வகை  |  odb

இரண்டாம் தரமல்ல

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது, அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன், உலகத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்த மனிதனாகப் பார்க்கப்பட்டார். 1919 ஆம் ஆண்டு பேரதிர்ச்சி தரும் பக்கவாதம் அவரைத் தாக்கிய போது, அவருடைய மனைவி அனைத்து அலுவல்களையும் கவனித்தார். அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை எவை என்பதைத் தீர்மானித்தார். ஒரு சிறிய காலத்திற்கு அமெரிக்க அதிபராக அவருடைய மனைவி ஈடித் வில்சன் செயல் பட்டாரென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

ஆதி திருச்சபையின் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்படிச் சொன்னால், நாம் கொடுக்கும் வரிசையில் பேதுரு, பவுல், தீமோத்தேயு போன்றோர் இடம் பெறுவர். ஏனெனில் இவர்களின் திறமைகளைக் குறித்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், ரோமர் 16ஆம் அதிகாரத்தில் பவுல் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்த, கிட்டத்தட்ட நாற்பது பேரைக் குறிப்பிடுகின்றார். அதில் பெண்கள், ஆண்கள், அடிமைகள், யூதர்கள் மற்றும் புறஜாதியினர் அடங்குவர். இவர்களனைவரும் சபை வளர்ச்சியில் வெவ்வேறு வகைகளில் பங்களித்துள்ளனர்.

இவர்களை இரண்டாம் நிலை நபர்களாக பவுல் கருதவேயில்லை. அவர் இவர்களுக்கு உயர்ந்த மரியாதையைக் கொடுக்கின்றார் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் என இவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார் (வச. 7) இவர்கள் இயேசுவுக்காக செய்த பணியினிமித்தம் போற்றப்பட வேண்டியவர்கள்.

நம்மில் அநேகர் தங்களை சபையின் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்களாகக் கருதுவதுண்டு. ஆனால், உண்மையில் ,ஒவ்வொருவரிடமும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய திறமைகளுள்ளன.தேவனுடைய பெலத்தால், நம்முடைய திறமைகளை அவருடைய நாம மகிமைக்காக நாம் பயன்படுத்துவோம்.

 

இரும்பும் பட்டும்

கவிஞர் கார்ல் சான்ட்பெர்க், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி, “மனித குலத்தின் வரலாற்றில் இரும்பின் உறுதியையும், பட்டின் மென்மையையும் ஒருங்கே பெற்ற ஒரு மனிதன், இருதயத்திலும், மனதிலும் பயங்கரமான புயலையும், சொல்லமுடியாத அமைதியையும் ஒருங்கே பெற்றிருக்கின்றார்” என்றார். விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் தன் அரச அதிகாரத்தை லின்கன் சம நிலையில் பயன் படுத்தினார் என்பதை “இரும்பும் பட்டும்” என்பதால் விளக்குகின்றார். 

சரித்திரத்தில் ஒரேயொருமனிதன் தான் வலிமையையும், மென்மையையும் மற்றும் அதிகாரத்தையும் இரக்கத்தையும் சமமாக பயன்படுத்தினார். அவர் தான் இயேசு கிறிஸ்து. யோவான் 8 ஆம் அதிகாரத்தில், மதத்தலைவர்கள் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கல்லெறிந்து கொல்லும்படி கொண்டு வந்த போது, இயேசு அவர்களிடம் வலிமையையும், மென்மையையும் காண்பித்தார். இரத்த வெறி கொண்ட ஒரு கூட்டத்தினரின் கோரிக்கையை வலிமையாக எதிர் நோக்கினார். குற்றம் கண்டு பிடிக்கும் அவர்களின் கண்களை, அவர்களுக்கு நேராகவே திருப்பினார். அவர் அந்த கூட்டத்தினரிடம், “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” (வச. 7) என்றார். பின்னர், இயேசு, தனது மென்மையான இரக்கத்தை அப்பெண்ணிடம் காட்டி, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனி பாவம் செய்யாதே” என்றார் (வச. 11).

இயேசு காட்டிய வலிமையையும், மென்மையையும் நாமும் பிறரிடம் காட்டும் போது தான், தேவன் நம்மையும் இயேசுவைப் போன்று மாற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்த முடியும். மென்மையான இரக்கத்தையும், வலிமையான நீதியையும் நாம் செயல் படுத்திக்காட்டும் போது தான் தேவனுடைய இருதயத்தை இவ்வுலகிற்கு காண்பிக்க முடியும்.

 

நாம் தேவனைத் துதிக்கும் போது

2014 ஆம் ஆண்டு ஒன்பது வயது நிரம்பிய வில்லி, அவர்களுடைய வீட்டு முற்றத்திலிருந்து கடத்தப்பட்டான். அவன் தனக்கு விருப்பமான “எல்லாத் துதியும்” என்ற சுவிசேஷகத் துதி பாடல் ஒன்றினைத் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டேயிருந்தான். அந்த மூன்று மணி நேர கடும் போராட்டத்தில், வில்லியை அமைதியாக இருக்கும்படி கடத்தல்காரர்கள் விடுத்த கட்டளையையும் பொருட்படுத்தாமல் அவன் பாடிக் கொண்டேயிருந்தான். கடைசியாக, கடத்தல்காரர்கள் வில்லியை காரைவிட்டு வெளியேற்றினர். பின்பு, வில்லி அந்த எதிர்பாராத அநுபவத்தை விளக்கிய போது, அவன் தன் பயத்தின் மத்தியிலும் விசுவாசத்தைக் கைவிடாமல் பாடியதைக் கேட்ட கடத்தல் காரர்கள் குழப்பமடைந்தனர், என்றான்.

பயங்கரச் சூழலில் வில்லி செயல்பட்ட விதம், பவுலும் சீலாவும் பகிர்ந்து கொண்ட ஓர் அநுபவத்தைப் போலுள்ளது. வாரினால் அடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பின்பு அவர்கள், “ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும் படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டன; எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று” (அப். 16:25-26).

இந்த அதிசயமான வல்லமையின் வெளிப்பாட்டைக் கண்ட சிறைச் சாலைக்காரன் பவுலும் சீலாவும் ஆராதித்த தேவனாகிய கர்த்தரை விசுவாசித்தான். அவனோடு, அவன் வீட்டாரனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (வச. 27-34) அன்று இரவு துதியின் வழியாக ஆவிக்குரிய கட்டுகளும், மாம்சக் கட்டுகளும் தெறிப்புண்டன.

பவுல், சீலா மற்றும் வில்லியின் அநுபவங்களைப் போன்று நமக்கு கண்களால் காணக்கூடிய அநுபவம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவருடைய ஜனங்களின் துதிக்கு அவர் செவி கொடுப்பார் என்பதைத் தெரிந்து கொள்வோம். அவர் அசையும் போது, சங்கிலிகள் தெறிப்புண்டு போம்.

 

உண்மை: கசப்பா? அல்லது இனிப்பா?

என்னுடைய மூக்கின் மேல்பகுதியில் அநேக மாதங்களாக ஒரு கட்டி இருந்தது. நான் மருத்துவரை அணுகினேன். அந்தப் பகுதியின் திசு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு சில நாட்களில் கிடைத்தது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தோல் புற்றுநோய். அந்த நோயை குணப்படுத்த முடியுமென்றாலும், அதனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லையென்றாலும் அந்தச் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

தேவன் எசேக்கியேலிடம் ஒரு கசப்பான மருந்தை, அதாவது புலம்பல்களும், தவிப்பும் நிறைந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகச் சுருளை விழுங்கச் சொல்கின்றார் (எசே. 2:10; 3:1-2). அவன் அதை உட்கொண்டு, வயிற்றை நிரப்பி, பின்னர் அந்த வார்த்தைகளை கடின முகமும், முரட்டாட்ட இருதயமும் (2:4) உள்ள இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசும்படி சொல்கின்றார். கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய ஒரு புத்தகச் சுருள் சாப்பிடுவதற்கு கசப்பான மருந்து போல இருக்கும் என்று தான் யாரும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் எசேக்கியேல், “அது என் வாய்க்கு தேனைப்போல் தித்திப்பாயிருந்தது” என்கின்றார் (3:3).

தேவன் தரும் எச்சரிப்பு எசேக்கியேலுக்கு இனிமையாக இருந்தது. அவருடைய கடிந்துகொள்ளுதலை அவன் வெறுப்போடு பார்க்காமல், அதனை தன் ஆன்மாவுக்கு “இனிமை”யானதாக எடுத்துக்கொண்டான். தேவன் நமக்கு அன்போடும், கருணையோடும் எச்சரிப்பைக் கொடுத்து நம்மைத் திருத்திக் கொண்டு, அவரை கனப்படுத்தி, பிரியப்படுத்தி வாழ உதவி செய்கின்றார்.

சில உண்மைகள், விழுங்குவதற்கு கசப்பான மருந்தாகத் தோன்றும். சில நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால், அவருடைய உண்மை நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். அவருடைய வார்த்தைகள் நமது நலனுக்காக கொடுக்கப்படுகின்றன. அவை நமக்கு ஞானத்தையும், பிறரை மன்னிக்க பெலனையும் தந்து ,வீண் பேச்சுகளிலிருந்து நம்மை விலக்கிக் காக்கும். சோதனையைச் சகிக்க பெலன் தரும். தேவனே, உம்முடைய ஞானம், இனிமையான ஆலோசனை என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியருளும்.

 

அமைதியான வாழ்வைத் தேடல்

“நீ பெரியவனான பின்பு என்னவாக வேண்டுமென விரும்புகின்றாய்?” இந்தக் கேள்வியை நம்மிடம், நாம் குழந்தைகளாயிருந்தபோது அல்லது வளர்ந்த பின்பு கூட கேட்டிருக்கலாம். ஆர்வ மிகுதியால் இக்கேள்வி உருவானது. இதற்கான விடை, ஒருவருடைய எதிர் கால இலட்சியத்தை வெளிப்படுத்தும். வருடங்கள் செல்லச் செல்ல என்னுடைய விடை மாறிக் கொண்டேயிருந்தது .கால் நடைகள் பராமரிப்பவரிலிருந்து டிரக் ஓட்டுனர், இராணுவ வீரர், என மாறியது. நான் கல்லூரிக்குச் சென்று மருத்துவராக வேண்டுமெனத் தீர்மானித்தேன். ஆனால், ஒருவர் கூட “ஓர் அமைதியான வாழ்வை” அடைய விரும்புகிறேனெனக் கூறியதேயில்லை.

இதைத் தான் பவுல் தெசலோனிக்கேயருக்குச் சொல்கின்றார். முதலாவது அவர், ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவும், நாடெங்குமுள்ள தேவனுடைய குடும்பத்தினரை நேசிக்கும்படியும் கூறுகின்றார் (1 தெச. 4:9-10). அவர் மேலும் ஒரு பொதுவான அறிவுரையைக் கூறுகின்றார். அது அவர்கள் கையிட்டுச்செய்கின்ற அனைத்து வேலைகளையும் குறிப்பிடுகின்றது. “நீங்கள் அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி நாடவும்” (வச. 12) என்று சொல்கின்றார். “உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும் வேண்டுமெனவும் புத்தி சொல்கின்றார்’’ (வச. 12). நாம் நம் குழந்தைகள் அடையவிரும்பும் இலட்சியங்களையும், அவர்களின் ஆவல்களையும் குறித்து ஊக்கமிழக்கச் செய்ய வேண்டாம். ஆனால் எதை அடைய விரும்பினாலும் அதை அமைதலுள்ள ஆவியோடு அடைய வேண்டுமென்பதை ஊக்கப்படுத்துவோம்.

நாம் வாழும் இன்றைய உலகில் இலட்சியத்தையும் அமைதியையும் தனித்தனியே பார்க்கமுடியாது. ஆனால் நம் வாழ்க்கையோடு தொடர்புடையதையே வேதாகமம் கூறுகின்றது. எனவே நாம் அமைதலுள்ள வாழ்க்கை வாழத்தொடங்கினால் எப்படியிருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வோம்.