ஏன் வேதாகமத்தில் இடம் பெற்றது? ஒன்று, மனிதனின் திருக்குள்ள இருதயத்தைக் காட்டவும் ,மற்றொன்று தேவனின் அன்பும், கிருபையும்,கருணையும் நிறைந்த இருதயத்தைக் காட்டவுமே.