வகை  |  odb

நம்பிக்கையுடன் தாழ்மைபடுதல்

ஆலய ஆராதனையின் முடிவில் போதகரின் அழைப்பின் பேரில், லாட்ரீஸ் முன்னோக்கிச் சென்றாள். சபைக்கு வாழ்த்துச் சொல்ல அவள் அழைக்கப்பட்டபோது, அவள் பேசிய கனமான மற்றும் அற்புதமான வார்த்தைகளுக்கு யாரும் தயாராக இல்லை. டிசம்பர் 2021ல் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் தன்னுடைய ஏழு குடும்ப உறுப்பினர்களை இழந்த பின்பு அங்கிருந்து இடம்பெயர்ந்தவள் இவள். “தேவன் என்னுடன் இருப்பதால் என்னால் இன்னும் சிரிக்க முடிகிறது,” என்று அவள் கூறினாள். போராட்டங்களால் நசுக்கப்பட்டாலும், அவளது சாட்சி, சவால்களோடு போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு வல்லமையுள்ள ஊக்கமாய் அமைந்தது.

சங்கீதம் 22ல் (இயேசுவின் பாடுகளைச் சுட்டிக்காட்டும்) தாவீதின் வார்த்தைகள், தேவனால்; கைவிடப்பட்டதாக உணர்ந்து (வச. 1), மற்றவர்களால் இகழ்ந்து கேலி செய்யப்பட்ட (வச. 6–8), மற்றும் வேட்டையாடுபவர்களால் சூழப்பட்ட (வச. 12–13), பாதிக்கப்பட்ட மனிதனின் வார்த்தைகள். அவர் பலவீனமாகவும் ஒன்றுமில்லாமலும் உணர்ந்தார் (வச. 14-18). ஆனால் அவர் தன் நம்பிக்கையை கைவிடவில்லை. “ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்” (வச. 19) என்று தன் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார். நீங்கள் தற்போது சந்திக்கும் சவாலானது தாவீது அல்லது லாட்ரீஸ் போன்றவர்களுடைய சவால்களைப் போன்றல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவைகள் மெய்யானவைகள். மேலும் 24-ஆம் வசனத்தின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை: “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.” தேவனுடைய உதவியை நாம் பெறும்போது, அவருடைய மகத்துவத்தை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு நாம் அறிவிக்க பிரயாசப்படுவோம் (வச. 22).

என்ன அருமையான சிநேகிதன்!

என்னுடைய நீண்டகால நண்பனும் நானும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய சிநேகிதன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தார். அவருடைய ஊருக்கு எதிர்பாராதவிதமாய் செல்லவேண்டியிருந்ததினால் அவரை சந்திக்க நேரிட்டது. நாங்கள் இருவரும் உணவுவிடுதிக்குள் நுழையும்போது எங்கள் இருவருடைய கண்களும் கண்ணீரால் ததும்பியது. பல வருடங்களுக்கு முன்பாக அதே ஓட்டல் அறையில் நாங்கள் உட்கார்ந்து உணவு அருந்தியிருக்கிறோம். ஆனால் இப்போது மரணம் அருகாமையில் நின்று, வாழ்க்கையின் சொற்பத்தன்மையை எங்களுக்கு விளங்கச் செய்தது. சாகசங்கள், குறும்புகள், சிரிப்பு, இழப்பு, காதல் போன்ற உணர்வுகள் நிறைந்த நீண்ட நட்பிலிருந்து எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டபோது எங்கள் கண்களின் ஓரத்திலிருந்து அன்பு சிந்தியது.

இயேசுவும் கண்ணீர் சிந்தியிருக்கிறார். “ஆண்டவரே, வந்து பாரும்” (யோவான் 11:34) என்று யூதர்கள் இயேசுவிடம் சொன்னமாத்திரத்தில், தன்னுடைய நெருங்கிய சிநேகிதனான லாசருவின் கல்லறைக்கு முன்பாக இயேசு வந்து நிற்கிறார். இயேசு மனுஷீகத்தோடு மாம்சத்தை பகிர்ந்துகொண்டார் என்பதற்கு “இயேசு கண்ணீர்விட்டார்” (வச.35) என்றும் இரண்டு வார்த்தைகள் மிகுந்த ஆதாரமாய் அமைகிறது. யோவான் பதிவுசெய்யாத சில காரியங்கள் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடுமோ? ஆம். ஆகிலும் அங்கே நின்றிருந்த யூதர்கள், “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” (வச. 36) என்று சொல்லுகிறார்கள். இந்த வரிகள், நம்முடைய எல்லா பெலவீனங்களையும் நன்கு அறிந்த ஒரு சிநேகிதரை நின்று ஆராதிக்க போதுமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இயேசு மாம்சமும் இரத்தமும் கண்ணீரும் உடையவராயிருந்தார். இயேசு நம்மை நேசித்து புரிந்துகொள்ளும் இரட்சகர்.

வெளிப்படையான தயாளகுணம்

மரிக்கும் எவரும் “நான் சுயநலமாகவும், என்னுடைய தேவையை மட்டும் சந்தித்துக்கொண்டதற்காகவும், என்னை மட்டும் சரியாய் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்ததற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மகிழ்ச்சியடைவதில்லை” என்று பார்க்கர் பாமர் பட்டம்பெறும் விழாவில் மாணவர்களுக்கு அறிவித்தார். ஆகையால் “திறந்தமனதுடன் கூடிய தயாளகுணத்தை உலகிற்கு அர்ப்பணியுங்கள்” என்று வலியுறுத்தினார்.

ஆனால் பார்க்கர் தொடர்ந்து, இந்த வாழ்க்கைமுறையை நீங்கள் தத்தெடுத்துக்கொள்வது என்பது, “உங்களுக்கு எவ்வளவு குறைவாய் தெரிந்திருக்கிறது என்பதையும் தோல்வியடைவது எப்படி” என்பதையும் கற்றுக்கொள்வதைக் குறிக்கிறது என்கிறார். “இந்த உலகத்தின் சேவைக்காய் தன்னை அர்ப்பணிக்கிறவர்கள், அறியாத ஒரு பாதையில், மீண்டும் மீண்டும் விழுந்து, மீண்டும் மீண்டும் எழுந்து, மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ளும் ஒரு சிறுபிள்ளையின் சிந்தையை பிரஸ்தாபப்படுத்தவேண்டும்.

இரக்கத்தின் அடித்தளத்தில் நம் வாழ்வு கட்டமைக்கப்படும் போதுதான், அச்சமற்ற “திறந்த இதயம் கொண்ட தாராள மனப்பான்மை” போன்ற ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தைக் காணலாம். பவுல் தனது உடன்ஊழியர் தீமோத்தேயுவுக்கு சொன்னதுபோல, தேவன் நமக்கு அளித்த கிருபைவரத்தை அனல்மூட்டி எழுப்பிவிட்டு (2 தீமோத்தேயு 1:5), தேவனுடைய கிருபையே நம்மை இரட்சித்து, நோக்கமுள்ள வாழ்க்கை வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது (வச. 9) என்பதை அறிவோம். அவர் நம்முடைய சோதனைகளை மேற்கொள்ள “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை” (வச. 7) நமக்குக் கொடுக்கிறார். நாம் இடறிவிழும்போது அவருடைய அன்பு நம்மை தாங்கி, வாழ்நாள் முழுதும் நம்மை நடத்துகிறது (வச. 13-14).

சாட்சிகள்

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ (1807-1882) என்ற கவிஞரின் “சாட்சிகள்” என்ற கவிதைத் தொகுப்பில், மூழ்கிய அடிமைக் கப்பலை குறித்து விவரிக்கிறார். “சங்கிலியில் உள்ள எலும்புக்கூடுகள்" பற்றி அவர் எழுதியது போல், லாங்ஃபெலோ அடிமைத்தனத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட எண்ணற்ற பெயர் தெரியாத நபர்களுக்காய் இரங்கல் தெரிவித்தார். கடைசி சரணத்தில், “இவை அடிமைகளின் துயரங்கள், அவைகள் ஆழத்திலிருந்து அலறுகிறது; அறியப்படாத கல்லறைகளிலிருந்து கதறுகிறது; நாங்களே அதற்கு சாட்சிகள்!” என்று முடிக்கிறார்.

ஆனால் இந்த சாட்சிகள் யாரிடம் பேசுகிறார்கள்? அத்தகைய மௌன சாட்சியம் வீண் இல்லையா?

அவையெல்லாவற்றையும் பார்க்கும் சாட்சி ஒருவர் இருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றபோது, எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்தான். “ என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று தேவனிடம் கேட்டான். ஆனால் தேவன் “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்” (ஆதியாகமம் 4:9-10) என்று சொன்னார்.

காயீனின் பெயர் இன்றும் ஒரு எச்சரிப்பின் சத்தமாகவே திகழ்கிறது. “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்” என்று சீஷனாகிய யோவான் எச்சரிக்கை விடுக்கிறார் (1 யோவான் 3:12). ஆபேலின் பெயரும் இன்றும் நிலைநிற்கிறது. ஆனால் வித்தியாசமான வழியில்! “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்... அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்” (எபிரெயர் 11:4) என்று எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் ஆபேலைக் குறித்து சாட்சிகொடுக்கிறார்.

ஆபேல் இன்னும் பேசுகிறார். அதுபோல மரித்து வெகுநாளாய் ஆன அடிமைகளின் அந்த எலும்புக்கூடுகளும் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அநீதி தழைத்தோங்குகிறதோ அங்கெல்லாம் நாம் எதிர்த்து நின்று அவர்களுக்காய் குரல்கொடுப்போம். தேவன் அனைத்தையும் பார்க்கிறார். அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.