ஒவ்வொரு மே தினத்தன்றும் (மே 1) இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில், அதிகாலை வேளையில் வசந்த காலத்தை வரவேற்க ஒரு கூட்ட மக்கள் திரண்டு விடுவர். காலை 6 மணிக்கு மேக்டலின் கோபுரத்தின் உச்சியிலிருந்து, மேக்டலின் கல்லூரி பாடகர் குழுவினர் பாடுவார்கள். அந்த இரவைக் கடந்து வெளிவரும் பாடல்களையும், மணியோசையையும் எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பர்.

ஆரவாரத்தோடு காத்திருப்பவர்களைப் போன்று நானும் காத்திருக்கின்றேன். நான் என் ஜெபத்திற்கு வரும் பதிலுக்காகவும், தேவனின் வழி நடத்துதலுக்காகவும் காத்திருக்கின்றேன். எந்த நேரம் என் காத்திருத்தல் முடியும் என்று தெரியாதிருந்தும், எதிர்பார்ப்போடு காத்திருக்கக் கற்றுக் கொண்டேன். இருண்ட இரவுகளைப் போன்ற சூழ்நிலைகளை, ஆழ்ந்த கவலையோடு எதிர் நோக்குவதாக சங்கீதக்காரன், சங்கீதம் 130ல் கூறுகிறான். ஜாமக்காரனைப் போல, துன்பங்களின் மத்தியில் தேவன் மீது நம்பிக்கையாயிருப்பதைத் தெரிந்து கொண்டான். ‘‘எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (வச. 6).

தேவன் உண்மையுள்ளவர் என்பதின் மீதுள்ள எதிர்பார்ப்பு, இருளினூடே, துயரங்களின் மத்தியில், அதைத் தாங்கக் கூடிய பெலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை சங்கீதக்காரனுக்குக் கொடுக்கிறது. இருளினூடே ஒரு சிறு ஒளிக்கதிரைக் கூட காணாதிருந்தும், வேதாகமம் முழுவதும் காணப்படுகின்ற வாக்குத்தத்தங்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கை அவருடைய காத்திருத்தலுக்கு பெலனளிக்கிறது.

ஒரு வேளை நீயும், இருளின் நடுவேயிருப்பாயாயின் சோர்ந்து போகாதே, விடியல் வருகிறது. அது இந்த வாழ்விலோ அல்லது பரலோகத்திலோ, தெரியாது. ஆனால் நம்பிக்கையை விட்டுவிடாதே. தேவன் தரும் விடுதலைக்காக விழித்திருந்து காத்திரு. தேவன் உண்மையுள்ளவர்.