“விபத்துகள் மரணத்தைக் கொண்டுவரும் போது, அல்லது காயங்களை ஏற்படுத்தும் போது, கிருபையைக் காட்டவும் அல்லது பழிவாங்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது, ஆனால் நான் கிருபையைக் காட்ட விரும்புகின்றேன்” என்றார், சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர். போதகர் எரிக் ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் மனைவி, ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டாள். மிகவும் களைப்படைந்தவராய் வீடு திரும்பிய ஒரு தீயணைப்பு வீரர், வாகனத்தை ஓட்டிய போது உறங்கி விட்டதால், இந்த விபத்து ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் சட்டப்படி, அவருக்கு மிக அதிகமான சிறைத்தண்டனையை வழங்கலாமா என போதகரைக் கேட்டனர். அந்த போதகரோ, தான் அதிகமாகப் பிரசங்கித்துவரும் மன்னிப்பை, அவருக்கு வழங்க தீர்மானித்தார். அதிலிருந்து, ஆச்சரியப்படும்படியாக, அந்த இருவரும் நண்பர்களாயினர்.

போதகர் எரிக், தன்னுடைய பாவங்கள் யாவற்றையும் மன்னித்த தேவனிடமிருந்து, தான் பெற்ற கிருபையை, பிறருக்கு வழங்கி, வாழ்ந்து காட்டினார். அவருடைய செயலின் மூலம், தீர்க்கதரிசி மீகாவின் வார்த்தைகளைப் பிரதிபலித்தார். மீகா, நம்முடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவனைப் போற்றுகிறார். (மீகா 7:18) தேவன் தன்னுடைய ஜனங்களின் பாவங்களை எவ்வளவு தூரம் மன்னிக்கிறார் என்பதை, மீகா தீர்க்கதரிசி, பார்க்கக் கூடிய அடையாளங்களால் காட்டுகின்றார். தேவன் “நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்” (வ.19) என்கின்றார். அந்த தீ அணைப்பாளர், அன்றைய தினம், விடுதலையை ஈவாகப் பெற்றார், அது அவரைத் தேவனிடம் கொண்டு வந்தது.

 நாம் எவ்வகையான துன்பங்களைச் சகித்தாலும், தேவன் அன்போடு, தம்முடைய  கரங்களை விரித்தபடி, தம்முடைய பாதுகாப்பிற்குள் அரவணைக்கும் படி, நம்மை வரவேற்கிறார். “அவர் கிருபை செய்ய விரும்புகிறார்” (வ.18). போதகர் எரிக் செய்ததைப்  போல, அவருடைய கிருபையையும், அன்பையும் நாம் பெறும் போது, நம்மைக் காயப்படுத்தினவர்களையும் மன்னிக்க பெலன் தருகின்றார்.