என்னுடைய மூக்கின் மேல்பகுதியில் அநேக மாதங்களாக ஒரு கட்டி இருந்தது. நான் மருத்துவரை அணுகினேன். அந்தப் பகுதியின் திசு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு சில நாட்களில் கிடைத்தது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தோல் புற்றுநோய். அந்த நோயை குணப்படுத்த முடியுமென்றாலும், அதனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லையென்றாலும் அந்தச் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

தேவன் எசேக்கியேலிடம் ஒரு கசப்பான மருந்தை, அதாவது புலம்பல்களும், தவிப்பும் நிறைந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகச் சுருளை விழுங்கச் சொல்கின்றார் (எசே. 2:10; 3:1-2). அவன் அதை உட்கொண்டு, வயிற்றை நிரப்பி, பின்னர் அந்த வார்த்தைகளை கடின முகமும், முரட்டாட்ட இருதயமும் (2:4) உள்ள இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசும்படி சொல்கின்றார். கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய ஒரு புத்தகச் சுருள் சாப்பிடுவதற்கு கசப்பான மருந்து போல இருக்கும் என்று தான் யாரும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் எசேக்கியேல், “அது என் வாய்க்கு தேனைப்போல் தித்திப்பாயிருந்தது” என்கின்றார் (3:3).

தேவன் தரும் எச்சரிப்பு எசேக்கியேலுக்கு இனிமையாக இருந்தது. அவருடைய கடிந்துகொள்ளுதலை அவன் வெறுப்போடு பார்க்காமல், அதனை தன் ஆன்மாவுக்கு “இனிமை”யானதாக எடுத்துக்கொண்டான். தேவன் நமக்கு அன்போடும், கருணையோடும் எச்சரிப்பைக் கொடுத்து நம்மைத் திருத்திக் கொண்டு, அவரை கனப்படுத்தி, பிரியப்படுத்தி வாழ உதவி செய்கின்றார்.

சில உண்மைகள், விழுங்குவதற்கு கசப்பான மருந்தாகத் தோன்றும். சில நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால், அவருடைய உண்மை நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். அவருடைய வார்த்தைகள் நமது நலனுக்காக கொடுக்கப்படுகின்றன. அவை நமக்கு ஞானத்தையும், பிறரை மன்னிக்க பெலனையும் தந்து ,வீண் பேச்சுகளிலிருந்து நம்மை விலக்கிக் காக்கும். சோதனையைச் சகிக்க பெலன் தரும். தேவனே, உம்முடைய ஞானம், இனிமையான ஆலோசனை என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியருளும்.