Archives: செப்டம்பர் 2026

“சிறிய” அற்புதங்கள்

எங்கள் திருமண நிகழ்வில், எங்கள் கூச்ச சுபாவமுள்ள நண்பர் டேவிட் ஒரு மூலையில் ஒரு நீள்சதுர, பழைய செய்திதாளால் மூடப்பட்ட ஒரு பொருளைப் பிடித்தபடி நின்றார். அவரது பரிசை வழங்குவதற்கான முறை வந்தபோது, அவர் அதை முன் கொண்டு வந்தார். இவானும் நானும் அதை அவிழ்த்து, கையால் செதுக்கப்பட்ட மரத் துண்டில் “தேவனுடைய சில அற்புதங்கள் மிகவும் சிறியவைகள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. சின்னச் சின்ன விஷயங்களிலும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், நாற்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் அந்த மரத்தகடு தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துதல், உணவை பெற்றுக்கொள்ளுதல், மற்றும் வியாதி குணமாகுதல் போன்ற அனைத்திலும் தேவனுடைய கிரியை இருக்கிறது.

சகரியா தீர்க்கதரிசியின் மூலம், எருசலேமையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவது குறித்த தேவ கட்டளையை யூதேயாவின் ஆளுநரான செருபாபேல் பெறுகிறார். பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பிறகு, மெதுவான முன்னேற்றத்தின் ஒரு பருவம் தொடங்கியது. இஸ்ரவேலர்கள் ஊக்கம் அடைந்தனர். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” என்று தேவன் ஊக்கப்படுத்தினார் (சகரியா 4:10). அவர் தனது ஆசைகளை நம் மூலமாகவும் சில சமயங்களில் நம்மை மீறியும் நிறைவேற்றுகிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (வச. 6).

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கடவுளின் கிரியையின் வெளிப்படையான சிறியத்தன்மையைக் கண்டு நாம் சோர்வடையும் போது, அவருடைய சில அற்புதங்கள் ‘சிறியதாக” இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தனது பெரிய நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப சிறிய விஷயங்களை பயன்படுத்துகிறார். 

 

ஆரோக்கியமான இருதயம்

மனித இருதயம் ஒரு அற்புதமான உறுப்பு. இந்த முஷ்டி அளவிலான உறுப்பு 7 முதல் 15 அவுன்ஸ் வரை எடை கொண்டது. தினமும் இது 100,000 முறை துடிக்கிறது மற்றும் 2,000 கேலன் இரத்தத்தை நம் உடலில் உள்ள 60,000 மைல் இரத்த நாளங்கள் வழியாக செலுத்துகிறது! இத்தகைய ஒரு திட்டமிட்டப் பணி மற்றும் அதிக பணிச்சுமையுடன், இதய ஆரோக்கியம் முழு உடலின் நல்வாழ்வுக்கு ஏன் மையமாக உள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது. நமது இருதயத்தின் நிலையும், ஆரோக்கியத்தின் தரமும் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர மருத்துவ அறிவியல் நம்மை ஊக்குவிக்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் நமது உடல் இதயங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகப் பேசுகையில், தேவன் மற்றொரு வகையான “இருதயம்” பற்றி இன்னும் அதிக அதிகாரத்துடன் பேசுகிறார். அவர் நம் வாழ்க்கையின் மனரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆவிக்குரிய மையத்தைக் குறித்து பேசுகிறார். இருதயம் வாழ்க்கையின் மையச் செயலாக்க உறுப்பாக என்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டும்: “எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23). நம் இதயங்களைப் பாதுகாப்பது நம் பேச்சுக்கு உதவும் (வச. 24), கண்களால் பகுத்தறியும்படி நம்மை வற்புறுத்தும் (வச. 25), மேலும் நம் கால்களுக்குச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் (வச. 27) உதவுகிறது. வயது அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், நம் இருதயங்கள் பாதுகாக்கப்படும்போது, நம் உயிர்கள் பாதுகாக்கப்படும், நம் உறவுகள் பாதுகாக்கப்படும், மற்றும் தேவன் கனப்படுத்தப்படுகிறார். ஆர்தர் ஜாக்சன்

 

தேடி மீட்டெடு

சில நண்பர்கள் புயல் வானிலை முன்னறிவிப்பு மாறும் என்ற நம்பிக்கையில் கடலில் படகு சவாரி செய்தனர். ஆனால் காற்று உயர்ந்தது, அலைகள் கொந்தளித்து, அவர்களின் படகின் பாதுகாப்பை அச்சுறுத்தியது. எனவே அவர்கள் மீட்புக்குழுவின் (ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன்) உதவிக்கு வானொலி செய்தனர். சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் மீட்பவர்களை தூரத்தில் பார்த்தார்கள். அவர்கள் விரைவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நிம்மதியுடன் உணர்ந்தனர். அதற்குப் பிறகு எனது நண்பர், “மக்கள் கடல் விதிகளை புறக்கணித்தாலும் இல்லாவிட்டாலும், மீட்புக்குழு அவர்களை காப்பாற்ற எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று பெருமையுடன் சொன்னார்.

அவர் அந்த கதையை விவரிக்கையில், தேவனுடைய தேடுதல் மற்றும் மீட்பு பணியை இயேசு எவ்வாறு வழிநடத்துகிறார் என்று நான் நினைத்தேன். நம்மில் ஒருவராக வாழ, மனிதனாக பூமிக்கு வந்தார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம்முடைய பாவமும் கீழ்ப்படியாமையும் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்தபோது அவர் நமக்கு ஒரு மீட்புத் திட்டத்தை வழங்கினார். கலாத்தியாவில் உள்ள தேவாலயத்திற்கு எழுதும் போது, பவுல் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்... அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி... நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:3-4). கலாத்தியர்களுக்கு இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையின் பரிசை பவுல் நினைவுபடுத்தினார். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தேவனை கனப்படுத்துவார்கள்.

நம்மைக் காப்பாற்றிய இயேசு, நம்மைத் தொலைந்து போகாமல் காப்பாற்ற மனமுவந்து மரித்தார். அவர் அவ்வாறு செய்ததால், தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது. மேலும் நன்றியுடன் நம் சமூகத்தில் உள்ளவர்களுடன் வாழ்வளிக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். 

 

பரீட்சயமான நீா்நிலை

தேவன் ஊக்குவிப்பதை உணர்ந்து, ஒரு எழுத்தாளராக ஊழியத்தில் அவரைப் பின்தொடர நான் ஒரு நிறுவன வேலையைத் துறந்தேன். இருப்பினும், நான் உடனடி விளைவுகளைப் பார்க்கவில்லை. மாற்றமாகிக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வெளியீட்டாளர் என்னை நிராகரித்ததை போல எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. முற்றிலும் ஏமாற்றமடைந்த நான், “தேவன் ஏன் என்னை அழைத்தார்?” என்றும் விட்டுவந்த வேலைக்கே திரும்பவும் எண்ணினேன். அப்போதுதான் அவர்களுக்கு எனது புத்தகத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியென்றும், நான் மேலும் அதனை எழுத வேண்டும் என்றும் மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அதுமுதற்கொண்டு, நான் கற்பனை செய்யாத வழிகளில் தேவன் என்னைப் பயன்படுத்துகிறார்.

என் பயணம் பேதுருவை எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர் தனது மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அவரை மறுதலித்தார் (மத்தேயு 26:69-75). அவர் தன்னை குறித்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும் (வ.75). இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஒருவேளை தன்னைத் திசைதிருப்பிக்கொள்ள, பேதுரு தனது சகாக்களுடன் மீண்டும் மீன்பிடிக்க பரீட்சயமான நீர்நிலைகளுக்குச் சென்றார் (யோவான் 21:3). விடிந்தபோது, அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை (வ.3). மாறாக, அவர்கள் கடற்கரையில் இயேசுவைக் கண்டார்கள் (வ.4). வலைகளை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களிடம் கூறி, காலை உணவுக்கு வரும்படி அழைத்தார் (வ.6-13)). அவர் பேதுருவின் பின்மாற்றத்தைக் கண்டிக்கவில்லை, மாறாக "என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக" (வ.15) என்று பேதுருவின் அழைப்பைப் புதுப்பித்தார்.

தேவன் நம்மை அழைக்கும்போது, காரியங்கள் உடனே வாய்க்காமல் போகலாம். நம்மை நாமே நொந்துகொண்டு, விளைவுகளைக் குறித்து சந்தேகம் கொள்ளலாம். ஆனால் தேவன் நம்மைப் பயிற்றுவிக்கவும் சுத்தம் பண்ணவும் அந்த காலத்தைப் பயன்படுத்துகிறார், அதனால் அவர் நம்மை தம் மகிமைக்காகப் பயன்படுத்த முடியும் (யோவான் 15:2). எனவே, பலன்களைக் காணாதபோது, பின்னிட்டு, பரீட்சயமான தண்ணீருக்குத் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக, தேவனின் நேரத்தை நம்பி பொறுமையாகக் காத்திருப்போம்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். “நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால், ‘என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார். இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் “ஆறுதல்” (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார். 

 

உள்ளிருந்து மறுரூபமாகுதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில், மேற்கு லண்டனில் உள்ள இருபத்தி நான்கு மாடி கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் தீ பரவி எழுபது பேரின் உயிர்களைப் பலியாக்கியது. கட்டிடத்தின் புதுப்பித்தலின் பகுதியாக, வெளிப்புறத்தை மூட பயன்படுத்தப்பட்ட உறைப்பூச்சுதான் தீப்பிழம்புகள் மிக விரைவாகப் பரவுவதற்கான முதன்மைக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த பொருள் வெளியில்தான் அலுமினியம், ஆனால் பற்றக்கூடிய நெகிழி அதின் நடுவில் கொண்டிருந்தது.

அத்தகைய ஆபத்தான பொருள் எவ்வாறு விற்கப்பட்டது, நிறுவப்பட்டது? இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள், இது தீ பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததை வெளியிடத் தவறினர். மேலும் வாங்குபவர்கள், பொருளின் மலிவான விலைக் குறியீட்டால், எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். பளபளப்பான உறை வெளிப்புறத்தில் நன்றாகத் தோற்றமளித்தது.

இயேசுவின் சில கடுமையான வார்த்தைகள் மத போதகர்களை நோக்கியே வந்தது, அவர்கள் அழகாகத் தோன்றும் வெளிப்புறத்தில் அநீதியை மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். அவை “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்”, “புறம்பே அலங்காரமாய்” தோன்றும், ஆனால் உள்ளே மரித்தவர்களின் எலும்புகளினால் நிறைந்திருக்கும் (மத்தேயு 23:27) என்றார். “நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்” (வ. 23) பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் அலங்காரமாய்க் காணப்படுவதற்குக் கவனம் செலுத்தினர். “போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தை” சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினர், ஆனால் உள்ளேயிருந்த “கொள்ளை, அநீதி” ஆகியவற்றை விட்டுவிட்டனர் (வ. 25).

நம்முடைய பாவத்தையும்,உள்ள முறிவையும் தேவனுக்கு முன்பாக நேர்மையாகக் கொண்டுவருவதை விட “அலங்காரமாய் தோன்றுவதில்” கவனம் செலுத்துவது எளிது. ஆனால் அழகாகத் தோற்றமளிக்கும் வெளிப்புறமானது, அநீதத்தின் இதயம் உண்டாக்கும் ஆபத்தை மாற்றாது. நம் அனைவரையும் உள்ளிருந்து மாற்றும்படி விட்டுக்கொடுக்க, தேவன் நம்மை அழைக்கிறார் (1 யோவான் 1:9).

 

கிளையாகிய இயேசு

சிவப்பாய் காட்சியளித்த மலைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கிறது அழகிய ஹோலி கிராஸ் சிற்றாலயம். அதற்குள் நுழைந்தவுடன், சிலுவையில் இயேசுவின் வித்தியாசமான சிற்பம் உடனடியாக ஈர்த்தது. ஒரு பாரம்பரிய சிலுவைக்குப் பதிலாக, இயேசு ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு தண்டுகளில் சிலுவையில் அறையப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. கிடைமட்டமாகத் துண்டிக்கப்பட்ட, காய்ந்த தண்டு, தேவனை நிராகரித்த பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறிக்கிறது. மற்ற தண்டு மேல்நோக்கி வளர்ந்து கிளைகள்; யூதாவின் செழிப்பான கோத்திரத்தையும், தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தையும் குறிக்கிறது.

குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலை, இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூதாவின் கோத்திரம் சிறையிருப்பில் வாழ்ந்தாலும், எரேமியா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்: “நான்.. சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்” (எரேமியா 33:14) “அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (வ. 15) என்று மீட்பரை குறித்தது. அவரை ஜனங்கள் அடையாளம் காண்பதற்கான ஓர் வழி, “தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்” (வ. 15) என்பதே. அதாவது, மீட்பர் தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக இருப்பார்.

இயேசுவின் வம்சாவளியின் விவரங்களில், தேவன் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்ற முக்கியமான உண்மையை இச்சிற்பம் திறமையாக வெளிக்காட்டுகிறது. அதிலும், கடந்த காலத்தில் அவருடைய உண்மைத்தன்மையானது எதிர்காலத்தில் நமக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்ற உறுதியளிக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.