ஆகஸ்ட், 2020 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஆகஸ்ட் 2020

வேலையாள் செவிகொடுக்கின்றான்

கம்பியில்லா ரேடியோ தொடர்பு சாதனம் இயங்கும் நிலையில்  இருந்திருந்தால், அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்திருப்பார்கள். மற்றொரு கப்பலில் இருந்த ரேடியோ இயக்குபவர் சிரில் இவான்ஸ் என்பவர், டைட்டானிக் கப்பலின் ரேடியோ இயக்குபவர் ஜாக் பிலிப்ஸ் என்பவருக்கு, அவர்களின் கப்பல் ஒரு பனிப்பாறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் அந்த ரேடியோ இயக்குபவர், பிரயாணிகளின் செய்திகளை அனுப்புவதில் தீவிரமாக இருந்ததால், கோபத்தில் அமைதியாக இருக்குமாறு செய்தி அனுப்பினார். இதனால் வருத்தமடைந்த அந்த ரேடியோ இயக்குபவர் தன்னுடைய ரேடியோ சாதனத்தை மூடி விட்டு தூங்கச் சென்று விட்டார். 10 நிமிடங்கள் கழித்து டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. அவர்களின் துயரக் குரல் பதிலளிக்கப் படாமல்போய் விட்டது, அதனை யாருமே கவனிக்கவில்லை, கேட்கவில்லை.

 இஸ்ரவேலின் ஆசாரியர்கள் பரிதானத்துக்கு அடிமைப் பட்டு, தங்களின் ஆவிக்குரிய வாழ்வை இழந்ததையும், தேசம் ஆபத்தை நோக்கி இழுக்கப்படுவதையும் குறித்து 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கின்றோம். “அந்நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1 சாமு. 3:1) என்பதாகக் காண்கின்றோம். ஆனாலும் தேவன் அவருடைய ஜனங்களைக் கைவிடவில்லை. அவர், கர்த்தருடைய ஆசாரியனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ,சாமுவேல் என்ற ஒரு சிறுவனிடம் பேசுகின்றார். சாமுவேல் என்ற பெயருக்கு “தேவன் செவிகொடுக்கின்றார்” என்று அர்த்தம். அவனுடைய தாயாரின் ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார் என்பதின் நினைவாக அப்பெயரிடப் பட்டான். தேவனுக்குச் செவிகொடுக்க சாமுவேல் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வ.10). இங்கு வேலையாள் கேட்கிறான். வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் காரியங்களுக்கு செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் நாம் தெரிந்து கொள்வோம். நம்முடைய வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுப்போம். தங்களின் “ரேடியோக்களை” இயங்கும் நிலையில் வைத்திருக்கும்- தாழ்மையுள்ள அடிமையின் ரூபத்தை நாம் தரித்துக் கொள்வோம்.

தற்பரிசோதனை

சமீபத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, என்னுடைய   தந்தை என்னுடைய தாயாருக்கு அனுப்பி வைத்த கடிதங்களைப்  படித்தேன். அவர் வட ஆப்ரிக்காவில் இருந்தார், என் தாயார் அமெரிக்காவில் இருந்தார். என்னுடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் இளம் நிலை அதிகாரியாக இருந்தார், இராணுவ வீரர்களின் கடிதங்களை தணிக்கை செய்யும் பொறுப்பைப்    பெற்றிருந்தார். மிக முக்கியமான செய்திகள் எதிரிகளைச் சேராதபடி காப்பதற்காக இதனைச் செய்தார். அக்கடிதங்களைப் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.  தன் மனைவிக்கு எழுதிய அக்கடிதத்தின் வெளிப்பக்கத்தில், “இரண்டாம் நிலை அதிகாரி ஜாண் பிரானன் (என்னுடைய தந்தையின் பெயர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. தன்னுடைய  சொந்த கடிதத்திலேயே சில வரிகளை அடித்திருந்தார்!

சுய தணிக்கை என்பது, நம் அனைவருக்குமே நன்மையானது. வேதாகமத்தில் அநேக இடங்களில் அதை எழுதியவர்கள், நம்மிடத்தில் சரியில்லாதவை எவை, தேவனுக்கு மகிமையைத் தராதவை எவை என நம்மை நாமே சோதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். சங்கீதக்காரன், “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் ……..வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்” (சங்.139:23-24) என்கின்றான். எரேமியா அதனை இவ்வாறு கூறுகின்றார். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து, ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்” (புல.3:40) என்கின்றார். திரு விருந்தில் பங்கேற்கும் முன்பு, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்” (1 கொரி.11:28) என்று பவுல் நம்முடைய இருதயத்தைக் குறித்துக் கூறுகின்றார்.

தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும், எந்த மனப்பான்மையையும் விட்டு திரும்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவிசெய்வார். எனவே நாம் இந்த உலகத்தினுள் நுழைவதற்கு முன்பாக, நாம் நின்று ஆவியானவரின் உதவியோடு சுய சோதனை செய்வோம், அதன் மூலம் நாம் அவரோடு ஐக்கியமாகும்படி, “தேவனிடம் திரும்புவோம்”.

மிகச் சிறந்த அலை

“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர்.  உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.

முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம்! நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.

தேவன் நம்மை விடுவிப்பவர்

சைக்கிள், ஓட்டம், நீச்சல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கிய  (டிரையத்லான்) போட்டியில் கலந்து கொள்பவர்களில், பயந்து விடும் நீச்சல் வீரர்களை காப்பாற்றும்படி, மீட்பவர் ஒருவர் கடற்பரப்பில் தன்னுடைய படகில் தயாராக இருந்தாள். “படகின் மையப்பகுதியை பற்றிப் பிடிக்காதீர்கள்!” என்று நீச்சல் வீரர்களிடம் கத்தினாள், ஏனெனில் அத்தகைய ஒரு காரியம் அவளுடைய படகையும் கவிழ்த்திவிடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், அந்த சோர்வடைந்த வீரர்களை முன்பக்கதிற்கு, அல்லது துடுப்பின் அருகில் வருமாறு வழிகாட்டினாள். அங்கே அவர்கள் ஒரு வளையத்தைப் பற்றிக் கொள்ள முடியும், அவர்களை மீட்பவரும் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

எப்பொழுதெல்லாம் வாழ்வு அல்லது மக்கள் நம்மை கீழே இழுத்துவிடும் அச்சுறுத்தல் கொடுக்கும் போது, இயேசுவின் விசுவாசிகளாகிய நமக்கு மீட்பர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுவோம். “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்………………… அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணுவேன்” (எசே.34:11-12) என்கின்றார்.

சிறைப் பட்டுப் போன தேவனுடைய ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி தரும் உறுதிப்பாடு இதுவே. அவர்களுடைய தலைவர்கள் அவர்களைத் தள்ளி, ஏமாற்றினார்கள், அவர்களுடைய வாழ்க்கையை கொள்ளையிட்டு, மேய்ப்பர்கள் (தேவனுடைய) மந்தையை மேய்க்காமல், “தங்களையே மேய்த்தார்கள்” (வ.8). அதன் விளைவாக,  “பூமியின் மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை” என்று தன்னுடைய ஜனங்களைக் குறித்து தேவன் கூறுகின்றார் (வ.6).

“என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (வ.15), அவருடைய இந்த வாக்கு இன்றைக்கும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன? சர்வ வல்ல தேவனையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். “நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்” (வ.11) என்பதாக அவர் கூறுகின்றார். இதுவே ஊறுதியாகப் பற்றிக் கொள்ளத் தகுந்த மீட்பளிக்கும் வாக்கு.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).   

உறுதியும் நன்மையுமான

அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால்.  
சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22).  
நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.