ஸான்சிபாரின் ஸ்டோன் டவுன் பட்டணத்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சு தேவாலயத்திற்கு சென்றது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய அடிமை சந்தை இருந்த அதே இடத்தில் இப்பொழுது அந்த ஆலயம் காணப்படுகிறது. ஆலய கட்டடத்தை வடிவமைத்தவர்கள் சுவிசேஷம் எப்படி அடிமை சங்கிலிகளை முறியடிக்கிறது என்பதை அடையாளமாகக் காண்பிக்க விரும்பினார்கள். இப்போது அது குற்றச்செயல்களும் கொடுமைகளும் அரங்கேறும் இடமாக இல்லாமல், ஆண்டவருடைய கிருபையை வெளிப்படுத்தும் ஒரு ஸ்தலமாக அது விளங்குகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு எப்படி பாவத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பினார்கள் – எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தில்: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7) என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே ‘மீட்பு’ என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டுக் கால சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட நபரை அல்லது பொருளை திரும்பபெறுவதற்கு பயன்படுத்தப்படும் பதம். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமையாகிப் போன நபரை இயேசு மீட்கிறார்.

பவுல் எழுதின நிருபத்தின் முதல் வார்த்தைகளில் (வச. 3-14) கிறிஸ்துவுக்குள் கிடைக்கபெறும் விடுதலையை நினைத்து அவர் எவ்வளவாய் மகிழ்கிறார் என்பதை பார்க்கிறோம். உள்ளத்தில் துதியும் ஸ்தோத்திரமும் பொங்க இயேசுவின் மரணத்தின் மூலமாக பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய இரக்கத்தின் கிரியையை அங்கே அளவளாவுகிறார். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியதில்லை. ஆண்டவருக்கும், அவருடைய மகிமைக்காகவும் வாழ நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.