பெஞ்சமின் பிராங்க்ளின் வாலிபனாக இருந்தபோது, பன்னிரண்டு நற்குணங்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரித்தார். தன்னுடைய வாழ்க்கையில் அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் விரும்பினார். இந்தப் பட்டியலைத் தன் நண்பனிடம் காண்பித்தபோது, அவன் அதனோடு பணிவையும் சேர்த்தான். பிராங்க்ளினுக்கு அது விருப்பமாயிருந்தது. அத்தோடு அவருடைய நண்பன் அந்தப் பட்டியலிலுள்ள ஒவ்வொரு நற்பண்பையும் அடைய சில வழிமுறைகளையும் கொடுத்து உதவினான். பிராங்க்ளினுடைய சிந்தனையில் பணிவிற்கு தனக்கு மாதிரியாக இயேசுவையே பின்பற்ற வேண்டும் எனத் தோன்றியது.

பணிவிற்கு முழுமையான எடுத்துக் காட்டாக இயேசு விளங்கினார். தேவனுடைய வார்த்தைகள் சொல்வது, “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்” (பிலி. 2:5-7)

இயேசு மிக உன்னதமான ஒரு பணிவைச் செயல்படுத்தினார். பிதாவோடு என்றும் இருப்பவராயிருந்தும் அன்பினால் சிலுவைமட்டும் தன்னைத் தாழ்த்தினார். தன்னுடைய சாவின் மூலம், தன்னை ஏற்றுக் கொள்ளுபவர் எவரையும் அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்வதையே அவர் தேர்ந்து கொண்டார்.

தேவனுடைய பணியை நாம் பின்பற்றுபவர்களாயின், பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் நம் பரலோகத்தந்தைக்குப் பணிவிடை செய்கிறவர்களாவோம். பிறரின் தேவைகளில் நாம் அவர்களுக்கு உதவும்படி நம்மை அர்ப்பணிக்கும் பிரமிக்கதக்க அழகினை நாம் பற்றிக் கொள்ளும்படி இயேசுவின் இரக்கம் நமக்குதவுகிறது. “நான் முதலில்” என்றிருக்கின்ற இந்த உலகில் பணிவோடு வாழ்வது என்பது எளிதானதல்ல. ஆனால், நாம் நமது இரட்சகரின் அன்பினைச் சார்ந்து இருப்போமாகில், அவரைப் பின்பற்றத் தேவையான யாவற்றையும் அவர் நமக்குத் தருவார்.