அடுத்த மாநிலத்திலுள்ள ஒரு குடும்பத்தினரைச் சந்தித்து விட்டு, எங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, நான் அதனைக் கண்டு பிடித்தேன். நான் என் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, தரையில், ஓர் அழுக்கடைந்த, தடித்த காகித உறையைக் கண்டேன். அதையெடுத்து, அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தேன், என்ன ஆச்சரியம், அதற்குள்ளே நூறு டாலர் பணம் இருந்தது.

நூறு டாலர்களை யாரோ தொலைத்திருக்கிறார்கள், இந்த நேரத்தில் பதட்டத்தோடு தேடிக்கொண்டிருக்கலாம். யாரேனும் அப்பணத்தைத் தேடிக்கொண்டு அங்கு வந்தால், என்னிடம் தெரிவிக்குமாறு, நான் அந்த எரிவாயு நிரப்பு நிலையத்திலுள்ள  உதவியாளரிடம் என்னுடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு வந்தேன். இது வரை யாருமே கூப்பிடவில்லை.

இந்த பணம் யாரோ ஒருவருடையது, அவர் தொலைத்து விட்டார். இப்புவியின் பொக்கிஷங்களுக்கு அடிக்கடி ஏற்படும் கதி, இதுதான். அது தொலைந்து போகலாம், திருடு போகலாம் அல்லது செலவழிந்து போகலாம், தவறான முதலீட்டால் அல்லது நம்மால் கணிக்க முடியாத பணச்சந்தையில் தொலைத்து விடலாம். ஆனால் இயேசுவின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட, தேவனோடுள்ள புதுப்பிக்கப்பட்ட உறவு, நித்திய வாழ்விற்கான வாக்குத்தத்தம் ஆகிய பரலோக பொக்கிஷங்களை, நாம்  எங்கேயுமே தொலைத்து விட வாய்ப்பேயில்லை.

இதனாலேயே கிறிஸ்து, ”பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள் (மத். 6:20) என்கிறார். நாம் ”நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும்” (1 தீமோ. 6:18), “விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும்” (யாக். 2:5), அன்போடு மற்றவர்களுக்கு உதவி செய்து, இயேசுவைப் பற்றி அவர்களோடு பகிர்ந்து கொள்வோம். தேவன் நம்மை பெலப்படுத்தி, வழி நடத்த, அழியாத பொக்கிஷங்களை சேகரிப்போம், நாம், அவரோடுகூட வாழும் நித்திய வாழ்வை எதிர்பார்த்திருக்கிறோமே.