ஒரு நாள் என்னுடைய மகள், எங்களது ஒரு வயது நிரம்பிய பேரனோடு, எங்களைப் பார்க்க வந்திருந்தாள். ஒரு சிறிய வேலையினிமித்தம் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானேன். ஆனால் நான் அந்த அறையை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்ததும், என்னுடைய பேரன் அழ ஆரம்பித்தான். இது இரு முறை நடந்தது, ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் திரும்பி வந்து அவனோடு சிறிது நேரம் செலவிட்டுச் செல்வேன், மூன்றாவது முறை நான் வெளியே செல்ல முயற்சித்த போது, அந்த சிறிய உதடுகள் கதற ஆரம்பித்தன. அந்நேரம் என் மகள் ‘‘அப்பா, நீங்கள் அவனை உங்களோடு அழைத்துச் செல்லக் கூடாதா?” என்று கேட்டாள்.

அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது எல்லா தாத்தாக்களுக்கும் தெரிந்திருக்கும். என்னுடைய பேரனும் என்னோடு பயணித்தான், ஏனெனில், நான் அவனை நேசிக்கிறேன்.

நம்முடைய இருதயத்தில் தேவனை நோக்கி நாம் கொண்டுள்ள ஏக்கங்களெல்லாம் அன்போடு சந்திக்கப்படும் என்பது எத்தனை நன்மையானது. வேதம் நமக்குக் கூறுவது, ‘‘தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” (1 யோவா. 4:16). நாம் எதையோ செய்ததாலோ அல்லது செய்யாததாலோ தேவன் நம்மீது அன்புகூரவில்லை. தேவனுடைய அன்பு நம்முடைய தகுதியைச் சார்ந்தது அல்ல, ஆனால் தேவனுடைய நன்மையையும் உண்மையையுமே சார்ந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அன்பற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கும்போது, நாம் என்றும் மாறாத தேவனுடைய அன்பையே நம்முடைய நம்பிக்கைக்கும், சமாதானத்திற்கும் மூல காரணராகச் சார்ந்து கொள்வோம்.

நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய மகனையே நமக்குப் பரிசாகத் தந்து, பரிசுத்த ஆவியையும் அருளினதின் மூலம், நம்மீதுள்ள அவருடைய அன்பை விளங்கப்பண்ணினார். தேவன் நம்மை என்றும் மாறாத அன்போடு அன்பு கூருகிறார் என்ற உறுதி நமக்கு எத்தனை ஆறுதலைத் தருகிறது.