தத்தெடுக்கும் அழகு
“த பிளைன்ட் சைட்” என்று 2009 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமானது, மைக்கேல் ஓஹெர் என்பவரின் நிஜக்கதை. ஒரு குடும்பம் அவனுக்கு ஆதரவு தந்து, கற்றுக்கொள்ளுதலில் அவனுக்கு இருந்த குறைபாட்டை மேற்கொள்ளச் செய்து, அமெரிக்க கால்பந்து விளையாட்டில் சிறந்தவனாய் மாற்றுகிறது. அதில் ஒரு காட்சியில், அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்த மைக்கேலைப் பார்த்து, அவனை தத்தெடுத்துக்கொள்வதைக் குறித்து அவனிடத்தில் கேட்கிறார்கள். மைக்கேல் அவர்களைப் பார்த்து, நான் ஏற்கனவே குடும்பத்தின் அங்கத்தினராகவே இருப்பதாக மிக இனிமையாகவும் மென்மையாகவும் பதிலளிக்கிறான்.
இது ஒரு அழகான தருணம். தத்தெடுப்பது ஓர் அழகான விஷயம். அன்பு விரிவடைந்து, குடும்பம் ஒரு புது நபருக்கு தன் இரண்டு கரங்களையும் விரிக்கிறது. மைக்கேலின் வாழ்க்கை மாறியதுபோல, தத்தெடுத்தல் வாழ்க்கையை மாற்றுகிறது.
விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் “தேவனுடைய பிள்ளைகளாய்” மாற்றப்படுகின்றனர் (கலா. 3:26). நாம் தேவனால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாற்றப்படுகிறோம் (4:5). தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாய் அவருடைய குமாரனுடைய ஆவியைப் பெற்று தேவனை “அப்பா” என்று அழைக்கவும் (வச. 6), அவருடைய சுதந்திரனாயும் (வச. 7), கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரமாயும் (ரோமர் 8:17) மாற்றப்பட்டுள்ளோம். நாம் அவருடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினராய் மாற்றப்படுகிறோம்.
மைக்கேல் ஓஹெரின் தத்தெடுப்பு அவனுடைய வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும், அவனுடைய எதிர்காலத்தையும் மாற்றியது. தேவனால் தத்தெடுக்கப்பட்ட நாம் எவ்வளவு மேன்மையானவர்கள்! அவரை தகப்பனாய் அறிந்ததினால் நம் வாழ்க்கை மாறுகிறது. அவருக்கு சொந்தமானதினால் நம் அங்கீகாரம் மாறுகிறது. மகிமையான நித்திய மாட்சிமை வாக்களிக்கப்பட்டதினால் நம் எதிர்காலமும் மாற்றப்படுகிறது.

யாருக்கு உன் ஆதரவு தேவை?
கிளிஃபோர்டு வில்லியம்ஸ்_க்கு தான் செய்யாத ஒரு கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு விரோதமான குற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருடைய ஒவ்வொரு மனுவும் தொடர்ந்து 42 ஆண்டுகளாய் நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. பின்பு ஒரு நாள், அட்டார்னி ஷெல்லி திபோதியு அவருடைய வழக்கைக் குறித்துக் கேள்விப்பட்டார். வில்லியம்ஸை குற்றவாளி என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்லாது, இன்னொரு மனிதன் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். தன் 76ஆம் வயதில் வில்லியம்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.
தீர்க்கதரிசிகளான எரேமியாவும் உரியாவும் இக்கட்டான சூழலில் இருந்தார்கள். மனந்திரும்பவில்லை என்றால் தேவன் நியாயந்தீர்க்கப்போவதாக யூதேயர்களுக்கு இவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர் (எரே. 26:12-13, 20). இந்தச் செய்தியைக் கேட்ட யூதேய மக்களும் தலைவர்களும் கோபங்கொண்டு இவர்களை கொலைச் செய்ய துணிந்தனர். எகிப்திற்கு ஓடிப்போன உரியாவைக் கொண்டுவந்து, வெட்டிப்போட்டனர் (வச.23). ஏன் எரேயமியாவைக் கொல்லவில்லை? ஏனென்றால், அகீக்காம் “அவனுக்குச் சகாயமாயிருந்தான்;.” ஆகையால் அவன் கொலை செய்யப்படும்பொருட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை (வச. 24).
இதுபோன்று மரணத்தைச் சந்திக்கும் நபரை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நம் உதவி தேவைப்படும் யாரோ ஒருவரை நமக்குத் தெரியும். யாருடைய உரிமை மிதிக்கப்படுகிறது? யாருடைய திறமை ஒதுக்கப்படுகிறது? யாருடைய சத்தம் கேட்கப்படுவதில்லை? திபோதியு அல்லது அகீக்காம் போன்று துணிச்சலான அடியெடுத்து வைப்பது எளிதல்ல. ஆனால் அதுவே சரியானது. கர்த்தருடைய வழிநடத்துதலோடு யாருடைய சார்பில் நாம் நிற்கவேண்டியுள்ளது?
கிறிஸ்துவில் விலையேறப்பெற்ற வாழ்வு
தொலைந்த என் நிச்சயதார்த்த மோதிரத்தை, கண்களில் நீர்வழிய கண்மூடித்தனமாய் தேடினேன். மெத்தைகளை புரட்டிப்பார்த்து, இங்கும் அங்கும் எல்லா மூலைகளிலும் தேடிய என்னுடைய கணவர் ஆலன், “பரவாயில்லை, நாம் வேறொன்றை வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.
“நன்றி,” என்று சொன்னேன். “ஆனால் அதின் விலைமதிப்பைத் தாண்டி, அதில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பு இருக்கிறது.” அதை மற்றொன்றைக்கொண்டு ஈடுசெய்யமுடியாது. அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்தேன். “தேவனே, தயவுசெய்து அதை கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்யும்.”
ஒருசில நாட்களுக்குபின், அந்த விலைமதிப்பற்ற மோதிரத்தை என்னுடைய ஸ்வெட்டர் ஒன்றின் பாக்கெட்டில் கண்டெடுத்தேன். “நன்றி இயேசுவே” என்று மகிழ்ச்சியடைந்தேன். நானும் எனது கணவரும் மகிழ்ச்சியடைந்த தருணத்தில், வேதாகமத்தில் வெள்ளி நாணயத்தை தொலைத்த ஸ்திரீயைக் குறித்த உவமை எனக்கு நினைவுக்கு வந்தது (லூக்கா 15:8-10). தொலைந்த வெள்ளி நாணயத்தைத் தேடிய ஸ்திரீயைப் போல, தொலைந்த மோதிரத்தின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது. எங்களுடைய விலைமதிப்புள்ள ஒன்றைத் தேடும் எங்களின் முயற்சி தவறல்ல. இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தி, தான் சிருஷ்டித்த ஒவ்வொரு நபரையும் இரட்சிக்கும் அவரது ஆவலை வெளிப்படுத்துகிறார். ஒரு பாவியின் மனந்திரும்புதலினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாகிறது.
தொலைந்துபோன பொருளைத் தேடுவதுபோன்று, மற்றவர்களுக்காக வாஞ்சையோடு ஜெபிக்கிற நபராய் மாறுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஒருவர் மனந்திரும்பி, தன்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புவிப்பது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! நாம் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும்போது, தொலைந்துபோன நம்மை விடாமல் தேடிக் கண்டுபிடித்ததின் சந்தோஷத்தை நாம் அனுபவிக்கமுடியும். நம்மை தேடிக் கண்டுபிடிக்குமளவிற்கு நாம் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்.


பொறாமையை மேற்கொள்ளுதல்
பிரபல ஆங்கிலத் திரைப்படமொன்றில், வயதுமுதிர்ந்த இசைவாத்தியக் கலைஞர் ஒருவர் அந்த குறிப்பிட்ட நிகழ்விற்கு வந்திருந்த பாதிரியாருக்கு தன்னுடைய இசைகளில் சிலவற்றை பியானோவில் வாசித்துக் காண்பித்தார். சங்கடப்பட்ட பாதிரியார், அந்த இசை தனக்கு பிடிபடவில்லை என்றார். “இது எப்படியிருக்கிறது?” என்று எல்லோருக்கும் பரீட்சையமான ஒரு இசையை வாசித்துக் காண்பித்தார். இது உங்களுடையதா என்று அவர் கேட்க, வெறுமனே “இல்லை” என்று பதிலளிக்கிறார். ஆனால் அது பிரபல மொசார்த்தின் இசை என்பதை எளிதில் மக்கள் புரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவர் அதை வாசித்தது, அந்த பிரபல இசைக்கு காரணமான மொசார்த்தின் மரண நிகழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மொசார்த்தின் வெற்றியின் மீது அவர் கொண்ட பொறாமை அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.
மற்றுமொரு பொறாமைக் கதையின் அடிப்படையாக ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. தாவீது கோலியாத்தை வெற்றிகொண்ட பின், மக்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” (1 சாமுவேல் 18:7) என்று மகிழ்ச்சியோடு பாடினர். இந்த ஒப்பிடுதல் சவுல் ராஜாவுக்கு திருப்தியாயில்லை. தாவீதின் வெற்றியின் மீது பொறாமைக் கொண்டு, தன்னுடைய ராஜ்யத்தை இழக்க நேரிடுமோ என்று பயந்த சவுல் (வச. 8-9), தாவீதைக் கொலை செய்வதற்காக நீண்ட முயற்சியை ஏறெடுக்கிறான்.
இந்த மூத்த இசைக்கலைஞரைப் போல, அதிகாரத்திலிருந்த சவுலைப் போல, நம்மைவிட திறமையானவர்களைச் சந்திக்கும்போது நாம் பெறாமைப்பட நேரிடலாம். அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவதையும் அவர்களின் வெற்றியை அற்பமாய் எண்ணுவதையும் விட்டுவிட்டு, நம்முடைய பொறாமையை மேற்கொள்ள பழகுவோம்.
சவுல் ராஜாவாக தெய்வீகமாய் தேர்ந்தெடுக்கப்பட்டான் (10:6-7, 24). அந்த தெரிந்தெடுத்தல் அவனுக்குள் பொறாமையை அல்ல, மாறாக, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். நம்முடைய அழைப்பும் பிரத்யேகமானது என்பதினால் (எபேசியர் 2:10), மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்துவதின் மூலம் பொறாமையை மேற்கொள்ளலாம் முயற்சிக்கலாம். அதற்கு பதிலாக, மற்றவர்களுடைய வெற்றியில் மகிழலாம்.

இயேசுவே நம் சமாதானம்
டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம்.
டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம்.