
தேவன் உன்னைக் காண்கிறார்
ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி, கைகளை அசைத்த தன் மகனிடம், என் தோழி "கீழே இறங்கு" என்று சற்றே அதட்டினாள். "போதகர் என்னைப் பார்க்க வேண்டும். நான் நிற்காவிட்டால், அவர் என்னைப் பார்க்க மாட்டார்" என்று அவன் வெகுளியாகப் பதிலளித்தான்.
ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி நிற்பதை பெரும்பாலான தேவாலயங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றாலும், என் தோழியின் மகனுடைய கருத்து ஏற்புடையதே. நின்று, கைகளை அசைப்பது நிச்சயமாகப் போதகரின் பார்வையையும், கவனத்தையும் ஈர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
நாம் தேவனின் கவனத்தைப் பெற முயலுகையில், அவரால் கவனிக்கப்படுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேவன் நம் ஒவ்வொருவரையும் எப்போதும் பார்க்கிறார். ஆகார், தன் வாழ்வில் மிகத் தாழ்ந்த, தனிமையான, மிகவும் விரக்தியான நேரத்தில் இருக்கையில், அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தியவரும் அவரே. அவள் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு, ஒரு குமாரனைப் பெறும்படியாக ஆபிராமுக்கு அவனுடைய மனைவி சாராயால் கொடுக்கப்பட்டிருந்தாள் (ஆதியாகமம் 16:3). அவள் கருவுற்றபோது, ஆகாரை தன் மனைவி தவறாக நடத்த ஆபிராம் அனுமதித்தார்: “அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்” (வ.6).
ஓடிப்போன அடிமை தன்னை ஒண்டியாகவும், கர்ப்பமாகவும், பரிதவிக்கத்தக்கவளாகவும் கண்டாள். ஆயினும், வனாந்தரத்தில் அவளது விரக்தியின் மத்தியில், தேவன் மனமுருகி அவளிடம் பேச ஒரு தூதனை அனுப்பினார். தேவதூதன் அவளிடம், “கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்(ட்டார்)டபடியினால்” (வ.11) என்றார். அவள், "நீர் என்னைக் காண்கிற தேவன்" (வ.13) என்று பதிலளித்தாள்.
வனாந்தரத்தின் மத்தியில், இது மிகப்பெரும் புரிதலாகும். தேவன் ஆகாரைக் கண்டு இரக்கம் கொண்டார். நிலைமை எவ்வளவு கடினமான இருந்தாலும், அவர் உங்களைப் பார்க்கிறார்.

அன்போடு ஊழியஞ்செய்தல்
கீதா முதன்முதலில் சென்னையில் காபி கடையில் வேலையைத் தொடங்கியபோது, அவள் மாலா என்ற வாடிக்கையாளருக்குச் சேவை செய்தாள். மாலா காது கேளாதவர் என்பதால், அவர் தனது தொலைப்பேசியில் தட்டச்சு செய்யப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பொருட்களை ஆர்டர் செய்தார். மாலா ஒரு வழக்கமான வாடிக்கையாளர் என்பதை கீதா அறிந்த பிறகு, போதுமான சைகை மொழியைக் கற்று, அவருக்குச் சிறப்பாகச் சேவை செய்யத் தீர்மானித்தாள், அதனால் அவர் அதை எழுதாமலேயே ஆர்டர் செய்யலாம்.
ஒரு எளிய முறையில், கீதா மாலாவுக்கு அன்பையும் சேவையையும் காட்டினாள். இதையே பேதுரு, ஒருவருக்கொருவர் வழங்க நம் அனைவரையும் ஊக்குவிக்கிறார். சிதறடிக்கப்பட்ட மற்றும் நாடுகடத்தப்பட்ட இயேசுவின் விசுவாசிகளுக்கு எழுதிய நிருபத்தில், "ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்" என்றும், தங்கள் ஈவுகளைப் பயன்படுத்தி "ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" (1 பேதுரு 4:8, 10) என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகிறார். தேவன் நமக்கு அளித்திருக்கும் தாலந்துகள் மற்றும் திறன்கள் எதுவாக இருந்தாலும், அவை பிறருக்கு நன்மை செய்ய நாம் பயன்படுத்தக்கூடிய ஈவுகளே. அவ்வாறு செய்யும்போது, நம் வார்த்தைகளும் செயல்களும் தேவனுக்கு கனத்தைச் சேர்க்கும்.
பேதுருவின் வார்த்தைகள், அவர் எழுதியவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, காரணம் அவர்கள் வேதனையும் தனிமையும் நிறைந்த காலத்தை அனுபவித்தனர். துன்பத்தின் போது ஒருவரையொருவர் தங்கள் சோதனைகளைச் சமாளிக்க, ஒருவருக்கொருவர் உதவுமாறு அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். மற்றொரு நபர் அனுபவிக்கும் குறிப்பிட்ட வலியை நாம் அறியாவிட்டாலும், நம்முடைய வார்த்தைகள், நம்மிடம் உள்ளவை மற்றும் நமது திறன்கள் மூலம் ஒருவரையொருவர் கருணையோடும் மகிழ்ச்சியோடும் சேவிக்கத் தேவன் நமக்கு உதவுவார். அவருடைய அன்பின் பிரதிபலிப்பாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்யத் தேவன் நமக்கு உதவிடுவாராக.

தேவனின் நேரம்
வேறொரு நாடு செல்ல, தனது திட்டமிடப்பட்ட பயணத்தை விமலா எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், வழக்கம் போல் அவள் முதலில் அதற்காக ஜெபித்தாள். "இது ஒரு விடுமுறை பயணம்தானே, இதற்காக ஏன் நீ தேவனிடம் ஆலோசிக்க வேண்டும்?" என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார். இருப்பினும், விமலா எல்லாவற்றையும் தேவனிடம் அர்ப்பணிப்பதை விசுவாசித்தாள். இம்முறை, பயணத்தை ரத்து செய்யுமாறு அவர் ஏவுவதை அவள் உணர்ந்தாள். அப்படியே செய்தாள். அவள் அங்கே இருக்க வேண்டிய நேரத்தில், அந்த நாட்டில் ஒரு பெருந்தொற்று பரவியதைப் பின்னரே அறிந்தாள். "தேவனே என்னைப் பாதுகாப்பதை உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டாள்.
வெள்ளம் வடிந்த பிறகு, நோவாவும் அவருடைய குடும்பமும் பேழையில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் காத்திருக்கையில் தேவனின் பாதுகாப்பை அவர் நம்பியிருந்தார். பத்து மாதங்களுக்கும் மேலாக ஒத்துழைத்த பிறகு, அவர் வெளியேற ஆர்வமாக இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, " பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று" மற்றும் " பூமி காய்ந்திருந்தது" (ஆதியாகமம் 8:13-14). ஆனால், நோவா தான் பார்த்ததை மட்டும் நம்பவில்லை; மாறாக, தேவன் அவரிடம் சொன்னபோதுதான் அவர் பேழையை விட்டு வெளியேறினார் (வ.15-19). நீண்ட காத்திருப்புக்குத் தேவனிடம் நல்ல காரணம் இருப்பதாக அவர் நம்பினார்; ஒருவேளை பூமி இன்னும் முற்றிலும் ஏற்றதாயில்லாமல் இருந்திருக்கலாம்.
நம் வாழ்வின் தீர்மானங்களைக் குறித்து நாம் ஜெபிக்கையில், நமக்குத் தேவன் அளித்த மனத்திறனை பயன்படுத்தி, அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும்போது; நம்முடைய ஞானமான சிருஷ்டிகர் நமக்கு எது சிறந்தது என்பதை அறிவார் என்று அவருடைய நேரத்தை நம்பலாம். சங்கீதக்காரன் கூற்றுப்படி, “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்..என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்கீதம் 31:14-15).

மற்றவர்களின் பணியில்
எங்கள் பேரக்குழந்தைகள் நான்கு பெரும் ஒரு ரயில் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர், இளைய இருவருக்கும் அதின் உந்து பொறியைக் குறித்து வாக்குவாதம் உண்டானது. எங்கள் எட்டு வயது பேரன் தலையிடுகையில், அவனுடைய ஆறு வயது சகோதரி, “அவர்களுடைய காரியத்தில் தலையிடாதே” என்றாள். இது பொதுவாகவே நம் அனைவருக்குமான ஞானமான வார்த்தைகள். ஆனால் வாக்குவாதம் அழுகையாக மாறியபோது, பாட்டி தலையிட்டு, பிரித்து, சண்டையிடும் குழந்தைகளை ஆறுதல்படுத்தினார்.
பிறர் காரியங்களில் தலையிடுவது விஷயங்களை மோசமாக்கும் என்றால், விலகி இருப்பதே நல்லது. ஆனால் சில நேரங்களில் நாம் ஜெபத்தோடு தலையிட வேண்டும். பிலிப்பியருக்குக்கான நிருபத்தில் அப்போஸ்தலன் பவுல், அதை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணத்தை அளிக்கிறார். இங்கே அவர் இரண்டு பெண்களான எயோதியா மற்றும் சிந்திகேயாவை, "கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க" (4:2) வலியுறுத்துகிறார். வெளிப்படையாக, அவர்களின் கருத்து வேறுபாடு மிகவும் தீவிரமடைந்தது, அப்போஸ்தலன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் (1:7) தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார் (வ.3).
பெண்களின் வாதம் பிரிவினை உண்டாக்குவதையும், சுவிசேஷத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதையும் பவுல் அறிந்திருந்தார். எனவே, அவர்களின் பெயர்கள் "ஜீவபுஸ்தகத்தில்" (4:3) எழுதப்பட்டிருப்பதை அவர்களுக்கு நினைவூட்டுகையில் அவர் கண்ணியமாக இந்த சத்தியத்தை உரைத்தார். இந்தப் பெண்களும், சபையில் உள்ள அனைவரும் சிந்தையிலும், செயல்களிலும் தேவனின் ஜனங்களாக வாழ வேண்டும் என்று பவுல் விரும்பினார் (வ.4-9).
நீங்கள் தலையிட வேண்டுமா என்று உங்களுக்கு நிச்சயமில்லாவிடில், "சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்" (வ. 9; பார்க்க வ. 7) என்பதை நம்பி ஜெபியுங்கள்.
