கெம்பீரத் தோற்றம் மறைந்த போது
எங்களுடைய மகள் மெலிசாவின் கெம்பீர தோற்றத்தை என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அவள் தன்னுடைய பள்ளியின் வாலிபால் குழுவில் இருந்து, மகிழ்ச்சியோடு விளையாடின அந்த அற்புதமான நேரங்கள் என்னுடைய மனதைவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. எங்களின் குடும்ப நிகழ்வுகளின் போது, அவளுடைய முகத்தில் தோன்றும் வெட்கம் கலந்த முழுமையான சிரிப்பை, நினைவுக்கு கொண்டு வருவதும் கடினமாக உள்ளது. அவளுடைய மகிழ்ச்சி நிறைந்த பிரசன்னத்தை, பதினேழு வயதில் ஏற்பட்ட சாவின் திரை மூடிவிட்டது.
புலம்பல் புத்தகத்தில் வரும் எரேமியாவின் வார்த்தைகள், இருதயமும் தன் நம்பிக்கையை இழந்துவிடும் என்பதைக் காட்டுகின்றது. “என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்து போயிற்று” (3:18) என்கின்றார். அவருடைய சூழ் நிலை நம்முடைய சூழ்நிலைகளையெல்லாம் விட வேறுபட்டது. அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து பிரசங்கித்தார், அவர் எருசலேமின் தோல்வியைக் கண்டார். அவருடைய கெம்பீரம் அவரை விட்டுப் போயிற்று, ஏனெனில் அவர் தோல்வியை உணர்ந்தார் (வ.12), தனிமைப் படுத்தப்பட்டார் (வ.14), மேலும் தேவனால் கைவிடப்பட்டார் (வ.15-20).
ஆனால் அது அவருடைய கதையின் முடிவல்ல, எரேமியாவின் உடைக்கப்பட்ட வேதனை நிறைந்த உள்ளத்தினுள், ஒளி பிரகாசித்தது. அவர், “நம்பிக்கை கொண்டிருப்பேன்” (வ.21) என்கின்றார். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே” (வ.22) என்பதை உணரும் போது, அவருக்கு நம்பிக்கை தோன்றுகின்றது. நாம் இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனின், நம்முடைய கெம்பீரமும் கடந்து போகலாம், ஆனால் “தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவில்லை, அவை காலைதோறும் புதியவைகள்” (வ.22-23).
நம்முடைய இருண்ட நாட்களிலும் தேவனுடைய பெரிய உண்மை நம்மில் பிரகாசிக்கும்.
திரும்பக் கட்டுவது எப்படி?
இரவு வேளையில், தனக்கு முன்பாக இருக்கின்ற வேலையைக் குறித்து ஆராயும் படி, அந்தத் தலைவன் தன்னுடைய குதிரையில் புறப்பட்டான். இடிபாடுகளைச் சுற்றி வந்த அவன், பட்டணத்தின் சுற்றுச் சுவர் அழிக்கப்பட்டிருப்பதையும் அதன் வாயிற்கதவுகள் எரிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். சில பகுதிகளில் உள்ள இடிபாடுகளின் குவியல்களுக்கிடையே அவனுடைய குதிரை செல்வதற்கு வழியில்லாதிருந்தது. துக்கத்தோடு அந்த பிரயாணி, வீட்டிற்குத் திரும்புகின்றான்.
அந்தப் பட்டணத்தின் பாதிப்பைக் குறித்து, அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்த போது அவன், “நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே” (நெகே.2:17) என்று ஆரம்பிக்கின்றான். பின்னர் அந்த பட்டணம் அழிக்கப்பட்டு கிடக்கிறதையும், அதனைப் பாதுகாக்க வேண்டிய அலங்கம் உடைக்கப் பட்டு பயனற்றுக் கிடக்கின்றதையும் பற்றி கூறினான்.
துயரத்தில் இருக்கும் அந்த பட்டணத்தின் மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்வகையில், “ தேவனுடைய கரம் அவன் மேல் நன்மையாக இருக்கிறதையும்” அவர்களுக்கு அறிவித்தான். உடனே அந்த ஜனங்கள், “எழுந்து கட்டுவோம் வாருங்கள்” (வ.18) என்றனர்.
அப்படியே செய்தார்கள்.
தேவன் மீதுள்ள நம்பிக்கையோடும், தங்களின் முழு முயற்சியோடும், எதிரிகளின் எதிர்ப்பின் மத்தியிலும், தங்களால் கூடாது என்று எண்ணக் கூடிய மிகப் பெரிய வேலையை எருசலேம் மக்கள், நெகேமியாவின் தலைமையில், அலங்கத்தை திரும்ப 52 நாட்களில் கட்டிமுடித்தனர் (6:15).
உன்னுடைய சூழ் நிலைகளைப் பார்க்கும் போது, தேவன் உன்னிடம் எதிர்பார்க்கும் வேலை, உனக்கு மிகவும் கடினமானதாக தோன்றுகின்றதா? ஒரு பாவச் செயலை விட்டு விட கடினமாக இருக்கின்றதா? ஓர் உறவு தேவன் விரும்பாதவகையில் போய் கொண்டிருக்கின்றதா? தேவனுக்காக செய்ய வேண்டிய ஒன்று கடினமானதாக காணப்படுகின்றதா?
தேவன் உன்னை வழி நடத்தும் படி கேள் (2:4-5), பிரச்சனைகளை ஆராய்ந்து பார் (வ.11-15), தேவனுடைய வழி நடத்துதலை அறிந்து கொள்(வ.18), பின்னர் கட்டுகின்ற வேலையைத் தொடங்கு.
பேச முடியாத மனிதன்
ஒரு முதியோர் இல்லத்தில், முதியவர் ஒருவர், தன்னுடைய நகரும் நாற்காலியில் அமர்ந்திருந்தவாறு, ஓர் உயர் நிலைப் பள்ளியிலிருந்து வந்திருந்த வாலிபர்கள் இயேசுவைக் குறித்துப் பாடியப் பாடலை மிகவும் மகிழ்ச்சியோடு கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சில வாலிபர்கள் அவரிடம் பேச ஆரம்பித்தனர். அவரால் பேச முடியாது என்பதை அப்பொழுது கண்டுபிடித்தனர். பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்ட அவர், பேசும் திறனை இழந்தார்.
அந்த மனிதனோடு உரையாடலைத் தொடர முடியாத அந்த வாலிபர்கள் மேலும் பாடல்களைப் பாடினர், அவர்கள் பாட ஆரம்பித்ததும், ஒரு வியத்தகு காரியம் நடைபெற்றது, பேச முடியாத அந்த மனிதன் பாட ஆரம்பித்தார். உற்சாகத்தோடு, சத்தத்தை உயர்த்தி, “How Great Thou Art’ என்ற பாடலை தன்னுடைய புதிய நண்பர்களோடு சேர்ந்து பாடினார்.
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அது ஒரு மறக்க முடியாத அநுபவமாக இருந்தது. அந்த மனிதன் தேவன் மீது கொண்டிருந்த அன்பு எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, செவியால் கேட்கக் கூடிய ஆராதனையாக வெளிப்பட்டது – அது, உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை.
நம் அனைவருக்குமே சில வேளைகளில் ஆராதனை செய்வதற்குத் தடைகள் ஏற்படலாம், அது உறவுகளில் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம் அல்லது பணப் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது தேவனோடுள்ள உறவில் குளிர்ந்து காணப்படும் இருதயமாக இருக்கலாம்.
மாட்சிமையும் மகத்துவமும் நிறைந்த நமது சர்வ வல்ல தேவன் எல்லாத் தடைகளையும் உடைக்க வல்லவர் என்று நமது பேசமுடியாத நண்பர் பாடலின் மூலம் நமக்குச் சொல்லுகின்றார் “(O, lord my God, when I in awesome wonder, consider all the worlds Thy hands have made!” ) “என் தேவனுடைய கரங்கள் படைத்த, இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நான் பார்க்கும் போது நான் ஆச்சரியத்தால் திகைத்து நிற்கின்றேன்” என்பதே அவர் பாடிய பாடல்.
நீயும் தேவனை ஆராதிக்க போராடிக் கொண்டிருக்கின்றாயா? சங்கீதம் 96 ஐ வாசித்து, தேவன் எத்தனை பெரியவர் என்பதை சிந்தித்துப் பார். உன்னுடைய ஆராதனைக்குத் தடையாக இருந்த எதிர்ப்புகள் எல்லாம் துதியாக மாறும்.
கர்த்தரைத் தேடல்
மக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றும்படி, அர்ப்பணத்தோடு, தீவிரமாக செயல் படுவதைக் கவனிப்பது எனக்கு ஆர்வமான ஒன்று. எனக்குத் தெரிந்த ஒரு பெண் சமீபத்தில் ஓர் ஆண்டில் தனது முனைவர் படிப்பை முடித்தாள் – முழு அர்ப்பணத்தோடு உழைத்தாள். நண்பர் ஒருவர் ஒருவகை கார் வாங்க எண்ணினார், எனவே அவர் தன்னுடைய இலக்கை அடையும் மட்டும் கேக்குகளைச் செய்து விற்றார், மற்றொரு விற்பனை துறையில் பணிபுரியும் மனிதன், ஒவ்வொரு வாரமும் நூறு புதிய நபர்களைச் சந்திக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்.
உலகக் காரியங்களை உண்மையாய் தேடுவது நல்லது தான், ஆனால் இதையும் விட முக்கியமாகத் தேட வேண்டியது ஒன்றுள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
விரக்தியோடு, வனாந்திரத்தில் போராடிக் கொண்டிருந்த தாவீது அரசன், “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்” (சங். 63:1) என்கின்றார். தாவீது தேவனை நோக்கி கதறும் போது, தேவன் அந்த சோர்வடைந்த அரசனின் அருகில் இருக்கின்றார், தேவன் மீது, தாவீதிற்கு இருந்த ஆழ்ந்த ஆன்ம தாகத்தை அவருடைய பிரசன்னத்தால் மட்டுமே திருப்தியாக்க முடியும். தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரைப் பார்க்க ஆசையாயிருக்கின்றார் (வச. 2). அவரின் அன்பிற்காக ஆவலாய் காத்திருக்கின்றார் (வ.3), அவரில் உண்மையான ஆன்ம திருப்தியைக் கண்டு கொண்ட தாவீது, அவரை நாள் தோறும் போற்றுகின்றார், ஒரு திருப்தியான உணவை உண்பதைக் காட்டிலும் உண்மையான திருப்தியை அவரில் கண்டு கொண்டார் (வச. 4-5). அவர் இராச்சாமங்களிலும் தேவனுடைய வல்லமையை தியானிக்கின்றார், அவர் தரும் பாதுகாப்பையும் உதவியையும் நினைத்துப் பார்க்கின்றார் (வச. 6-7).
நாம் தேவனை உண்மையாய் தேடும் படி, பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தூண்டுகின்றார். நாம் அவரின் வல்லமையையும், அன்பையும் பற்றிக் கொண்டால், அவரது உறுதியான வலது கரம் நம்மைத் தாங்கிக் கொள்ளும். ஆவியானவர் நம்மை வழிநடத்த, எல்லா நன்மைக்கும் காரணராகிய நம் தேவனை நெருங்கிப் பற்றிக் கொள்வோம்.
இலக்கும் நோக்கமும்
2018 ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த, விளையாட்டு வீரரான காலின் ஓ பிராடி, இதுவரை நடைபெறாத ஒரு வகை நடையை மேற்கொண்டார். அவர் அனுதின தேவைக்கான பொருட்கள் அடங்கிய வண்டியை இழுத்துக் கொண்டே நடந்தார், இவ்வாறு, ஓ பிராடி அண்டார்டிகா பகுதி முழுவதும் தனியாக, 932 மைல்களை 54 நாட்களில் கடந்தார். அது ஒரு மறக்க முடியாத, அர்ப்பணமும், தைரியமும் உடைய பிரயாணமாக இருந்தது.
பனியிலும் குளிரிலும் தனிமையாக சோர்வடையச் செய்யும் நீண்ட தூரத்தை நடந்த அனுபவத்தைப் பற்றி, ஓ பிராடி கூறும் போது, “நான் ஆழ்ந்த முயற்சிக்குள் இழுக்கப்பட்டேன், முழு நேரமும் என்னுடைய கவனம் இலக்கின் முடிவையே நோக்கியிருந்தது, என்னுடைய சிந்தனை முழுவதையும் இந்த பிரயாணத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த அனுபவங்களையே நினைத்துக்கொள்ள அனுமதித்தேன்” என்றார்.
இயேசுவின் விசுவாசிகளாகிய நாமும் கைக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றினை இவ்வாக்கியம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் தேவனை மகிமைப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களுக்கு தேவனை வெளிப்படுத்துபவர்களாகவும் வாழ வேண்டும் என்பதையே இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஆபத்து நிறைந்த பாதை வழியே பயணிக்கும் பவுல், “என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” என அப்போஸ்தலர் 20:24ல் குறிப்பிடுகின்றார்.
நாம் இயேசுவோடுள்ள உறவில், நாம் அவரோடு நடக்கும் போது, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்வோமாக, ஒரு நாள் நம்முடைய இரட்சகரை முகமுகமாய் சந்திப்போம் என்பதைக் கருத்தில் கொண்டவர்களாய் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.
நாம் நினைத்துப்பார்க்க முடியாதது
2001 ஆம் ஆண்டு, பார்ட் மில்லர்ட் என்பவர் அனைவரையும் கவர் ந்த ஒரு பாடலை எழுதினார். “என்னால் கற்பனை மட்டுமே பண்ணிப்பார்க்க முடிகிறது” (I Can Only Imagine) என்ற அந்த பாடல், தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அடுத்த ஆண்டு, எங்களுடைய மகள் மெலிசா, அவளுடைய பதினேழாம் வயதில் ஒரு கார் விபத்தில் மரித்த போது, மில்லர்டுடைய பாடலின் வரிகள் எங்கள் குடும்பத்தினரை வெகுவாகத் தேற்றியது. அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பது எப்படியிருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பார்க்க முடிந்தது.
ஆனால் மெலிசா இறந்த சில நாட்களில் எங்கள் மீது கரிசனை கொண்ட, மெலிசாவின் சிநேகிதிகளின் தந்தையர்கள் என்னிடம் வந்து, வேதனையோடு, இதனை வேறுவகையாகக் கூறினர். “நீங்கள் எதன் வழியாகக் கடந்து செல்கிறீகள் என்பதை எங்களால் கற்பனைகூட செய்ய முடியவில்லை” என்று கூறினர்.
அவர்களின் அனுதாபங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களும் எங்களுடைய இழப்பில் பங்கு பெற்று, எங்களின் துயரத்தில், எங்களோடு நடந்து வந்தது, எங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.
தாவீது இழப்பின் ஆழங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்” (சங். 23:4) என்று குறிப்பிடுகின்றார். தான் நேசித்தவர்களின் மரணத்தை தான் அவரும் குறிப்பிடுகின்றார். இருளை எப்படிக் கடக்கப் போகிறோம் என்று நமக்குத் தெரியாது. நம்மால் இவற்றைக்கடந்து அக்கரைக்கு வர முடியுமா என்பதும் நமக்குத் தெரியாது.
ஆனால், இருளின் பள்ளத்தாக்கினை நாம் கடக்கும் போது, தேவன் நம்மோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையையும் தருகின்றார். இருளின் பள்ளத்தாக்கைக் கடந்ததும் அவருடைய பிரசன்னத்தில் இருப்போம் என வாக்குக் கொடுத்துள்ளார். விசுவாசிகளாகிய நாம், “ஆவி சரீரத்தைவிட்டுப் பிரிவது” என்பது தேவனோடு இருப்பது என்பதைத் தெரிந்துகொள்வோம் (2 கொரி. 5:8). அப்படியானால் நாம் கற்பனைபண்ண முடியாத இடத்திற்குச் செல்வோம், நம்முடைய எதிர்காலத்தில் நாம் தேவனோடு இணைந்து கொள்வோம்.
ஒளியைப் பிரகாசித்தல்
ஸ்டீபன், தன் பெற்றோரிடம், தான் ஒவ்வொரு நாள் காலையும் சீக்கிரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டுமென கூறினான். ஆனால், அது ஏன் அத்தனை முக்கியமானது என அவன் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவனுடைய பெற்றோர், ஒவ்வொரு நாளும் அவனைப் பள்ளிக்கு, காலை 7:15 க்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்டீபன், ஜுனியர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள், பனிபடர்ந்த நாளில் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். இதன் பின்னர், அவனுடைய பெற்றோர், ஸ்டீபன் ஏன் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சீக்கிரமாகச் சென்றான் என்பதைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு காலையும், ஸ்டீபனும் அவனுடைய நண்பர்களும் பள்ளியின் நுழை வாயிலில் நின்று கொண்டு, அங்கு வரும் அனைத்து மாணவர்களையும் புன்சிரிப்போடும், கரங்களை அசைத்தும், அன்பான வார்த்தைகளாலும் வரவேற்றனர். இது அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பாக பிரபலமற்ற மாணவர்களுக்கும், தங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர் என்கின்ற ஓர் உற்சாகத்தைக் கொடுத்தது.
இயேசுவின் விசுவாசியான ஸ்டீபன், தன்னுடைய மகிழ்ச்சியை மற்றவர்களோடும், சிறப்பாக மிகவும் தேவையிலிருப்போரோடும் பகிர்ந்துகொள்ள விரும்பினான். தன்னுடைய வரவேற்கும் எண்ணத்தோடு கூடிய அன்பின் செயலால், மிகச் சிறந்த முறையில், கிறிஸ்துவின் அன்பாகிய ஒளியைப் பிரகாசிக்கச் செய்தான்.
மத்தேயு 5:14-16 ல், இயேசு நம்மைக் குறித்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” எனவும், “மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” எனவும் வெளிப்படுத்துகின்றார். (வ.14). முற்காலத்தில், அநேகப் பட்டணங்கள் வெள்ளை சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டிருக்கும், அவை சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் போது, பிரகாசமாகக் காணப்படும். அது போன்று, நாமும் மறைந்து விடாமல், வீட்டிலுள்ள அனைவருக்கும் கிறிஸ்துவின் ஒளியைக் காட்டுவோம். (வ.15).
நாம் நம்முடைய ஒளியை பிறர் முன்பாக பிரகாசிக்கச் செய்யும் போது, (வ.16), அவர்களும் கிறிஸ்துவின் வரவேற்கும் அன்பை அநுபவிப்பார்கள்.
காணாமல் போன காகித உறை
அடுத்த மாநிலத்திலுள்ள ஒரு குடும்பத்தினரைச் சந்தித்து விட்டு, எங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, நான் அதனைக் கண்டு பிடித்தேன். நான் என் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, தரையில், ஓர் அழுக்கடைந்த, தடித்த காகித உறையைக் கண்டேன். அதையெடுத்து, அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தேன், என்ன ஆச்சரியம், அதற்குள்ளே நூறு டாலர் பணம் இருந்தது.
நூறு டாலர்களை யாரோ தொலைத்திருக்கிறார்கள், இந்த நேரத்தில் பதட்டத்தோடு தேடிக்கொண்டிருக்கலாம். யாரேனும் அப்பணத்தைத் தேடிக்கொண்டு அங்கு வந்தால், என்னிடம் தெரிவிக்குமாறு, நான் அந்த எரிவாயு நிரப்பு நிலையத்திலுள்ள உதவியாளரிடம் என்னுடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு வந்தேன். இது வரை யாருமே கூப்பிடவில்லை.
இந்த பணம் யாரோ ஒருவருடையது, அவர் தொலைத்து விட்டார். இப்புவியின் பொக்கிஷங்களுக்கு அடிக்கடி ஏற்படும் கதி, இதுதான். அது தொலைந்து போகலாம், திருடு போகலாம் அல்லது செலவழிந்து போகலாம், தவறான முதலீட்டால் அல்லது நம்மால் கணிக்க முடியாத பணச்சந்தையில் தொலைத்து விடலாம். ஆனால் இயேசுவின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட, தேவனோடுள்ள புதுப்பிக்கப்பட்ட உறவு, நித்திய வாழ்விற்கான வாக்குத்தத்தம் ஆகிய பரலோக பொக்கிஷங்களை, நாம் எங்கேயுமே தொலைத்து விட வாய்ப்பேயில்லை.
இதனாலேயே கிறிஸ்து, ”பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள் (மத். 6:20) என்கிறார். நாம் ”நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும்” (1 தீமோ. 6:18), “விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும்” (யாக். 2:5), அன்போடு மற்றவர்களுக்கு உதவி செய்து, இயேசுவைப் பற்றி அவர்களோடு பகிர்ந்து கொள்வோம். தேவன் நம்மை பெலப்படுத்தி, வழி நடத்த, அழியாத பொக்கிஷங்களை சேகரிப்போம், நாம், அவரோடுகூட வாழும் நித்திய வாழ்வை எதிர்பார்த்திருக்கிறோமே.
அது அற்புதமானது!
அது, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திறந்த வெளி ஓட்டப் பந்தயம். ஆனால் அவளுக்கு அதில் பங்கு பெற விருப்பம் இல்லை. அவள், அந்த நிகழ்ச்சிக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதும், தான் மோசமாக செய்து விடக் கூடும் என பயந்தாள். இருப்பினும், எல்லாரோடும் சேர்ந்து ஓட்டத்தை ஆரம்பித்தாள். அந்த இரண்டு மைல் ஓட்டத்தை ஒவ்வொரு நபராக முடிக்க ஆரம்பித்தனர். ஒருசில ஆர்வமற்ற நபர்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தனர். தன்னுடைய மகள் ஓட்டத்தை முடிப்பதைக் காண வந்திருந்த அவளுடைய தாயார், தொலைவில் அவள் ஓடி வருவதைக் கண்டார். உடனே அவள் ஓட்டத்தை முடிக்கும் கோட்டிற்குச் சென்றாள், அவமானப்படும் படி, முடிக்கும் தன் மகளைத் தேற்றும்படி தயாராக நின்றாள் ஆனால் அந்த இளம்பெண், தன்னுடைய தாயாரைப் பார்த்ததும் “அது மிக அற்புதமானது!” என்றாள்.
கடைசியாக முடித்தது எப்படி அற்புதமாயிருக்க முடியும்? அதை முடித்ததாலேயே அந்தப் பெண், தனக்கு கடினமாயிருந்த ஒன்றை நிறைவேற்றி முடித்தாள்! கடின உழைப்பையும், தனக்கு கொடுக்கப்பட்டதில் ஜாக்கிரதையாய் இருப்பதையும் வேதாகமம் பாராட்டுகிறது. விளையாட்டு போட்டிகளும், இசைப்பயிற்சியும் மற்றும் சில காரியங்களிலிருந்தும் இந்த விடாப்பிடியான முயற்சியைக் கற்றுக்கொள்ளலாம்
நீதிமொழிகள் 12:24ல், “ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.” எனவும்,”சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” (14:23) என்றும் காண்கிறோம். இந்த ஞானமுள்ள யோசனைகளே—வாக்குத்தத்தங்களல்ல நாம் தேவனுக்கு இன்னும் நன்கு பணி செய்ய, நமக்கு உதவும்.
தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டங்களில், வேலையும் அடங்கும். ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்பு, தேவன் அவனை, “ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும், காக்கவும் வைத்தார்” (ஆதி. 2:15). எனவே எதைச் செய்தாலும் அதை… மனப்பூர்வமாய் செய்யுங்கள்” (கொலோ. 3:24) தேவன் தரும் பெலத்தோடு நம் வேலையைச் செய்வோம், அதற்கான பலனை அவர் தருவார்.