
தேவனின் நிறைவான ஆசீர்வாதம்
திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.
உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).
நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

மற்றவர்களுடன் நடப்பது
பில்லி, ஒரு அன்பான மற்றும் விசுவாசமான நாய். 2020 இல் இணையதள நட்சத்திரமாக மாறியது. அதின் உரிமையாளர் ரஸ்சல் கணுக்கால் உடைந்து, ஊன்றுகோலைப் பயன்படுத்தி நடந்துகொண்டிருந்தார். பில்லியும் அதின் உரிமையாளருடன் நடக்கும்போது நொண்டி நடக்க தொடங்கியது. கவலையடைந்த ரஸ்சல், பில்லியை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் நாய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறினார்! அது தானாக நடக்கும்போது நன்றாகவே நடக்கிறது. அது தன் உரிமையாளருடன் நடக்கும்போது மட்டும் போலியாக நொண்டுகிறது என்று கண்டறிந்தனர். இதைத்தான் மற்றவர்களுடைய வலியை உணருவது என்று நாம் அழைக்கிறோம்.
ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலரின் ஆலோசனைகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பத்துக் கட்டளைகளில், கடைசி ஐந்து கட்டளைகளை அவர் சுருக்கிக் கூறுகிறார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (ரோமர் 13:9). 8ஆம் வசனத்திலும் மற்றவர்களுடன் நடப்பதன் முக்கியத்துவத்தை நாம் பார்க்கலாம்: “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்.”
எழுத்தாளர் ஜென்னி ஆல்பர்ஸ் அறிவுரை கூறுகிறார்: “ஒருவர் உடைந்திருக்கும்போது, அவர்களை சரிசெய்ய முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). யாராவது வேதனையிலிருக்கும்போது, அவர்களின் வலியைப் போக்க முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). மாறாக, அவர்களுடைய வலியில் அவர்களை நேசித்து, அவர்களோடு சேர்ந்து நடக்க முயற்சியுங்கள் (அது உங்களால் முடியும்). ஏனெனில் சில சமயங்களில், அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதே மக்களுக்கு அவசியமான ஒன்று.”
நம்முடைய இரட்சகராகிய இயேசு, நம்முடைய காயங்கள் மற்றும் வேதனைகளில் நம்மோடு நடப்பதால், மற்றவர்களுடன் நடப்பது என்றால் என்ன என்பதை நம்மால் அறியமுடியும்.

இருண்ட தருணங்கள், ஆழ்ந்த ஜெபங்கள்
“எனக்கு ஒரு இருண்ட தருணம் இருந்தது.” இந்த ஐந்து வார்த்தைகள் கோவிட்-19 தொற்று பரவிய நேரத்தில், ஒரு பெண் பிரபலத்தின் உள் வேதனையைப் படம்பிடிக்கின்றது. இந்த புதிய வாழ்க்கை முறையை தழுவுவது அவளுக்கு சவாலாய் அமைந்தது. அவள் தற்கொலை எண்ணங்களோடு போராடினாள் என்று அவரே சொன்னார். இந்த இக்கட்டான மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு, தன் மீது அக்கறைகொண்ட ஒரு நண்பரிடம் தன்னுடைய நிலையை மனம்விட்டு பகிர்ந்துகொண்டதை அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாம் அனைவரும் இதுபோன்ற பரபரப்பான தருணங்கள், நாட்கள் மற்றும் பருவங்களை சந்திக்க நேரிடுகிறது. பள்ளத்தாக்குகள் மற்றும் கடினமான இடங்கள் நமக்கு புதிதல்ல, ஆனால் அதை மேற்கொண்டு வெளிவருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சில வேளைகளில் மனநல நிபுணர்களின் உதவியை நாடுவதும் அவசியப்படுகிறது.
சங்கீதம் 143 இல், தாவீது தன்னுடைய வாழ்வின் ஒரு இருண்ட தருணத்தின் ஜெபத்தைக் கேட்டு அதின் மூலம் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். சரியான சூழ்நிலை எதுவென தெரியவில்லை. ஆனால் தேவனிடம் அவர் ஏறெடுத்த ஜெபங்கள் அனைத்தும் நேர்மையானவை, நம்பிக்கையானவைகள். “சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது” (வச. 3-4). விசுவாசிகளுக்கு, நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நமக்குள்ளேயோ, அல்லது நண்பர்களிடமோ அல்லது மருத்துவ நிபுணர்களிடமோ பகிர்ந்துகொள்வது மட்டும் போதாது. சங்கீதம் 143:7-10-ல் காணப்படும் விண்ணப்பங்களை உள்ளடக்கிய ஜெபங்களுடனும் முழு சிந்தையுடனும் நாம் தேவனிடம் வர வேண்டும். நமது இருண்ட தருணங்கள், தேவனால் மட்டுமே கொடுக்கக்கூடிய ஒளியை எதிர்நோக்கும் ஆழமான ஜெப நேரங்களாகவும் இருக்கலாம்.

சிலுவையின் செய்தி
முகேஷ், “கடவுள் இல்லை, மதம் இல்லை, எதுவும் இல்லை” என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர். தன்னுடைய மக்களுக்கு ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தேடி, அமைதியான போராட்டங்களில் மாணவர்களை வழிநடத்த உதவினார். ஆனால் அவர் தலைமை தாங்கிய போராட்டங்கள் அரசாங்கத்தின் குறுக்கீட்டை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாய் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் அவலம் நேர்ந்தது. அந்த அசம்பாவிதத்தினால் முகேஷின் பெயர் நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றது. ஒரு குறுகிய சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் ஒரு வெளியூர் கிராமத்திற்குத் தப்பிச் சென்றார். அங்கு அவர் ஒரு வயதான விவசாய பெண்மணியை சந்தித்தார். அவர் இவருக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தினார். கைகளால் எழுதப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் நகல் மட்டுமே அவரிடம் இருந்தது. ஆனால் அவருக்கு படிக்கத் தெரியாது. அதை முகேஷிடம் கொடுத்து படித்துக் காட்டுமாறு கூறி, அவர் அதை படிக்க படிக்க, அதை முகேஷிக்கு விளக்கிச் சொன்னார். சரியாய் ஒரு வருடம் கழித்து, முகேஷ் இரட்சிக்கப்பட்டார்.
தான் கடந்த வந்த கடினமான பாதைகளிலும் தேவன் அவரை சிலுவையண்டை நடத்துவதற்கு அவரை பெலப்படுத்தியதை அவரால் உணரமுடிந்தது. பவுல் அப்போஸ்தலர் 1 கொரிந்தியரில் “சிலுவையைப்பற்றிய உபதேசம். . . தேவபெலன்” (1:18) என்று சொன்னதை அவர் நேரில் அனுபவிக்க முடிந்தது. முட்டாள்தனம், பலவீனம் என்று பலர் கருதியது முகேஷின் பலமாக மாறியது. நாம் கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பு, நம்மில் சிலருக்கும் இதே சிந்தை இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆவியானவரின் மூலம், தேவனின் வல்லமையும் ஞானமும் நம் வாழ்வில் நுழைவதையும், அது கிறிஸ்துவண்டை நம்மை வழிநடத்துவதையும் உணர்ந்தோம். இன்று சிலுவையின் உபதேசத்தை அநேகருக்கு போதிக்கும் போதகராய் முகேஷ் ஊழியம் செய்கிறார்.
கடினமான இருதயங்களைக் கூட மாற்றும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு. இன்று அவருடைய வல்லமையான தொடுதல் யாருக்கு தேவை?
