தேசிய நெடுங்சாலையின் நடுவில் இருந்த திட்டில் ஒரு சூரியகாந்தி பூ ஒன்று தனித்து ஓங்கி வளர்ந்திருந்தது. அதுவும் வேகப்பாதையின் மிக அருகாமையில் வளர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சூரியகாந்தி பூவும் தென்படாத பட்சத்தில், இந்த ஒற்றைப் பூவைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நெடுஞ்சாலையின் நடுவில் இப்படியொரு செடியை தேவனால் மட்டுமே வளர்க்கமுடியும். அவ்வழியாய் அவசர அவசரமாய் கடந்து செல்லும் பயணிகளை புன்முறுவலோடு வரவேற்று, மென்மையாய் வழியனுப்பிக் கொண்டிருந்தது. 

அதைப்போன்று ஆச்சரியப்படும் நேர்மையான ஓர் யூதேய ராஜாவைக் குறித்து பழைய ஏற்பாடு அறிவிக்கிறது. அவனுடைய தகப்பனும் தாத்தாவும் விக்கிரக  வழிபாட்டில் திளைத்திருந்தனர். யோசியா ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்களில், “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்தான் (2 நாளாகமம் 34:3). “ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு” கட்டளையிட்டான். பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலயத்திலிருந்து நியாயப்பிரமாண புத்தகத்தை கண்டெடுக்கின்றனர் (பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள்) (வச. 14). பின்பு தேவன் யோசியாவின் ஆவியை எழுப்பி, தேசத்தின் மக்களை அவர்களின் முற்பிதாக்களின் தேவனுக்கு நேராய் திரும்பும்படி செய்தார். யோசியா “உயிரோடிருந்த நாளெல்லாம்” (வச. 33) மக்கள் கர்த்தரை சேவிக்கும்படி செய்தான். 

கற்பனை செய்துபார்க்க முடியாத இரக்கங்களினால் நிரப்பகிறவர் நம் தேவன். வாழ்க்கையின் சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் சிறப்பான நன்மை ஒன்றை ஆச்சரியப்படும் வகையில் பூக்க வைக்க அவரால் முடியும். அவரை நோக்கிப் பாருங்கள். அதை இன்றும் அவரால் செய்யமுடியும்.