ஒரு ஓவிய கண்காட்சியில் வரையப்பட்டிருந்த ஒரு பெரிய ஓவியத்தை ஒரு தம்பதியினர் பார்வையிட்டனர். அதின் அருகில் பெயிண்ட் கேன்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், அந்த ஓவியம் இன்னும் வரைந்து முடிக்கப்படவில்லை என்றும், பார்வையாளர்கள் தான் அதை நிறைவுசெய்யவேண்டும் என்று எண்ணி, தங்களுடைய பங்கிற்கு சில வர்ணங்களை பூசிவிட்டு கடந்து சென்றனர். ஆனால் அந்த ஓவியம் சமீபத்தில் வரையப்பட்டது என்பதை பிரதிபலிப்பதற்காய், ஓவியர்கள் அவற்றை அங்கே விட்டுச் சென்றிருந்தனர். அந்த சம்பவத்தின் காணொலிகளை பரிசோத்தி பின்னரே, நிர்வாகத்தினர் தங்கள் தவறை உணர்ந்தனர். 

யோர்தானின் கிழக்கே வாழ்ந்த இஸ்ரவேலர்கள் நதிக்கு அருகில் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியபோது, தவறான புரிதலை உருவாக்கினர். தேவனை ஆராதிப்பதற்கு ஆசரிப்புக் கூடாரம் மட்டுமே என்றிருந்த நிலையில், மேற்கத்திய கோத்திரத்தார்கள் இதை தேவனுக்கு எதிரான முரட்டாட்டமாய் கருதினர் (யோசுவா 22:16).

கிழக்கத்திய கோத்திரத்தார், தேவனின் பலிபீடத்தின் மாதிரியை மட்டுமே உருவாக்க நினைத்த எண்ணத்தை விளக்கும் வரை பதட்டம் அதிகரித்தது. தங்கள் சந்ததியினர் அதைக் காணவும், தங்களின் முற்பிதாக்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளும் எண்ணத்திலும் அதை அரங்கேற்றினர் (வச. 28-29). “தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்” (வச. 22) என்று கூச்சலிட்டனர். அவர்கள் சொன்னதை மற்றவர்களும் காது கொடுத்து கேட்டு, அங்கே நடப்பதைக் கண்டு, தேவனைத் துதித்துவிட்டு வீடு திரும்பினர்.

“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்” (1 நாளாகமம் 28:9). ஒவ்வொருவரின் நோக்கங்களும் அவருக்கு தெளிவாக தெரியும். குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்ய உதவுமாறு நாம் அவரிடம் கேட்டால், அதை தெளிவுபடுத்தும் வாய்ப்பையும், நமக்கு விரோதமான செய்கைகளை மன்னிக்கும் கிருபையையும் அவர் நமக்கு அருளுவார். நாம் மற்றவர்களுடன் ஒற்றுமையாய் வாழும் எண்ணத்தோடு, அவரிடத்திற்கு திரும்புவோம்.