முப்பது ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரிய குளிரை என்னுடைய பட்டணம் அனுபவித்தது. முடிவில்லாத பனியை மணிக்கணக்காக தோண்டியெடுத்ததால் என் தசைகளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தன. பயனளிக்காத முயற்சியால் சோர்வடைந்து என்னுடைய பூட்ஸ்சுகளை உதறிவிட்டு வீட்டினுள்ளே சென்ற போது, நெருப்பின் வெப்பத்தாலும், அதனைச் சுற்றியிருந்த என் குழந்தைகளாலும் வாழ்த்தப் பெற்றேன். வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியே பார்த்தபோது, அந்த குளிர்காலத்தினை நான் பார்த்த கோணம் முற்றிலும் மாறிப்போனது. இன்னமும் அதிக வேலையிருக்கிறது என்று காண்பதை விட்டுவிட்டு, நான் அந்தப் பனி, மரக்கிளைகளிலும், நிலப்பரப்பின் மீதும் வெண்மையாய் பரம்பியிருப்பதைப் பார்த்து மகிழ ஆரம்பித்தேன்.

சங்கீதம் 73ல் ஆசாபின் வார்த்தைகளை வாசிக்கும்போது, இதைப் போன்று, இன்னும் அதிக வருத்தத்தைத் தரக்கூடிய காலத்தைக் காண்கின்றோம். ஆரம்பத்தில் அவர், இவ்வுலகில் தவறிழைப்பவர்கள் செழித்திருப்பதைக் கண்டு புலம்புகிறார். பெருங்கூட்ட மக்களிடமிருந்து மாறுபட்டு, பிறருடைய நலனுக்காக வாழ்வதால் பயனென்ன என சந்தேகிக்கின்றார் (வச.13). ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையும்போது, அவருடைய கண்ணோட்டம் மாறுகிறது (வச. 16-17). தேவன் இவ்வுலகையும் அதன் பிரச்சனைகளையும் திறம்படக் கையாளுவார் என்பதை நினைக்கின்றார். எனவே நாம் எப்பொழுதும் தேவனோடு இருப்பதே நல்லது என்கின்றார் (வச.28).

இவ்வுலகத்திலுள்ள தீராத பிரச்சனைகளை நாம் காணும்போது நாம் உறைந்துவிடுகிறோம். நாம் தேவனுடைய ஸ்தலத்தினுள் ஜெபத்தின் மூலம் பிரவேசித்து, நம்முடைய வாழ்வையும், நம்முடைய கண்ணோட்டத்தையும் மாற்றுகின்ற அவருடைய உண்மையைக் கண்டுபிடிப்போம். அது நம்மை பெலப்படுத்தும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் நம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை. நம்முடைய சூழ்நிலைகள் மாறப் போவதில்லை. ஆனால், நம்முடைய கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்வோம்.