வான்கோழிகளிடம் கற்றுக்கொண்டது
கூட்டமாக சுற்றும் வான்கோழிகளை என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? அவைகள் "ராஃப்ட்டர்" என்று அழைக்கப்படும்.
ஏன் வான்கோழிகளை குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா ? கடந்த வாரம் எனது விடுமுறையை ஒரு மலை கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் களித்தேன். அந்த வீட்டின் முற்றத்தில் அனுதினமும் உலாவி கொண்டிருந்த வான்கோழிகளை கண்டுகளித்து வந்தேன்.
இதற்கு முன்பதாக வான்கோழிகளை நான் கவனித்தது இல்லை. அவைகள் அந்த முற்றத்தில் கூட்டமாக உலவிக் கொண்டிருக்கும் போது, தங்கள் கால்களால் வேகமாய் மண்ணை தோண்டி அதை கொத்தி கொண்டிருந்தது. அந்த புற்களை பார்க்கும்போது அதில் உணவு ஏதும் இருந்தது போல் தெரியவில்லை. இருப்பினும் அவைகள் மிகவும் ஆர்வமாய் கொத்திக் கொண்டிருந்தன. அந்த கோழிகளை பார்க்கும்போதும் மிகவும் ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது.
அந்த போஷாக்கு நிறைந்த கோழிகளை பார்க்கும்போது இயேசு சொன்ன வார்த்தை ஒன்று எனது நியாபகத்திற்கு வந்தது "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? " (மத். 6:26). தேவன் அந்த பறவைகளைக் கொண்டு அவர் நமக்கு வைத்திருக்கும் அன்பை நினைவுபடுத்துகிறார். அந்த பறவைகளின் வாழ்க்கை தமக்கு முக்கியமென்றால் நம் வாழ்க்கை அவருக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கும்?. அதினால் நமது அனுதின தேவைகளை குறித்து நாம் கவலைப்படாமல் அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதலாவது தேடும்படி அழைக்கிறார் (வச. 33). இதன் மூலமாக அவர் நமக்காக வைத்திருக்கும் காரியங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். அந்த சிறிய வான்கோழிகளை அவர் பார்த்துக் கொள்வார் என்றால், நம்மை நிச்சயமாக பார்த்துக்கொள்வார்.

உமக்குள்ளாக எனக்கு இடம்
முதிர்வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கடின இருதயமுள்ளவர். ஒரு நாள் அவர் நண்பர் அவர் மேல் அக்கறை கொண்டு அவருடைய ஆவிக்குரிய நம்பிக்கையை குறித்து விசாரித்தார். வெறுப்புடன் "அந்த தேவனுக்கு என்னை போல் ஒருவனுக்கு இடம் இருக்காது" என்று சலிப்புடன் கூறினார்.
ஆனால் தேவனோ கடின இருதயம் உள்ளவர்களுக்கும், குற்ற இருதயம் உள்ளவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இடம் ஒதுக்கி அவர் சமூகத்துக்குள் வந்து சேர்ந்து செழிக்கும் படி அழைக்கிறார். இயேசு தம் சீடர்களை தேர்ந்தெடுக்கும் போது இதை நாம் பார்க்கிறோம். எருசலேம் மக்களால் ஒதுக்கப்பட்ட கலிலேய மீனவர்களை தெரிந்தெடுத்தார், ஏழைகளிடம் இருந்து வரி வசூலித்த மத்தேயுவை தெரிந்தெடுத்தார். ரோம அரசாங்கத்தை எதிர்த்து அமைக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்த சீமோனை தெரிந்தெடுத்தார்.
சீமோனை நாம் தனிப்பட்ட முறையில் அறியவில்லை என்றாலும், ரோமருக்கு எதிரான இயக்கத்தில் இருந்தபடியால், இஸ்ரவேலராய் இருந்தும் ரோமர்களுடன் ஆலோசனை செய்து தம் சொந்த மக்களிடமே வரி வசூலித்து வந்த மத்தேயு போன்ற தேசத்துரோகிகளை அவர்கள் பகைத்தார்கள். . இருப்பினும் இயேசு சீமோனையும், மத்தேயுவையும் அழைத்து அவர்களை தம்மோடு சேர்த்துக் கொண்டார்.
நாம் யாரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கக்கூடாது. இயேசு அவர் வார்த்தைகளில் "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்" (லுக் 5:32). நம்மைப்போல் கடின இருதயமுள்ளவர்களுக்கு அவரிடம் அதிகமாகவே இடம் இருக்கிறது.

தாராளமாய் கொடுக்கும் இருதயம்
விக்கியூடைய இருசக்கர வாகனம் சரிபார்க்க முடியாத அளவிற்கு பழுதாகிவிட்டது. அவள் தன்னுடைய புது வாகனத்திற்கு சிறுக சிறுக சேமிக்க தொடங்கினாள். விக்கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு அடிக்கடி கிறிஸ் வருவது உண்டு. ஒரு நாள் அவள் வாகனம் வாங்கும்படி பணம் சேமித்து கொண்டிருந்ததை கேள்வி பட்டார் கிறிஸ். ஏதாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று அவர் உணர்ந்தார். அதே சமயத்தில் அவருடைய மகன் தனது வாகனத்தை விற்கும்படி முடிவெடுத்தான். உடனே கிறிஸ் அதை விலைக்கு வாங்கி, அதை பழுது பார்த்து, சாவியை விக்கி கையில் கொடுத்தார். அது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "யார் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யக்கூடும் " என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுக்க வேண்டும் என்று வசனம் நம்மை அழைக்கிறது. பவுல் தீமோத்தேயுக்கு சொன்னது போல் "நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்," (I தீமோத்தேயு 6:18). பேச்சுக்காக நன்மை செய்கிறவர்களாய் காணப்படுவதற்கு அல்ல, சந்தோஷத்துடன் கொடுக்கும் ஆவியுள்ளவர்களாய்இருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். தாராள மனதுள்ளவர்களாய் நம் இருதயம் காணப்பட வேண்டும் - "கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,"
(வசா. 18)
திறந்த இருதயம் கொண்டு, தாராளமாய் கொடுப்பதினால் நமக்கு தேவையானது இல்லாமல் போய்விடுமோ என்கிற கவலை நமக்கு வேண்டாம். நாம் அன்போடு தாராள மனதுள்ளவர்களாய் இருப்பதினால், நித்திய ஜீவனை பற்றிக்கொள்கிறோம் என்று வேதம் கூறுகிறது. தேவனுக்குள் உண்மையாய் வாழ்வதின் அர்த்தம், நமக்கு இருக்கும் காரியத்தை சார்ந்து இருக்காமல் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுப்பதே.

சமாதானம் பண்ணுகிறவர்கள்
முதலாம் உலக போர் வெடித்தபோது,பிரிட்டிஷ் ஆட்சி நிபுணர் சர். எட்வர்ட் க்ரெய் கூறியது என்னவென்றால் "யுரோப்பிலே உள்ள விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன, இனி அவை பிரகாசிப்பதில்லை". க்ரெய் சொன்னது சரிதான். கடைசி போர் முடிந்த பிறகு சுமார் இரண்டு கோடி உயிர்கள் பறிக்கப்பட்டது, அதில் ஒரு கோடி மக்கள் பொது ஜனங்கள். மீதி இருக்கும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காயத்துடன் உயிர் பிழைத்தார்கள்.
நம் வாழ்க்கையிலும் பேரழிவுகள் ஏற்படலாம். நம் வீடு, வேலை ஸ்தலம், சபை, நம் வசிக்கும் பகுதிகள் இதைபோல் இருள் நிறைந்து மூடப்படலாம். இதற்காகவே தேவன் உங்களையும் என்னையும் அதன் நடுவில் வைத்து மாற்றம் உண்டு பண்ணும்படி அழைக்கிறார். அவர் தரும் ஞானமானது அந்த மாற்றத்தை ஏற்படுத்த மிகவும் அவசியமானது. இதைக்குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது"
"நீதி" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் "நேராக நடப்பது" அல்லது "உறவுகளை சரியாக கைக்கொள்ளுவது". சமாதானம் பண்ணுகிறவர்கள் தனித்துவமானவர்கள். அவர்களுடைய அறுவடையான கனியும் சமாதானமாய் இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் உடைக்கப்பட்ட உறவுகளை மீட்டுக் கொள்ளுகிறார்கள். இயேசு சொன்னது போல் " சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத் 5:9)". அவர் ஞானத்தில் சார்ந்திருக்கும் அவர் பிள்ளைகள், அவருடைய சமாதான கருவியாக தேவைப்படும் இடத்தில் வைக்கப்படுகிறார்கள்.

மோதல்களிடம் இருந்து விலகுவது
பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லறையில் அவருடைய அறிவியல் சொற்பொழிவுகள் ஒன்றையும் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக தனது நண்பரான ஹென்ரிக் லாரன்சினுடைய "மாறாத அன்பு" என்பதை அவர் கல்லறையின் கல்வெட்டில் எழுதினார்கள். அவருடைய சாந்த குணமும், அவர் மற்றவர்களிடம் சமமாக பழகும் விதத்தையும் இது நினைவூட்டுகிறது. ஐன்ஸ்டீன் அவரைக்குறித்து "அனைவர்க்கும் ஹென்ரிக் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார், தன்னை மேம்படுத்தும்படி ஏதும் செய்யாமல், தம்மால் முடிந்தவறை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க பார்த்தார்.
நோபெல் பரிசை வென்ற ஹென்ரிக் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மற்ற விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து, அரசியல் பாரபட்சம் காணாமல் முதலாம் உலக போர் காலத்தில் வேலை செய்தார். உலக போர் முடிந்த பிறகும் அவர் தம்மை மற்ற விஞ்ஞானிகளுடன் சமரசப்படுத்தி, வேற்றுமையை அகற்றி விஞ்ஞானத்தில் முற்றிலும் தம்மை அர்ப்பணித்தார் என்று ஐன்ஸ்டீன் அவருக்கு சாட்சி கொடுத்திருக்கிறார்.
சபையிலும் நாம் அனைவரும் வேற்றுமை அகற்றி ஒரே மனதாய் சமரசப்படுத்துவது அனைவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வருவது உண்மை தான், எனினும் நம்மால் முடிந்த வரை சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும். "சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;" (வச. 26). ஒன்றிணைந்து வாழுவதற்கு "கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்." (வச. 29)
இறுதியில் பவுல் "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (வ 31,32). தேவ சபையை கட்டுவதற்கு நம்மாலே கூடுமான அளவு சர்ச்சைகளை தவிர்த்து விலகியிருப்பது மிகவும் உதவியாக இருக்கும். அதன் மூலம் நாம் தேவனை மகிமை படுத்துகிறோம்.