சமீபத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, என்னுடைய   தந்தை என்னுடைய தாயாருக்கு அனுப்பி வைத்த கடிதங்களைப்  படித்தேன். அவர் வட ஆப்ரிக்காவில் இருந்தார், என் தாயார் அமெரிக்காவில் இருந்தார். என்னுடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் இளம் நிலை அதிகாரியாக இருந்தார், இராணுவ வீரர்களின் கடிதங்களை தணிக்கை செய்யும் பொறுப்பைப்    பெற்றிருந்தார். மிக முக்கியமான செய்திகள் எதிரிகளைச் சேராதபடி காப்பதற்காக இதனைச் செய்தார். அக்கடிதங்களைப் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.  தன் மனைவிக்கு எழுதிய அக்கடிதத்தின் வெளிப்பக்கத்தில், “இரண்டாம் நிலை அதிகாரி ஜாண் பிரானன் (என்னுடைய தந்தையின் பெயர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. தன்னுடைய  சொந்த கடிதத்திலேயே சில வரிகளை அடித்திருந்தார்!

சுய தணிக்கை என்பது, நம் அனைவருக்குமே நன்மையானது. வேதாகமத்தில் அநேக இடங்களில் அதை எழுதியவர்கள், நம்மிடத்தில் சரியில்லாதவை எவை, தேவனுக்கு மகிமையைத் தராதவை எவை என நம்மை நாமே சோதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். சங்கீதக்காரன், “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் ……..வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்” (சங்.139:23-24) என்கின்றான். எரேமியா அதனை இவ்வாறு கூறுகின்றார். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து, ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்” (புல.3:40) என்கின்றார். திரு விருந்தில் பங்கேற்கும் முன்பு, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்” (1 கொரி.11:28) என்று பவுல் நம்முடைய இருதயத்தைக் குறித்துக் கூறுகின்றார்.

தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும், எந்த மனப்பான்மையையும் விட்டு திரும்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவிசெய்வார். எனவே நாம் இந்த உலகத்தினுள் நுழைவதற்கு முன்பாக, நாம் நின்று ஆவியானவரின் உதவியோடு சுய சோதனை செய்வோம், அதன் மூலம் நாம் அவரோடு ஐக்கியமாகும்படி, “தேவனிடம் திரும்புவோம்”.