ஒரு முதியோர் இல்லத்தில், முதியவர் ஒருவர், தன்னுடைய நகரும் நாற்காலியில் அமர்ந்திருந்தவாறு, ஓர் உயர் நிலைப் பள்ளியிலிருந்து வந்திருந்த வாலிபர்கள் இயேசுவைக் குறித்துப் பாடியப் பாடலை மிகவும் மகிழ்ச்சியோடு கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சில வாலிபர்கள் அவரிடம் பேச ஆரம்பித்தனர். அவரால் பேச முடியாது என்பதை அப்பொழுது கண்டுபிடித்தனர். பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்ட அவர், பேசும் திறனை இழந்தார்.

அந்த மனிதனோடு உரையாடலைத் தொடர முடியாத அந்த வாலிபர்கள் மேலும் பாடல்களைப் பாடினர், அவர்கள் பாட ஆரம்பித்ததும், ஒரு வியத்தகு காரியம் நடைபெற்றது, பேச முடியாத அந்த மனிதன் பாட ஆரம்பித்தார். உற்சாகத்தோடு, சத்தத்தை உயர்த்தி, “How Great Thou Art’ என்ற பாடலை தன்னுடைய புதிய நண்பர்களோடு சேர்ந்து பாடினார்.

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அது ஒரு மறக்க முடியாத அநுபவமாக இருந்தது. அந்த மனிதன் தேவன் மீது கொண்டிருந்த அன்பு எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, செவியால் கேட்கக் கூடிய ஆராதனையாக வெளிப்பட்டது – அது, உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை.

நம் அனைவருக்குமே சில வேளைகளில் ஆராதனை செய்வதற்குத் தடைகள் ஏற்படலாம், அது உறவுகளில் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம் அல்லது பணப் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது தேவனோடுள்ள உறவில் குளிர்ந்து காணப்படும் இருதயமாக இருக்கலாம்.

மாட்சிமையும் மகத்துவமும் நிறைந்த நமது சர்வ வல்ல தேவன் எல்லாத் தடைகளையும் உடைக்க வல்லவர் என்று நமது பேசமுடியாத நண்பர் பாடலின் மூலம் நமக்குச் சொல்லுகின்றார் “(O, lord my God, when I in awesome wonder, consider all the worlds Thy hands have made!” ) “என் தேவனுடைய கரங்கள் படைத்த, இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நான் பார்க்கும் போது நான் ஆச்சரியத்தால் திகைத்து நிற்கின்றேன்” என்பதே அவர் பாடிய பாடல்.

நீயும் தேவனை ஆராதிக்க போராடிக் கொண்டிருக்கின்றாயா? சங்கீதம் 96 ஐ வாசித்து, தேவன் எத்தனை பெரியவர் என்பதை சிந்தித்துப் பார். உன்னுடைய ஆராதனைக்குத் தடையாக இருந்த எதிர்ப்புகள் எல்லாம் துதியாக மாறும்.