பிழைத்து வளர்கிறது
ஒரு ஆங்கில அனிமேஷன் திரைப்படம் ஒன்றில், ஒரு குகை மனிதன் குடும்பம், “ஒன்றாக இருந்தால் மட்டுமே உயிர்வாழ்வதற்கான ஒரே வழி” என்று நம்புகிறது. அவர்கள் உலகத்தைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் வாழ பாதுகாப்பான இடத்தைத் தேடும்போது அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே ஒரு விசித்திரமான குடும்பத்தைக் கண்டுபிடித்த பிறகு அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் தங்கள் புதிய உறவினரின் வேறுபாடுகளைத் தழுவிக்கொள்ளவும், அவர்களிடமிருந்து வலிமையைப் பெறவும், ஒன்றாக வாழவும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த உறவில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதும், வாழ்க்கையை முழுமையாய் வாழுவதற்கு மற்றவர்களும் தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
நல்ல உறவில் இருப்பது ஆபத்தானது. மக்கள் நம்மை அவ்வப்போது காயப்படுத்தலாம். ஆயினும்கூட, நல்ல நோக்கத்திற்காய், தேவன் தம் மக்களை திருச்சபை என்னும் ஒரே சரீரமாய் ஏற்படுத்துகிறார். மற்றவர்களுடன் ஐக்கியம் கொள்வதில், நாம் முதிர்ச்சி அடைகிறோம் (எபேசியர் 4:13). தாழ்மை, சாந்தம் மற்றும் பொறுமை (வச. 2) ஆகிய நற்குணங்களுக்காய் அவரை சார்ந்திருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் “அன்பில்” கட்டியெழுப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவுகிறோம் (வச. 16). நாம் ஒன்று கூடும்போது, நம்முடைய தாலந்துகளைப் பயன்படுத்துகிறோம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். இது தேவனுடன் நடக்கவும், அவருக்காக சேவை செய்யவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
அவர் உங்களை நடத்துகையில், தேவ ஜனத்தின் மத்தியில் உங்களுடைய இடத்தை இன்னும் நீங்கள் கண்டுபிடியாதிருப்பீர்கள் என்றால், அதை கண்டுபிடியுங்கள். சாதாரணமாய் வாழ்வதை விடுத்து, பகிரப்பட்ட அன்பில் நீங்கள் தேவனுக்கு கனத்தை கொடுப்பீர்கள். மேலும் இயேசுவைப் போல மாறுவீர்கள். இயேசுவுடனும் மற்றவர்களுடனும் வளர்ந்து வரும் உறவின் மூலம் நாம் அனைவரும் அவரைச் சார்ந்து ஜீவிப்போம்.

பரலோக திருவிருந்து
ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11இன் ஈகிள் லூனார் மாட்யூல் முதன்முதலில் சந்திரனில் மனிதர்களை தரையிறக்கியபோது, விண்வெளி பயணிகள் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தங்கள் விமானத்திலிருந்து மீண்டு வர நேரம் எடுத்தனர். விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின், அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் கொண்டு வர அனுமதி பெற்றார். அங்ஙனம் அவர் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார். வேதத்தைப் படித்த பிறகு, சந்திரனில் உண்ட முதல் உணவாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்பார். அவர் “எங்கள் தேவாலயம் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் திராட்சை ரசத்தை ஊற்றினேன்; நிலவின் ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பில் திராட்சரசம் மெதுவாகவும் அழகாகவும் கோப்பையின் பக்கமாக மிதந்தது" என்று எழுதுகிறார். ஆல்ட்ரின் இந்த பரலோக திருவிருந்தை அனுபவித்தபோது, அவரது நடவடிக்கைகள், சிலுவையில் கிறிஸ்துவின் தியாகம் மற்றும் அவரது இரண்டாவது வருகையின் மீதான அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது.
அப்போஸ்தலனாகிய பவுல், “அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்” (1 கொரிந்தியர் 11:23) தம் சீஷர்களுடன் இயேசு எப்படி அமர்ந்திருந்தார் என்பதை நினைவில் கொள்ளும்படி நம்மை ஊக்குவிக்கிறார். கிறிஸ்து விரைவில் பிட்கப்படப்போகிற தன்னுடைய சரீரத்தை அப்பத்துடன் ஒப்பிட்டார் (வச.24). அவர் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் நமது மன்னிப்பையும் இரட்சிப்பையும் உறுதிப்படுத்திய “புதிய உடன்படிக்கையின்” அடையாளமாக திராட்சை ரசத்தை அறிவித்தார் (வச.25). எப்பொழுதும், எங்கும் நாம் திருவிருந்தை எடுத்துக்கொண்டாலும், இயேசுவின் பலியின் உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும், அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டாம் வருகையின் மீதான நம்பிக்கையையும் நாம் அறிவிக்கிறோம் (வச. 26).
நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உயிர்த்தெழுந்தவரும் மீண்டும் வரப்போகிறவருமான ஒரே மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை கொண்டாடலாம்.

தேவனுக்காக என் வேலையை செய்தல்
நான் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையின் கட்டுரை மிக முக்கியமானது என்று உணர்ந்ததால், பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னால் இயன்ற சிறந்த கட்டுரையை வழங்குவதில் சிரமப்பட்டேன். அவருடைய எதிர்பார்ப்பை சந்திக்க தீர்மானித்த நான், மீண்டும் மீண்டும் என்னுடைய சிந்தனைகளை மாற்றி எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் என் பிரச்சனை என்ன? இது எனக்கு சவாலான ஒரு தலைப்பா? அல்லது ஆசிரியர் என்னுடைய வார்த்தைகளை விட்டுவிட்டு, என்னை அங்கீகரிக்க வேண்டும் என்னும் தனிப்பட்ட ஆதங்கமா?
நம் வேலைப் பளுவிற்கு, பவுல் நம்பகமான ஆலோசனையைக் கொடுக்கிறார். கொலோசெய திருச்சபைக்கு எழுதிய நிருபத்தில், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமல், தேவனுக்காக வேலை செய்ய பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார். அப்போஸ்தலர் அறிவுறுத்தியது போல, “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:23-24).
பவுலின் ஆலோசனையின் பிரகாரம், நம்முடைய பூமிக்குரிய எஜமானர்களின் பார்வையில் நாம் நல்லவர்களாய் காண்பித்துக்கொள்வதற்கு பிரயாசப்பட வேண்டாம். அவர்களை மதித்து, நம்மால் முடிந்த நன்மையான காரியங்களை அவர்களுக்கு நிச்சயமாய் செய்யலாம். ஆனால் நாம் தேவனை முன்நிறுத்தி, நம் வேலையை ஆசீர்வதிக்கும்படிக்கு அவரை சார்ந்துகொண்டால், அவர் நம் முயற்சிகளுக்கு ஒளியூட்டுவார். நம்முடைய வெகுமதி? நம் வேலை அழுத்தங்கள் எளிதாகி, நம் பணிகள் நிறைவடைகின்றன. மேலும் “சிறப்பாய் செய்தீர்கள்” என்ற பாராட்டையும் அவரிடத்திலிருந்து நாம் ஒரு நாள் கேட்க முடியும்.

பாவத்திற்கு விலகி ஓடுதல்
இந்த கோடையில் இரண்டு முறை நான் காஜர் காஸ் (கேரட் புல்) என்று சொல்லப்படும் தாவரத்தினால் ஒருவகையான பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டேன். இரண்டு முறை எங்கள் முற்றத்தில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். சிறு வெள்ளைப் பூக்களைக் கொண்ட இந்த காஜர் காஸ் செடிகள் ஓங்கி வளர்ந்திருந்ததை இரண்டு முறையும் பார்க்க நேர்ந்தது. அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அதின் அருகில் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். விரைவில், நான் தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். இந்த சிறிய பச்சை விரோதியை நான் நெருங்குவதற்கு பதிலாக, நான் எதிர் திசையில் ஓட்டமெடுத்திருக்கவேண்டும்.
பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள யோசேப்புக் கதையில், வளர்ந்து படரும் விஷ தாவரங்களைக் காட்டிலும் கொடிதான பாவத்திலிருந்து விலகியோட வேண்டியதின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். அவன் எகிப்தின் போத்திபாருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, போத்திபாரின் மனைவி அவனை இச்சையோடு அணுகுகிறாள். யோசேப்பு அவள் அருகாமையில் செல்ல முயலவில்லை. மாறாக, விலகியோடுகிறான்.
அவள் அவன் மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டி அவனை சிறையில் தள்ளினாலும், யோசேப்பு தன் வாழ்நாள் முழுவதும் சுத்தமனசாட்சியோடே இருந்தான். ஆதியாகமம் 39:21ல் நாம் பார்க்கிறபடி, “கர்த்தர் அவனோடிருந்தார்.”
தேவனிடத்திலிருந்து நம்மை விலகியோடச் செய்யும் செயல்கள் மற்றும் சூழ்நிலைகளில், பாவத்திற்கு எதிர் திசையில் நாம் ஓடுவதற்கு தேவன் நமக்கு உதவிசெய்ய முடியும். 2 தீமோத்தேயு 2:22ல் பவுல், “பொல்லாத இச்சைகளை விட்டு ஓடுங்கள்” என்று எழுதுகிறார். மேலும் 1 கொரிந்தியர் 6:18ல், “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்றும் அறிவுறுத்துகிறார்.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகியோடுவதற்கு, தேவனுடைய பெலத்தை நாம் சார்ந்துகொள்வோம்.

தேவ சிநேகிதர்களின் சிநேகிதன்
இரண்டு நண்பர்களுக்கு பொதுவான இன்னொரு நண்பர் இருப்பதைக் கண்டறியும் போது, முதல் அறிமுகங்களில் சுவாரஸ்யமான அனுபவம் ஏற்படுவது இயல்பு. அதே போன்று, “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. விஜயின் அல்லது ஹீனாவின் நண்பர்கள், எனக்கும் நண்பர்தான்" என்று நாம் சிநேகிதர்களின் சிநேகிதர்களை பெரிய மனதுடன் நம்முடைய வீட்டின் விருந்திற்கு வரவேற்கிறோம்.
இயேசுவும் இதே போன்று சொல்லியிருக்கிறார். அவர் பலரை வியாதியிலிருந்து குணமாக்கி, மக்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில், தங்களின் செல்வாக்கை தவறாய் பயன்படுத்தி, ஆலயத்தை வணிகமயமாக்கும் மதத் தலைவர்களின் செயல்களுக்கு ஒத்துப்போகாததால், அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இந்த எதிர்ப்புகளின் மத்தியிலும், அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி, செலவு மற்றும் ஆச்சரியத்தை பெருக்க தீர்மானித்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு வியாதியை குணமாக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கிக்க அவர்களை அனுப்புகிறார். “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்” (10:40) என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.
வாழ்க்கையை மாற்றும் ஒரு அழகான நட்பிற்கு இதை விட ஒரு நல்ல எடுத்துக்காட்டை கற்பனை செய்வது கடினம். சீஷர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்துகொடுக்கும் எவருக்கும், அல்லது அவர்களில் ஒருவருக்கு ஒரு கலசம் தண்ணீரைக் கொடுக்கும் எவருக்கும், இயேசு தேவனின் இருதயத்தில் ஒரு இடத்தை வாக்கு செய்கிறார். அந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறினாலும், சிறியதோ அல்லது பெரியதோ, ஒரு தயவுள்ள விருந்தோம்பல் செய்கையானது இன்றும் தேவனுடைய சிநேகிதர்களின் சிநேகிதனாய் நம்மை மாற்றுகிறது.