என்னுடைய கணவரும் மகனும் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றி தங்களுக்கு பிடித்தமான திரைப்படம் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதின் கடைசி காட்சிகளை பார்க்கும்போதே, அடுத்த படத்தைத் தேட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிரியமான எட்டு படங்களை கண்டுபிடித்தனர். பொறுமையிழந்த நான், ஏன், ஏதாவது ஒரு படத்தை தேர்வுசெய்து அதை முதலிலிருந்து பார்க்கலாமல்லவா என்றேன். அதற்கு என் கணவர், “நல்ல முடிவுக் காட்சி யாருக்கு தான் பிடிக்காது?” என்று புன்முறுவலோடு சொன்னார். 

நானும் எனக்கு பிடித்தமான புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் நல்ல முடிவை எதிர்பார்த்து தான் காத்திருப்பேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் வேதாகமத்திலும், எனக்கு பரீட்சையமான, பிடித்த கதைகள், எளிதில் புரியும் வேதப்பகுதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜீவனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையை மறுரூபமாக்கி, கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையின் முடிவு சம்பூரணமாயிருக்கும் என்று உறுதியளிக்கிறார்.

“நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று கிறிஸ்து கூறுகிறார் (வெளி. 22:13). மேலும் அவர், அவருடைய ஜனங்கள் நித்திய வாழ்;க்கையை சுதந்தரிப்பர் என்றும் (வச. 14), “இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை” (வச. 18-19) கூட்டவும் குறைக்கவும் கூடாது என்றும் கூறுகிறார். 

வேதத்திலுள்ள எல்லா காரியங்களையும் நாம் அறிந்துகொள்வது முடியாமல் இருக்கலாம். ஆனால் இயேசு தான் சொன்னபடி நிச்சயமாய் திரும்பி வருவார் என்பதை அறிந்திருக்கிறோம். அவர் பாவத்தை அழித்து, கோணலானவைகளை நேராக்கி, எல்லாவற்றையும் புதிதாக்கி, நம்முடைய அன்புள்ள ராஜாவாய் என்றும் அரசாளுகிறார். இது தற்போது நம்மை புதிய ஆரம்பத்திற்குள் நடத்தும் அழகான முடிவு!