பன்னிரண்டாம் வயதில், இப்ராஹிம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வந்தார். இத்தாலிய மொழி எதுவும் தெரியாமல், திணறலுடன் போராடி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய இருபதுகளில், இத்தாலியின் ட்ரெண்டோவில் பீட்சா கடையைத் திறந்த இந்த கடின உழைப்பாளி இளைஞனை அந்த போராட்டங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உலகின் முதல் ஐம்பது பிட்சா வியாபாரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதற்கு அவரது சிறிய வணிகம் தகுதிபெற்றது.  

இத்தாலிய தெருக்களில் பசியுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க உதவுவது அவரது நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் ஒரு நியோபோலிடன் பாரம்பரியத்தை விரிவுபடுத்த முயற்சித்தார். அதாவது, அங்ஙனம் பசியில் உள்ளவர்களுக்காக மக்கள் கூடுதல் காபியையோ அல்லது பீட்சாவையோ வாங்கிக்கொடுக்கலாம் என்னும் வழக்கம். புலம்பெயர்ந்த அகதிகள், அவர்களின் கடந்தகால பாரட்பட்சங்களில் சிக்கிகொண்டு சோர்ந்துபோய்விடாதபடிக்கு அவர்களை ஊக்கப்படுததுவதே அவரின் நோக்கமாயிருந்தது. 

இத்தகைய விடாமுயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து நன்மை செய்யும்படிக்கு கலாத்தியர்களுக்கு பவுல் போதித்த போதனைகளை நினைவுபடுத்துகிறது. “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலாத்தியர் 6:9). மேலும் பவுல், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (வச. 10) என்று வலியுறுத்துகிறார். 

அநீதிகள் மற்றும் மொழி தடைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இப்ராஹிம், நல்லது செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். உணவு, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும் பாலமாய் மாறியது. அத்தகைய விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்டு, நாமும் நல்லதைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம். நம்முடைய விடாமுயற்சியுடன் நாம் வேலைசெய்யும்போது, அதின் மூலம் தேவன் மகிமைப்படுகிறார்.