கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில், கெல்லி, மூளைப் புற்றுநோயினால் உயிருக்குப் போராடிக்  கொண்டிருந்தாள். அவளுடைய இருதயம் மற்றும்  நுரையீரலைச்  சுற்றிலும் நீர் அதிகரித்ததால், அவள் தன் மருத்துவ சிகிச்சையை அங்கேயே தொடர வேண்டியிருந்தது. தொற்று வெகுவாய்ப் பரவியதால், அவளுடைய குடும்பத்தார் அவளைச் சென்று பார்க்க முடியவில்லை. அவளுடைய கணவர் டேவ், ஒரு காரியத்தைச் செய்யப் போவதாக உறுதியளித்தார்.

தனக்கு நெருக்கமானவர்களை அழைப்பித்து, செய்திகளைப் பிரதிபலிக்கும் பெரிய அடையாளப் பலகைகளை உண்டாக்கும்படிக்கு கேட்டுக்கொண்டார். அவர்களும் செய்தனர். இருபதுபேர் முகக்கவசங்கள் அணிந்து, மருத்துவமனைக்கு வெளியேயிருக்கும் சாலையில் “சிறந்த அம்மா!” “நாங்கள் உம்மை நேசிக்கிறோம்,” “நாங்கள் உங்களோடிருக்கிறோம்” என்று எழுதப்பட்ட பலகையை உயர்த்திப் பிடித்தவர்களாய் அணிவகுத்தனர். செவிலியரின் உதவியோடு, நான்காவது மாடியிலிருந்து கெல்லி அதைப் பார்வையிட்டாள். அங்கிருந்து அவள், முகக்கவசங்களையும் அசையும் கைகளையுமே பார்க்க முடிந்தது. அவளுடைய கணவன் சமூக ஊடகத்தில், “அது அழகான முகக்கவசம் மற்றும் கையசைப்பு” என்று பதிவிட்டார். 

பவுல் அப்போஸ்தலரும் தன்னுடைய  கடைசி நாட்களில், ரோம சிறையில் தனிமையில் வாடினார். அவர் தீமோத்தேயுக்கு எழுதும்போது, “மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு” (2 தீமோ. 4:21) என்று எழுதினார். ஆனால் பவுல் முற்றிலும் தனிமையில் இல்லை. “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று… என்னைப் பலப்படுத்தினார்” (வச. 17) என்றார். மேலும் அவருடன் இருந்த மற்ற விசுவாசிகள்  அவரை உற்சாகப்படுத்தினர் என்பது தெளிவாக தெரிகிறது. அவர் தீமோத்தேயுவிடம், “ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” (வச. 21) என்கிறார். 

நாம் சமுதாயமாய் செயல்படவே படைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய இக்கட்டான தருணங்களிலேயே அதை உணருகிறோம். இன்று முற்றிலும் தனிமையாய் உணர்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்?