எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

சார்ந்திருத்தலை வெளிப்படுத்துதல்

லாராவின் தாயார் கேன்சர் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் காலை லாரா தன் சிநேகிதியோடு சேர்ந்து தன் தாயாருக்காக ஜெபித்தாள். அவளுடைய சிநேகிதி மூளை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஊனமுற்ற நிலையில் இருக்கின்றாள். அவள், “தேவனே, நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்துவருகின்றீர். தயவு கூர்ந்து லாராவின் தாயாருக்கும் எல்லாவற்றையும் செய்தருளும்” என ஜெபித்தாள்.

லாராவின் சிநேகிதி தான் முற்றிலும் “சார்ந்திருக்கும் நிலையை வெளிப்படுத்தியது”, லாராவின் உள்ளத்தை அசைத்தது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் லாரா 'என் எல்லாவற்றிற்கும் தேவன் எவ்வளவு அவசியம் என்பதை எத்தனை முறை அறிக்கை செய்கிறேன்?' என்று சொன்னாள். இது “எல்லா நாட்களிலும் நான் செய்ய வேண்டிய ஒன்று” என்றாள்.

இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பரலோகத் தந்தையைச் சார்ந்தே வாழ்ந்ததைச் செயல்படுத்திக் காட்டினார். இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தேவனாயிருப்பதால் அவருக்குத் தேவையென்பதேயில்லை, எல்லாம் பரிபூரணமாயிருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இயேசு ஓய்வு நாளில் ஒரு மனிதனை சுகமாக்கிய போது, ஆன்மீகத் தலைவர்கள் அவரிடம் ஓய்வு நாளில் செய்யத் தகாததை செய்ததேன் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரே அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (5:16) என்றார். இயேசுவும் பிதாவைச் சார்ந்திருத்தலை வெளிப்படுத்துகின்றார்.

இயேசுவும் பிதாவைச் சார்ந்திருந்தே வாழ்ந்தார் என்பது நமக்கும், தேவனோடு நாம் எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகின்றது. நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவு, தேவன் நம் வாழ்வு முழுமையும் அவருடைய பெலத்தால் நிறைந்திருக்க வேண்டுமென விரும்புகின்றார். நாம் அவரை நேசித்து, நம்முடைய ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு அவருக்குச் சேவை செய்யும் போது நம் வாழ்வு அவரையே சார்ந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

பணிவான அன்பு

பெஞ்சமின் பிராங்க்ளின் வாலிபனாக இருந்தபோது, பன்னிரண்டு நற்குணங்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரித்தார். தன்னுடைய வாழ்க்கையில் அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் விரும்பினார். இந்தப் பட்டியலைத் தன் நண்பனிடம் காண்பித்தபோது, அவன் அதனோடு பணிவையும் சேர்த்தான். பிராங்க்ளினுக்கு அது விருப்பமாயிருந்தது. அத்தோடு அவருடைய நண்பன் அந்தப் பட்டியலிலுள்ள ஒவ்வொரு நற்பண்பையும் அடைய சில வழிமுறைகளையும் கொடுத்து உதவினான். பிராங்க்ளினுடைய சிந்தனையில் பணிவிற்கு தனக்கு மாதிரியாக இயேசுவையே பின்பற்ற வேண்டும் எனத் தோன்றியது.

பணிவிற்கு முழுமையான எடுத்துக் காட்டாக இயேசு விளங்கினார். தேவனுடைய வார்த்தைகள் சொல்வது, “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்” (பிலி. 2:5-7)

இயேசு மிக உன்னதமான ஒரு பணிவைச் செயல்படுத்தினார். பிதாவோடு என்றும் இருப்பவராயிருந்தும் அன்பினால் சிலுவைமட்டும் தன்னைத் தாழ்த்தினார். தன்னுடைய சாவின் மூலம், தன்னை ஏற்றுக் கொள்ளுபவர் எவரையும் அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்வதையே அவர் தேர்ந்து கொண்டார்.

தேவனுடைய பணியை நாம் பின்பற்றுபவர்களாயின், பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் நம் பரலோகத்தந்தைக்குப் பணிவிடை செய்கிறவர்களாவோம். பிறரின் தேவைகளில் நாம் அவர்களுக்கு உதவும்படி நம்மை அர்ப்பணிக்கும் பிரமிக்கதக்க அழகினை நாம் பற்றிக் கொள்ளும்படி இயேசுவின் இரக்கம் நமக்குதவுகிறது. “நான் முதலில்” என்றிருக்கின்ற இந்த உலகில் பணிவோடு வாழ்வது என்பது எளிதானதல்ல. ஆனால், நாம் நமது இரட்சகரின் அன்பினைச் சார்ந்து இருப்போமாகில், அவரைப் பின்பற்றத் தேவையான யாவற்றையும் அவர் நமக்குத் தருவார்.

அசைபோடும் வருடங்கள்

என்னுடைய மனைவி சமீபத்தில் எனக்கு ஒரு லேபரேடார் வகை நாய்க்குட்டியொன்றைக் கொடுத்தார். நாங்கள் அதற்கு மேக்ஸ் என்று பெயரிட்டோம். ஒரு நாள் நான் என்னுடைய படிக்கும் அறையிலிருந்தபோது மேக்ஸும் என்னோடிருந்தது. நான் என்னுடைய எழுத்தில் கவனமாயிருந்தபோது, சில காகிதங்கள் கிழிக்கப்படும் சத்தம் என் பின்னாலிருந்து கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, குற்றவுணர்வோடிருந்த என்னுடைய நாய்க்குட்டியின் வாயிலிருந்து ஒரு திறந்த புத்தகத்தின் சில பக்கங்கள் நொங்கி கொண்டிருந்தன.

எங்களுடைய கால்நடை மருத்துவர், மேக்ஸ், அதனுடைய அசைபோடும் வருடங்களிலிருக்கிறது எனக் சொல்லியிருந்தார். நாய்க்குட்டிகளின் பால்பற்கள் விழுந்து, நிரந்தரபற்கள் தோன்றும்போது, அவை தங்கள் ஊன்களை உறுதிப்படுத்த எதையாகிலும் மென்று கொண்டேயிருக்கும். மேக்ஸ் தனக்கு ஒவ்வாத எதையாகிலும் விழுங்கிவிடாதபடி நான்தான் கவனமாகப் பார்த்திருக்க வேண்டும். நல்ல சுகாதாரமான எதையாகிலும் கடிப்பதற்கு நான் கொடுத்திருக்க வேண்டும்.

மேக்ஸ் அசைபோடுவதற்குத் தள்ளப்படுகிறது. அதனை கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு. இவ்வாறு நான் நினைத்துக் கொண்டபோது, நான் என்னுடைய மனதிலும் இருதயத்திலும் எவற்றைக் குறித்து அசைபோடுகிறேன், மீண்டும் மீண்டும் சிந்திக்கின்றேன் என்பதைக் குறித்து யோசனைசெய்தேன். நாம் புத்தகங்களை வாசிக்கும் போதும், வலைதளங்களில் நுழையும் போதும், அல்லது டெலிவிஷன் காட்சிகளைப் பார்க்கும் போதும் நம்முடைய ஆன்மாவிற்கு எவற்றைக் கொடுக்கிறோம் என்பதை நாம் கருத்தாய் கவனிக்கின்றோமா? “இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:1,3) என வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது. நாம் நம்மை தேவனுடைய வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் நிரப்பிக் கொள்வோம் அப்படிச் செய்யும்போது நாம் அவரில் வளர்ந்து முதிர்ச்சி பெறுவோம்.

வார்த்தைகள் தவறாகும்போது

சமீபத்தில் நான் என் மனைவி கேரிக்கு ஒரு குறுஞ்செய்தியை, ஒலி வழிச் செய்தியாக அனுப்பினேன். அவள் வேலையை முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வரும்படி என் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், இந்த வார்த்தைகளை அனுப்பினேன். ‘‘நான் உன்னை எவ்விடத்தில் வந்து அழைத்துச் செல்ல விரும்புகின்றாய், என் வயதான பெண்மணியே?” என்பதே அச்செய்தி.

கேரியை நான் வயதான பெண்மணி என்று அழைப்பதை அவள் பொருட்படுத்துவதில்லை. அது எங்கள் வீட்டிற்குள்ளே நாங்கள் பயன்படுத்தும் புனைப் பெயர்களில் ஒன்று. ஆனால் அது என் அலைபேசிக்குப் புரியவில்லை. எனவே அது ‘‘வயதான மாடு” என்றனுப்பிவிட்டது.

நல்ல வேளையாக கேரி உடனடியாக என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள். அதனை வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவள் என்னுடைய குறுஞ்செய்தியை சமூக வலை தளத்தில் பதித்து விட்டு “நான் இதற்காக வருத்தப்படுவேனோ?” எனவும் கேட்டிருந்தாள். நாங்கள் இருவருமே அதனைக் குறித்து சிரித்துக் கொண்டோம்.

என்னுடைய அவலட்சணமான வார்த்தைகளுக்கு என்னுடைய மனைவியின் அன்பான அணுகுமுறை, அன்று என்னை நம்முடைய ஜெபங்களைக் குறித்து தேவனுடைய புரிந்து கொள்ளலைப் பற்றி எண்ண வைத்தது. நாம் ஜெபிக்கும் போது எவற்றைக் கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியவில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும் போது, நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). அன்போடு நமக்குதவி செய்து நம்முடைய ஆழ்ந்த தேவைகளைத் தேவனிடம் எடுத்துரைக்க உதவுகின்றார்.

நம்முடைய பரம தந்தை ஒருபோதும் தூர நின்று கொண்டு நம்முடைய சரியான வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றவரல்ல. நாம் நம்முடைய தேவைகளோடு அவரிடம் வரலாம். அவர் நம்மைப் புரிந்து கொண்டு அன்போடு அரவணைக்கின்றார் என்ற உறுதியைத் தந்துள்ளார்.

ஏக்கத்தோடு தேவனைத் தேடல்

ஒரு நாள் என்னுடைய மகள், எங்களது ஒரு வயது நிரம்பிய பேரனோடு, எங்களைப் பார்க்க வந்திருந்தாள். ஒரு சிறிய வேலையினிமித்தம் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானேன். ஆனால் நான் அந்த அறையை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்ததும், என்னுடைய பேரன் அழ ஆரம்பித்தான். இது இரு முறை நடந்தது, ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் திரும்பி வந்து அவனோடு சிறிது நேரம் செலவிட்டுச் செல்வேன், மூன்றாவது முறை நான் வெளியே செல்ல முயற்சித்த போது, அந்த சிறிய உதடுகள் கதற ஆரம்பித்தன. அந்நேரம் என் மகள் ‘‘அப்பா, நீங்கள் அவனை உங்களோடு அழைத்துச் செல்லக் கூடாதா?” என்று கேட்டாள்.

அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது எல்லா தாத்தாக்களுக்கும் தெரிந்திருக்கும். என்னுடைய பேரனும் என்னோடு பயணித்தான், ஏனெனில், நான் அவனை நேசிக்கிறேன்.

நம்முடைய இருதயத்தில் தேவனை நோக்கி நாம் கொண்டுள்ள ஏக்கங்களெல்லாம் அன்போடு சந்திக்கப்படும் என்பது எத்தனை நன்மையானது. வேதம் நமக்குக் கூறுவது, ‘‘தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” (1 யோவா. 4:16). நாம் எதையோ செய்ததாலோ அல்லது செய்யாததாலோ தேவன் நம்மீது
அன்புகூரவில்லை. தேவனுடைய அன்பு நம்முடைய தகுதியைச் சார்ந்தது அல்ல, ஆனால் தேவனுடைய நன்மையையும் உண்மையையுமே சார்ந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அன்பற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கும்போது, நாம் என்றும் மாறாத தேவனுடைய அன்பையே நம்முடைய நம்பிக்கைக்கும், சமாதானத்திற்கும் மூல காரணராகச் சார்ந்து கொள்வோம்.

நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய மகனையே நமக்குப் பரிசாகத் தந்து, பரிசுத்த ஆவியையும் அருளினதின் மூலம், நம்மீதுள்ள அவருடைய அன்பை விளங்கப்பண்ணினார். தேவன் நம்மை என்றும் மாறாத அன்போடு அன்பு கூருகிறார் என்ற உறுதி நமக்கு எத்தனை ஆறுதலைத் தருகிறது.

சகலத்தையும் அறிந்த தேவன்

சாக்லேட் நிறம்கொண்ட என்னுடைய லாப்ராடர் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் இருக்கையில், தடுப்புஊசி போடுவதற்கும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் நான் அதை ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துசென்றேன். மருத்துவர் கவனமாக பரிசோதிக்கும்போது, அதன் இடது பாதத்திலிருந்த மென்மயிரின் மேல் சிறு வெள்ளைப் பகுதி ஒன்று காணப்பட்டது. அந்த மருத்துவர் புன்முறுத்துகொண்டு சொன்னது, “சாக்லேட்டில் உன்னை முக்கி எடுக்கும்வேளையில் தேவன் அந்த இடத்தில் உன்னை பிடித்திருப்பார்போல்” என்றார்.

அதைக்கேட்ட நானும் புன்முறுத்தேன். ஆனாலும், அவர்கள் அறியாமலேயே, தேவன் தம் ஒவ்வொரு சிருஷ்டிப்பின்மீதும் தனிப்பட்ட ஆர்வம் எடுக்கிறவராய் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.

மத்தேயு 10:30-ல் இயேசு சொல்கிறார், “உன் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது”. தேவன் எவ்வளவு பெரியவராக இருந்தும் நம்முடைய வாழ்க்கையின் நுணுக்கமான பகுதிகளிலும் அவர் அளவில்லா ஆர்வம் காட்டுகிறார். எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, அது அவருடைய கவனத்திலிருந்து தப்பமுடியாது, அவர் முன் கொண்டுவர தகுதியல்லாத அற்ப பிரச்சனைதான் என்று எதுவும் இல்லை. அவர் அவ்வளவாய் அக்கறை காட்டுகிறார்!

தேவன் நம்மை சிருஷ்டித்தவர் மாத்திரமல்ல; அவர் நம்மை போஷிக்கிறவரும்கூட ஒவ்வொரு நொடியும் அவர் நம்மை காக்கிறவராய் உள்ளார். சிலவேளைகளில் நாம், “பிசாசு என் எல்லாக் காரியங்களையும் அறிந்து செயல்படுகிறான்” என்று சொல்வதுண்டு. ஆனாலும், தேவன் எல்லாவற்றிலும் இருக்கிறார், நாம் கவனிக்கத் தவறிய காரியங்களையும் அவர் கவனிக்கத் தவறுவதில்லை. சம்பூரண ஞானமும் அன்பும் கொண்ட நம் பரமபிதா நம்மை – மற்ற எல்லா சிருஷ்டிப்புகளுடன் – அவருடைய பரிவான, பலமுள்ள கரங்களில் எப்படித் தாங்குகிறார் என்பதை அறிவது எவ்வளவாய் நம்மை தேற்றுகிறது?

பகிர்ந்திட்ட ஆறுதல்

“எனக்காகவே தேவன் இன்று உங்களை அனுப்பினார்”

சிக்காகோவில் விமானம் தரையிறங்கிய பின் இந்த வார்த்தைகளை சொல்லி அந்தப் பெண் என்னிடமிருந்து விடைபெற்றாள். விமானத்தில் என்னுடன் பயணித்த அவள் அன்றைக்கு மட்டும் பல விமானங்கள் மாறி கடைசியாக தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாள். “நீங்க தப்பா எடுக்கலேனா, இத்தனை விமானங்கள் மாறி வரவேண்டிய அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாமா?” என்றேன். சற்றே யோசித்த அவள் வருத்தத்துடன், “போதைக்கு அடிமையான என் மகளை சீர்திருத்த மையத்தில் அனுமதித்துவிட்டு வருகிறேன்” என்றாள்.

தொடர்ந்து அவளுடன் பேச்சுகொடுத்த நான், என் மகனும் எப்படி ஹெராயினுக்கு அடிமையாக இருந்தான், இயேசு அவனை எப்படி விடுவித்தார் என்பதை பகிர்ந்தேன். கண்ணீர்மல்க அதனை கேட்டவளின் முகத்தில் ஒரு புன்னகை. விமானம் தரையிறங்கிய பின் இருவருமாக இணைந்து அந்த மகளின் சங்கிலிகள் அறுபடவேண்டும் என்று ஜெபித்தோம்.

அன்று மாலையில் நான் 2 கொரிந்தியர் 1:3-4-ல் “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்” என்ற வசனத்தை நினைவுகூர்ந்தேன்.

தேவனால் வரும் ஆறுதலினால் பெலப்படவேண்டிய மக்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளனர். நம்மேல் அவர் கூர்ந்த அன்பை, மனதுருக்கத்துடன் நாம் மற்றவருக்கு பகிர்ந்திடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்றும், அவரால் வரும் ஆறுதல் யாருக்குத் தேவையோ அவர்களிடமாய் தேவன் நம்மை அனுப்பட்டும்!

“ஜெபமாகிய வரத்தைப் பயன்படுத்தல்”

‘‘ஜெபமாகிய வரம் எத்தகையது என்று உணராதிருந்தேன். என்னுடைய சகோதரன் சுகவீனமான போது நீங்களெல்லாரும் அவனுக்காக ஜெபித்தீர்கள். உங்களுடைய ஜெபங்கள் சொல்ல முடியாத அளவு ஆறுதலைத் தந்தது”.

புற்றுநோயால் அவதியுறும் தன்னுடைய சகோதரனுக்காக, எங்கள் ஆலயத்தின் நபர்கள் ஜெபித்ததற்காக லாரா நன்றி கூறியபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மேலும், ‘‘உங்களுடைய ஜெபம் இந்த கடினமான சூழல்களில் அவனை
பெலப்படுத்தினதோடல்லாமல், எங்கள் குடும்பத்தினரனைவரையும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது” என்றும் கூறினாள்.

பிறரை நேசிக்க சிறந்த வழி அவர்களுக்காக ஜெபிப்பதே. இதற்கு முழு எடுத்துக்காட்டாக இயேசு செயல்பட்டார். புதிய ஏற்பாட்டில் இயேசு பிறருக்காக ஜெபிப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். மேலும், அவர் நமக்காகப் பிதாவிடம் தொடர்ந்து வருவதையும் பார்க்கின்றோம். ரோமர் 8:34ல் ‘‘அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” என சொல்லப்பட்டுள்ளது. சிலுவையில் தன்னலமற்ற ஓர் அன்பை நமக்காக வெளிப்படுத்தின பின்பு உயிரோடெழுந்து, பரலோகத்திற்கு ஏறின இயேசு கிறிஸ்து இன்னமும், இந்த நேரத்திலும் தொடர்ந்து நமக்காக ஜெபம் பண்ணிக் கொண்டு நம்மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை நேசித்து, தேவன் அவர்களுக்கு உதவும்படியாகவும், அவர்கள் வாழ்வில் செயல்படும்படியாகவும் அவர்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர் அப்படியே செய்வார். நம்முடைய அன்பின் தேவன் நம்மை பெலப்படுத்தி, நாம் தாராளமாக நம்முடைய வரமாகிய ஜெபத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி செய்வாராக.

தேவனுக்கு விலையேறப் பெற்றவர்கள்

அவருடைய பெயர் டேவிட். ஆனால் அநேகர் அவரை தெரு வயலின்காரர் எனக் கூப்பிடுவதுண்டு. டேவிட் ஒரு வயோதிபர், எப்பொழுதும் பரட்டைத் தலையோடு எங்கள் பட்டணத்தின் பிரபல இடங்களில், வழக்கமாக தன்னுடைய வயலின் மீட்டும் திறமையினால் கடந்து செல்வோரை கவரும் ஓர் இசைக் கலைஞன். அவருடைய இசைக்குப் பதிலாக அப்பகுதியைக் கடந்து செல்வோர் ஒரு சில ருபாய்களை, நடைபாதையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அவருடைய வயலின் பெட்டியில் போடுவர். டேவிட் புன்னகையோடு தன் தலையைத் தாழ்த்தி நன்றி தெரிவித்து விட்டு, தன்னுடைய இசையைத் தொடர்வார்.

சமீப காலத்தில் டேவிட் மரித்து விட்டார். அவருடைய இரங்கல் செய்தி அங்குள்ள நாளேட்டில் வந்திருந்தது. அதில், அவர் அநேக மொழிகளைப் பேசுபவரெனவும், ஒரு புகழ் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவரெனவும், அந்த தேச செனட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய வெளித் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிட்ட சிலர் அவருடைய சாதனைகளைக் கேட்டு, தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

‘‘தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27) என வேதாகமம் சொல்லுகிறது. இது நாம் நமக்குள்ளாகவே ஒரு மதிப்பைக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மதிப்பு நம்முடைய வெளிப்புற தோற்றத்தையோ, நாம் எதை அடைந்துள்ளோம் என்பதையோ, அல்லது பிறர் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையோ பொருத்ததல்ல. நாம் பாவத்தில் சிக்குண்டு தேவனை விட்டு விலகினாலும், தேவன் நம்மை மிகவும் நேசித்து, மதித்து அவருடைய ஒரே பேரான சொந்தக் குமாரனை அனுப்பி, இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் வழியைக் காட்டினார்.

நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அவருக்கு விலையேறப் பெற்றவர்கள். நாம் நம்முடைய அன்பை பிறரோடு பகிர்ந்து, நாம் தேவன் மீது வைத்துள்ள அன்பைக் காட்டுவோம்.