
நீ ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை
பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, பியானோவின் அடிப்படை பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக்காட்ட, நான் பியானோவை வாசிக்கும்படி அமர்ந்தேன். சி மேஜர் இசையில் ஆரம்பித்தேன். கடந்த இருபது ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே வாசித்திருப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம்! இசை இன்னமும் என் நினைவிலிருக்கிறது, எனக்கு ஒரு தைரியமும் கிடைத்தது, நான், என் நினைவிலிருந்து, ஏழு வெவ்வேறு ஆதாரச் சுருதிகளையும், ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தேன். நானே அதிர்ந்து போனேன்! பல ஆண்டுகளின் பயிற்சி, அந்தப் பாடங்களை என்னுடைய மனதில் பதித்து விட்டது, விரல்களுக்குத் தேவையான நுட்பங்களும், என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவை உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துவிட்டன.
சில காரியங்களை, நாம் மறக்கவே முடியாது. தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பும், நம்முடைய மங்கிப் போகும் நினைவைப் போல் அல்லாமல், அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மையில் தேவன் ,நம்மை மறப்பவரல்ல. ஆனால், புறதேசத்திற்கு சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள், கர்த்தர் நம்மைக் கைவிட்டார், ஆண்டவர் நம்மை மறந்தார் என்று சொல்கின்றார்கள், (ஏசாயா49:14). ஏசாயா தீர்க்கன் மூலமாக தெளிவாக கூறவிரும்புகிறார். “ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (வ.15) என்று உறுதியாகக் கூறுகின்றார்.
தேவன் தன்னுடைய மாறாத அன்பை, அவர்கள் அறிந்து கொள்ளும்படியும் தன்னுடைய பிள்ளைகளின் மீது அவர் கொண்டுள்ள கரிசனையை, அவர்கள் தெரிந்து கொள்ளும் படியும், “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,” (வ.16) என்கின்றார். இது, அவருடைய பிள்ளைகளின் மீது அவர் எத்தனை விழிப்பாயிருக்கின்றார் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய முகங்களும், பெயர்களும் எப்பொழுதும் அவருக்கு முன்பாக நிற்கின்றன.
இன்றும் கூட, நாம் தேவன் நம்மை மறந்து விட்டார், கைவிட்டு விட்டார் என்று எளிதில் கூறிவிடுகின்றோம். ஆனால் நம்மை அவர் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலாயிருக்கின்றது. இப்பொழுதும் நம்முடைய தந்தை நம்மை மறக்கவில்லை, நம்மைப் பாதுகாக்கின்றார், நம் மீது அன்பு செலுத்துகின்றார் என்பதை மறவாதே.

அவருடைய வார்த்தையால் வழி நடத்தப்படுதல்
பால் ஆர்னால்ட் லண்டன் பிபிசி (BBC) வானொலி நிலையத்தில், முதன் முறையாகச் சேர்ந்த போது, அவருடைய முதல் வேலை, ரேடியோ நாடகங்கள் ஒலி பரப்பப் படும் போது, “நடக்கும் ஒலியை” ஏற்படுத்துவதாகும். நடிகர்கள் நடப்பது போன்ற காட்சிகள் வரும் போது, அவர்கள் தங்களுடைய வசனங்களை வாசிக்கும் போது, மேடை மேலாளரான பால், அதற்குத் தகுந்த, நடக்கும் ஒலியைத் தன்னுடைய பாதங்களைக் கொண்டு ஏற்படுத்துவார். நடிகரின் பேச்சுக்கும், வாசிக்கும் வரிகளுக்கும் ஏற்றாற் போல், தன்னுடைய ஒலியைக் கொடுப்பார். இதிலுள்ள சவால் என்னவெனின், அந்த கதையில் வரும் நடிகனோடு ஒத்துப் போக வேண்டும், எனவே, “நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்வோம்” என்றார்.
இத்தகைய ஒரு தெய்வீக ஒன்றிணைப்பைப் பற்றி சங்கீதக்காரன் சங்கீதம் 119ல் கூறுவதைக் காண்கின்றோம். இது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றாற் போல் ஒத்து வாழ்தலை வலியுறுத்துகின்றது. “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் என சங்கீதம் 119:1 கூறுகின்றது. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழி நடக்கும் போது, நாம் நம்முடைய வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.(வ.9) நமக்குள்ளே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளாமலும் (வச. 23), பொருளாசைக்குத் தப்பிக்கொள்ளவும் (வச. 36), பாவத்திற்கு எதிர்த்து நிற்கவும் (வச. 61), தேவனுக்கு பயப்படுகின்ற நண்பர்களைப் பெற்றுக்கொள்ளவும் (வ.63), மகிழ்ச்சியோடு வாழவும் (வச. 111) முடியும்.
வேத அறிஞர் சார்ல்ஸ் பிரிட்ஜஸ் வசனம் 133 ஐக் குறித்து விளக்கம் அளிக்கும் போது, “நான், இவ்வுலகில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், இது தேவனுடைய வார்த்தையின் படி உள்ளதா, நான் கிறிஸ்துவை மாதிரியாகக் காட்டுகின்றேனா?” என்பதாகக் கேட்கும்படி கூறுகிறார்.
இவ்வாறு நாம் நடக்கும் போது, இவ்வுலகிற்கு நாம் இயேசுவைக் காட்டுகிறோம். நாம் அவரோடு நெருங்கி நடக்கும் போது, நம்மைக் காண்கின்ற மக்கள், நம்மில் தலைவராக, நண்பராக, இரட்சகராக, இயேசுவைக் காண தேவன் நமக்கு உதவுவாராக.

மிகப் பெரிய கலைப்பும், மாற்றமும்
ராபர்ட் கோல்ஸ் எழுதிய, த கால் ஆஃப் சர்விஸ்(The Call of Service) என்ற புத்தகத்தில், சேவை செய்வதற்கான காரணங்களை ஆராயும் போது, ஒரு வயதான பெண்ணின் சேவையைப் பற்றி கூறுகின்றார். அவள் ஒரு பள்ளி பேருந்து ஓட்டுநர். ஒவ்வொரு நாளும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, அவள் அதிக கவனம் செலுத்துவாள், வீட்டுப் பாடத்தில், கேள்விகளைக் கேட்பாள், அவர்களுடைய வெற்றியைக் கொண்டாடுவாள், “இக்குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதை நான் காணவேண்டும்” என்று தன்னுடைய நோக்கத்தை வெளிப்படுத்துவாள். இதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது.
இவள் வாலிப்பெண்ணாக இருந்த போது, இவளுடைய அத்தையின் வார்த்தைகள், இவளுடைய உள்ளத்தைத் தொட்டிருக்கின்றது. “நம் தேவன் நம்மைப் பார்க்கும் படியாக, நாம் ஏதாவது செய்யவேண்டும், இல்லையென்றால், மிகப் பெரிய கலைப்பின் போது, நாம் காணாமல் போய் விடுவோம்” என்பதாக அவளுடைய அத்தை கூறியிருக்கின்றாள். நியாயத்தீர்ப்பின் நாளில் நடைபெறும் மிகப் பெரிய மாற்றத்திற்குப் பின், நாம் நரகத்தில் தள்ளுண்டு போய் விடக்கூடாது என்பதற்காக இப்பெண், “தேவனுடைய கவனத்தைப் ஈர்ப்பதற்காக” சில காரியங்களை நியமித்து வைத்துள்ளாள், ஆலயத்திற்குச் செல்லவேண்டும், அப்படியானால் “நான் உண்மையுள்ளவளாயிருக்கிறேன்” என்பதை தேவன் பார்ப்பார் என்றும், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு நான் கடினமாக உழைத்தால், “நான் செய்வதைக் குறித்து, மற்றவர்கள் கூறுவதை தேவன் கேட்பார்” என்றும் நினைத்திருக்கின்றாள்.
நான், அவள் செய்யும் வேலையைக் குறித்து வாசித்து, கவலையுற்றேன். தேவன் நம்மை கவனித்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை இவள், எப்படி அறியாதிருக்கிறாள்? (மத். 10:30). அந்த மிகப் பெரிய குழப்பத்தின் நாளில், நியாயத்தீர்ப்பிலிருந்து நமக்கு விடுதலை தந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்வார் என்பதை இவள் எப்படி அறியாமல் இருக்கிறாள்? (ரோம. 8:1). நம்முடைய நற்கிரியைகளினால் நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை இவள் எப்படித் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றாள்? இரட்சிப்பு என்பது விசுவாசிக்கிறவர்களுக்கு தேவனால் அருளப்படுகின்ற ஈவு (எபே. 2:8-9).
இயேசுவின் வாழ்வும், மரணமும், உயிர்த்தெழுதலும், நாம் தேவனோடு வாழப்போகின்ற எதிர் காலத்தை நமக்குத் தருகின்றது, நாம் விடுதலையோடு பிறருக்குச் சேவை செய்து மகிழ்ந்திருப்போம்.

கொடுப்பதில் வளருதல்
“நான் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்” என்று என்னுடைய இரண்டு வயது பேரன், மகிழ்ச்சியில் கத்திக் கொண்டே, என்னுடைய கரங்களில் ஒரு பெட்டியைத் திணித்தான். “அவனே அதைப் தெரிந்தெடுத்தான்” என்று என்னுடைய மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அந்தப் பெட்டியைப் பிரித்த போது, அங்கு அவனுக்குப் பிடித்தமான கார்டூன் அங்கத்தினரின் உருவம், கிறிஸ்மஸ் பரிசாக வைக்கப்பட்டிருந்தது. “நான் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான். பின்னர் அவன் அந்த, “என்னுடைய” பரிசை வைத்து அந்த நாள் முழுவதும் விளையாடினான், நான் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டேன்.
கடந்த காலங்களில், நான் விரும்பியவர்களுக்குக் கொடுத்த பரிசுகளை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, என்னுடைய மூத்த சகோதரனுக்கு இசை ஆல்பம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன், அதைக் கேட்பது எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னும் தாராளமாகக் கொடுக்கும்படி, தேவன் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்று நினைத்துப் பார்த்தேன்.
கொடுப்பது என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. “மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்மக் காரியத்திலும் பெருகவேண்டும்” என்று பவுல் எழுதுகின்றார்
(2 கொரி. 8:7). நம்மிடம் இருப்பவையெல்லாம் தேவன் தந்தவை என்று எண்ணி, நாம் கொடுக்கும் போது கிருபை பெருகும். ஏனெனில், “வாங்குகிறதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே பாக்கியம்” என்று இயேசு கூறியிருக்கிறாரே. (அப். 20:35).
தேவன் மிகச் சிறந்த தன்னலமற்ற ஈவை, நமக்காகத் தந்துள்ளார். தன்னுடைய ஒரேகுமாரனை, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்து, பின்னர் அவரை உயிரோடு எழுப்பினார். இந்த விலையேறப்பெற்ற ஈவைப் பெற்றுக்கொண்டவர்கள், அளவற்ற செல்வத்தைப் பெற்றுக் கொண்டவர்கள். நம்முடைய இருதயம் தேவனுக்கு நேராகத் திருப்பப்படும் போது, நம்முடைய கரங்கள் அன்போடு மற்றவர்களுக்குக் கொடுக்கும்.
