“பகை, தானிருக்கின்ற பாத்திரத்தை அரித்து விடும்” என்றார் முன்னாள், சட்ட மன்ற மேலவை உறுப்பினரான ஆலன் சிம்ஸ்சன். ஜியார்ஜ் புஷ்ஷின் அடக்கத்தின் போது, அவர், தன்னுடைய நண்பனின் அன்பினை நினைவு கூர்ந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாற்பத்தி ஒன்றாம் ஜனாதிபதியான புஷ், தன்னுடைய தலைமைத்துவ பணியிலும், தனிப்பட்ட உறவுகளிலும் எந்த பகைமையையும் மனதில் வைத்துக் கொள்ளவேயில்லை, மாறாக நகைச்சுவையையும், அன்பையும் அணைத்துக் கொண்டார், என்றார்.

இந்த சட்ட மன்ற உறுப்பினரின் கருத்தை நானும் ஒத்துக் கொள்கின்றேன். உனக்கும் அப்படித்தானே? நான் பகையை எனக்குள் அடக்கிவைத்த போது, அது எவ்வளவு பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியது!

நாம் கோபத்தை அடக்கி வைத்தாலோ, அல்லது அதனைத் திடீரென வெளிப்படுத்தினாலோ, நமது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இருதயம் வேகமாகத் துடிக்கிறது, நம்முடைய ஆவி தொய்ந்து போகிறது, நம்முடைய பாத்திரம் அரிக்கப்படுகின்றது.

“பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்” என சாலமோன் ராஜா, நீதிமொழிகள் 10:12 ல் கூறுகின்றார். பகையினால் வரும் மோதல்கள், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த போட்டியாளர்களிடையே, இரத்தம் சிந்தும் அளவிற்கு சண்டைகளைக் கொண்டு வருகின்றது. இந்தப் பகை, பழிவாங்கும் எண்ணத்தைத் தூண்டிவிட்டு, ஒருவரையொருவர் இகழ்ந்து பேச வைக்கின்றதேயல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்காது.

மாறாக, தேவனுடைய அன்பு, எல்லாத் தவறுகளையும் மூடுகிறது, ஒரு திரையினால் மறைக்கிறது, மன்னிக்கிறது. அதற்காக நம் தவறுகளை கவனிக்கக் கூடாது என்பதாகவோ  அல்லது தவறு செய்பவருக்குத் துணை செய்வதாகவோ அல்ல. ஒருவர் தான் செய்த தவறை உணர் ந்து, உண்மையாய் மனம் வருந்தும் போது, நாம் அந்த தவறை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர், அதற்காக மனம் வருந்தவில்லையெனின், நம்முடைய உணர்வுகளை தேவனிடம் கொடுத்து விடுவோம். நம்மை அதிகமாக அன்பு செய்கிறவரை அறிந்திருக்கின்ற நாம், ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருப்போம், அன்பு திரளான பாவங்களை மூடும். (1 பேதுரு 4:8)