வருடாந்திர சமுதாய நிகழ்வுகளை நடத்தும் ஒரு குழுவில் இணைந்து நான் வேலை செய்தேன். அந்த நிகழ்வுகள் வெற்றியாக முடியவேண்டும் என்பதற்காக பதினொரு மாதங்களாக அநேகக் காரியங்களைத் திட்டமிட்டோம். நாங்கள் நாளையும், இடத்தையும் தேர்ந்தெடுத்தோம். நுழைவுக் கட்டணத்தை நிர்ணயித்தோம். உணவு பரிமாறுவதிலிருந்து ஒலிபெருக்கி வல்லுனர்வரையும் அனைத்தையும் தேர்ந்தெடுத்தோம். அந்நாள் நெருங்குகையில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், அவர்களை வழிநடத்தவும் முயன்றோம். நிகழ்வுக்குப் பின்னர் கருத்துக்களைச் சேகரித்தோம். சிலர் பாராட்டினர். சிலவற்றைக் கேட்பதற்கே கடினமாயிருந்தது. அதில் பங்குபெற்றவர்களில் உற்சாகத்தையும் கண்டோம், குறைகளையும் கேட்டறிந்தோம். எதிர்மறையான கருத்துக்களைக் கேட்கும்போது ஊக்கமிழந்து இந்த வேலையையே விட்டுவிடலாமா என்று கூட எண்ணினோம்.

நெகேமியா ஒரு குழுவை ஏற்படுத்தி எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியபோது அவரையும் விமர்சனம் செய்தனர். அவரையும் அவரோடு பணி செய்தவர்களையும் பரியாசம் செய்தனர். “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” (நெகே. 4:3) எனப் பரியாசம் செய்தனர். அதற்கு நெகேமியாவின் பதில், என்னைப் பரியாசம் செய்பவர்களைக் கையாளுவதற்கு எனக்குதவியது. பரியாச வார்த்தைகளைக் கேட்டுச் சோர்வடையவோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ முயற்சிக்காமல், நெகேமியா தேவனுடைய உதவியைக் கேட்கின்றான். பரியாச வார்த்தைகளுக்கு நேரடியாக பதிலுரைப்பதை விட்டுவிட்டு, தேவனிடம் தன் ஜனங்கள் அவமதிக்கப்படுவதைக் கேட்டு அவர்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றார் (வச. 4) அவமதிப்புக்குள்ளான தன் ஜனங்களை தேவனுடைய பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, அவனும் அவனோடிருந்தவர்களும் தொடர்ந்து “முழுமனதோடு” அலங்க வேலையில் ஈடுபட்டனர் (வச. 6).

நம்முடைய வேலையை விமர்சிக்கும் வார்த்தைகளால் நாம் குழப்பமடையத் தேவையில்லை என்பதை நெகேமியாவிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம். நாம் நிந்திக்கப்படும்பொழுது அல்லது கேலி செய்யப்படும்போது, காயப்பட்டதாலோ அல்லது கோபத்தாலோ அவர்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக ஜெபத்தோடு தேவனிடம் சோர்ந்துபோகாதிருக்க பெலன் தருமாறு கேட்போமாகில் முழுமனதோடு நம் வேலையைத் தொடரமுடியும்.