ராதாவின் திருமணத்தில், அவளது தாயார் 1 கொரிந்தியரிலிருந்து ஒரு அழகான வேத வாக்கியத்தை வாசித்தார். வேதாகமத்தின் “அன்பின் அதிகாரம்” என்று அடிக்கடி அழைக்கப்படும் பதின்மூன்றாவது அதிகாரம் அந்த வைபவத்திற்கு ஏற்றதாக இருந்தது. “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (வ.4). இதைக் கேட்டவாறே, அப்போஸ்தலனின் அசைவுண்டாக்கும் இந்த வார்த்தைகளுக்குப் பின்பாக இருந்ததைத் தற்கால மணப்பெண்களும் மாப்பிள்ளைகளும் அறிவார்களா என்பது கேள்விக்குறியே. பவுல் ஏதோவொரு காதல் கவிதையை எழுதவில்லை. அப்போஸ்தலன், பிளவுபட்ட சபையில் கொதித்தெழும் பிரிவினைகளை ஆற்றும் முயற்சியாகத் தனது கெஞ்சலையே எழுதினார்.
எளிமையாகச் சொன்னால், கொரிந்துவில் உள்ள தேவாலயம் “சீர்கெட்டிருந்தது” என்று அறிஞர் டக்ளஸ் ஏ. கேம்ப்பெல் கூறுகிறார். தவறான உறவுமுறை, விபச்சாரம் மற்றும் மூப்பர்களிடையே போட்டிமனப்பாண்மை போன்றவை தலைதூக்கும் பிரச்சனைகளில் சில. சபை மக்களிடையே சட்ட வழக்குகள் சர்வ சாதாரணம். ஆராதனைகள் பெரும்பாலும் குழப்பமாகவே இருந்தன, அந்நிய பாஷையில் பேசுபவர்கள் முதலிடம் பெறப் போட்டியிட்டனர், தீர்க்கதரிசனம் உரைப்பவர்களோ பிறரை ஈர்க்கவே தீர்க்கதரிசனம் கூறினர் (பார்க்க. 1 கொரிந்தியர் 14).
இந்தக் குழப்பத்தின் பின்பாக இருந்தது, “ஒருவருக்கொருவர் அன்பில் உறவாடுவதில் ஏற்பட்ட அடிப்படை தோல்வி” என்று காம்ப்பெல் கூறுகிறார். மேன்மையான வழியைக் காட்ட, பவுல் அன்பைப் பிரசங்கித்தார், ஏனென்றால் “அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்” (13:8).
பவுலின் அன்பான நினைவூட்டல்கள் நிச்சயமாக ஒரு திருமண வைபோகத்தை உற்சாகமூட்டும். அவைகள் நம் அனைவரையும் அன்பாயும் கனிவாயும் வாழ ஊக்குவிக்கட்டும்.
உங்கள் உறவுகளில் இரக்கத்தையும் கனிவையும் எவ்வாறு காட்டுகிறீர்கள்? கிறிஸ்துவின் சரீரத்தில் நீங்கள் எப்படி அன்பைக் காட்டுகிறீர்கள்?
அன்பு தேவனே, உமது அன்பு ஒருக்காலும் ஒழியாது. எனவே அன்பின் மேன்மையுடன் அனைவரோடும் பற்றுதலாயிருக்கத் தயவாய் என்னை வழிநடத்தும்.