வர்ணம் பூசப்பட்ட அந்த ஆமை, ஒவ்வொரு முறையும் குளிர் காலம் வருவதை அறிந்ததும், தான் வசிக்கும் குளத்தின் அடிப்பக்கத்திற்குச் சென்று, சகதி நிரம்பிய பகுதியில் தன்னைப் புதைத்துக் கொள்ளும். தன்னுடைய உடல் முழுவதையும் ஓட்டிற்குள் அடக்கி, அமைதியாகிவிடும், அதனுடைய இருதயத் துடிப்பு குறைந்து, ஏறத்தாள நின்றுவிடும் நிலையை அடையும். அதன் உடல் வெப்பநிலையும் குறை ந்து, உறைதலுக்கு சற்று மேலே நிற்கும். அது மூச்சு எடுப்பதையும் நிறுத்திக்கொண்டு, காத்திருக்கும். ஆறு மாதங்கள், தன்னை புதைத்துக் கொண்டிருக்கும் நாட்களில், அதன் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு அதன் இரத்தத்தோடு கலக்கும், எனவே அதன் உருவமும் மெதுவாக குலைய ஆரம்பிக்கும்.

குளத்தின் நீர் உருக ஆரம்பித்ததும், அது மிதந்து மேலே வந்து, மீண்டும் சுவாசிக்க ஆரம்பிக்கும். அதன் ஓடு, சூரிய கதிர் வீச்சின் வெப்பத்தை உணர ஆரம்பித்ததும், அதன் எலும்புகள் மீண்டும் புதிப்பிக்கப்படும்.

சங்கீதக்காரன் தரும், தேவனுக்குக் காத்திருத்தல் என்பதற்கான விளக்கத்தை நான் வாசிக்கும் போது, இந்த வர்ணம் பூசப்பட்ட ஆமையின் கதை என் நினைவில் வந்தது.  ஓர் “உளையான சேறு” நிரம்பிய “பயங்கரமான குழியில்” இருக்கின்ற சங்கீதக்காரனின் கூப்பிடுதலை தேவன் கேட்கின்றார் (சங். 40:2). தேவன் அவரை வெளியே தூக்கி எடுத்து, அவனுடைய கால்கள் உறுதியாக நிற்கும் படி, ஒரு இடத்தையும் காட்டினார். எனவே, அவன், ”தேவரீர் என் துணையும், என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” என்று பாடுகின்றான் (வ.17).

ஒருவேளை நீயும், ஏதோ ஒரு காரியத்தின் மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கலாம், உன்னுடைய வேலையில் ஒரு புதிய திருப்பம், முறி ந்த உறவைப் புதிப்பித்தல், ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட தேவையான மனவலிமை அல்லது ஒரு மோசமான சூழலிலிருந்து விடுதலை போன்று ஏதோ ஒன்றிற்காக காத்துக் கொண்டிருக்கலாம். அந்த வண்ணம் பூசப்பட்ட ஆமையும், சங்கீதக்காரனும், நாம் தேவன் பேரில் நம்பிக்கையோடிருக்குமாறு நினைவு படுத்துகின்றனர். தேவன் கேட்கின்றார், அவர் நம்மை விடுவிப்பார்.