எங்களுடைய மகள் மெலிசாவின் கெம்பீர தோற்றத்தை என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அவள் தன்னுடைய பள்ளியின் வாலிபால் குழுவில் இருந்து, மகிழ்ச்சியோடு விளையாடின அந்த அற்புதமான நேரங்கள் என்னுடைய மனதைவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. எங்களின் குடும்ப நிகழ்வுகளின் போது, அவளுடைய முகத்தில் தோன்றும் வெட்கம் கலந்த முழுமையான சிரிப்பை, நினைவுக்கு கொண்டு வருவதும் கடினமாக உள்ளது. அவளுடைய மகிழ்ச்சி நிறைந்த பிரசன்னத்தை, பதினேழு வயதில் ஏற்பட்ட சாவின் திரை மூடிவிட்டது.

புலம்பல் புத்தகத்தில் வரும் எரேமியாவின் வார்த்தைகள், இருதயமும் தன் நம்பிக்கையை இழந்துவிடும் என்பதைக் காட்டுகின்றது. “என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்து போயிற்று” (3:18) என்கின்றார். அவருடைய சூழ் நிலை நம்முடைய சூழ்நிலைகளையெல்லாம் விட வேறுபட்டது. அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து பிரசங்கித்தார், அவர் எருசலேமின் தோல்வியைக் கண்டார். அவருடைய கெம்பீரம் அவரை விட்டுப் போயிற்று, ஏனெனில் அவர் தோல்வியை உணர்ந்தார் (வ.12), தனிமைப் படுத்தப்பட்டார் (வ.14), மேலும் தேவனால் கைவிடப்பட்டார் (வ.15-20).

ஆனால் அது அவருடைய கதையின் முடிவல்ல, எரேமியாவின் உடைக்கப்பட்ட வேதனை நிறைந்த உள்ளத்தினுள், ஒளி பிரகாசித்தது. அவர், “நம்பிக்கை கொண்டிருப்பேன்” (வ.21) என்கின்றார். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே” (வ.22) என்பதை உணரும் போது, அவருக்கு நம்பிக்கை தோன்றுகின்றது. நாம் இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனின், நம்முடைய கெம்பீரமும் கடந்து போகலாம், ஆனால் “தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவில்லை, அவை காலைதோறும் புதியவைகள்” (வ.22-23).

நம்முடைய இருண்ட நாட்களிலும் தேவனுடைய பெரிய உண்மை நம்மில் பிரகாசிக்கும்.