Archives: பிப்ரவரி 2025

கிறிஸ்துவில் ஒரு பண்பட்ட வாழ்வு

நாங்கள் எங்கள் வீட்டைக் கட்டியபோது, ​​​​அது ஒரு சரளைக்கல் சாலையின் முடிவிலே, சேறும் காலியுமான இடத்தை விடச் சற்று உயரமாக இருந்தது. சுற்றியிருந்த மலையடிவாரங்களுக்கு ஏற்ப பொருந்துவதற்குப் புற்கள், மரங்கள் மற்றும் புதர்கள் எங்களுக்குத் தேவைப்பட்டன. புல்வெளி வெட்டும் கருவிகளை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்லும்போது, ​​மனிதர்களுக்காகக் காத்திருந்த முதல் தோட்டத்தைப் பற்றி நான் நினைத்தேன்: “நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை.. நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை” (ஆதியாகமம் 2:5).

ஆதியாகமம் 1 இல் உள்ள சிருஷ்டிப்பின் விவரிப்பில், தேவன் "நல்லது" அல்லது "மிகவும் நன்றாயிருந்தது" (வ. 4, 10, 12, 18, 21, 25, 31) என்று மீண்டும் மீண்டும் தனது படைப்பை மதிப்பீடு செய்ததைக் கூறுகிறது. இருப்பினும், அது முழுமையடையவில்லை. ஆதாமும் ஏவாளும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது, தேவனின் படைப்பின் மீதான உக்கிராணத்துவத்தை  செயல்படுத்த வேண்டும் (வ.28). அவர்கள் நிலைமாறாத பரதீசில் அல்ல, மாறாகப் பராமரிப்பும் மேம்பாடும் தேவைப்படும் ஒன்றில் வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டனர்.

ஆதியிலிருந்தே, தேவன் தனது சிருஷ்டிப்பில் தன்னுடன் பங்காளியாக மனிதர்களை அழைத்தார். அவர் அதை ஏதேன் தோட்டத்தில் செய்தார்; மேலும் நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, அவர் நம்மில் உண்டாக்கும் "புதிய சிருஷ்டியை" கொண்டும் அதைச் செய்கிறார் (2 கொரிந்தியர் 5:17). இரட்சிக்கப்படுகையில், நாம் பூரணம் ஆக்கப்படவில்லை. அப்போஸ்தலன் பவுல் சொல்வது போல், "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2), “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” (8:29) அவருக்குப் பிரியமான வாழ்க்கையை நாம் நாடும்போது தேவன் நம்மில் செயல்படுகிறார்.

நிலத்தைப் பராமரிப்பதோ அல்லது கிறிஸ்துவில் நம்முடைய புதிய வாழ்க்கையைப் பராமரிப்பதோ, தேவன் நமக்கு வரமாக ஈந்துள்ளார் நாம் அதைப் பண்படுத்த வேண்டும்.

இயேசுவின் மீது நம் கண்களைப் பதித்தல்

வினிதாவின் கண்கள் அவள் அருகே இருந்த சாம்பல் நிற காரின் மீதே பதிந்திருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற அவள் பாதையை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது, ​​மற்ற ஓட்டுநரும் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது. இறுதியாக, அவள் முன்னால் முந்த முடிந்தது. தன் அற்பமான வெற்றியின் தருணத்தில், வினிதா பின் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தாள். அதே சமயம், அவள் செல்லவேண்டிய இடத்தை, தான் கடந்து செல்வதைக் கவனித்தாள்.

ஒரு கசப்பான புன்னகையுடன், அவள்: "நான் முந்திச் செல்வதிலேயே நோக்கமாய் இருந்தேன், ஆகவே நான் வெளியேறும் வழியைத் தவறவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டாள்.

தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் இப்படிப்பட்ட சறுக்கல் ஏற்படலாம். யூத நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்காததற்காக மதத் தலைவர்கள் இயேசுவை நெருக்குகையில் (யோவான் 5:16), நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய நபரைக் கவனிக்காமல்,  அவர்கள் நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகவும் உறுதியாகிவிட்டனர் என்று எச்சரித்தார்: “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (வ.39-40).

தேவனுக்கு முன்பாக நீதிபரராய் இருக்க முயன்றதில், மதத் தலைவர்கள் யூத நியாயப்பிரமணத்தை தாங்கள் பின்பற்றுவதுமின்றி, மற்றவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினர். அவ்வாறே, தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் சபை கூடுதல், வேத வாசிப்பு, சமூக சேவை போன்ற நல்ல காரியங்களை நாமும் செய்து, பிறரையும் நம்முடன் சேரச் செய்யலாம். ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அவற்றை நாம் யாருக்காகச் செய்கிறோமோ, அந்த இயேசுவானவரையே கவனிக்கத் தவறக்கூடும்.

நாம் செய்யும் அனைத்திலும், கிறிஸ்துவின் மீதே நம் கண்களைப் பதிந்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்போம் (எபிரெயர் 12:2). அவர் ஒருவரே "வழியும் சத்தியமும் ஜீவனும்" (யோவான் 14:6) ஆனவர்.

தேவனின் விசாலமான இடம்

இறையியலாளர் டோட் பில்லிங்ஸ் குணப்படுத்த முடியாத இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தபோது, ​​தனது உடனடி மரணத்தைத் தொலைதூர அறைகளில் உள்ள விளக்குகள் அணைவது அல்லது அணையும்படி மினுமினுப்பது போலவும் இருப்பதாக விவரித்தார். "ஒன்று மற்றும் மூன்று வயதுக் குழந்தையின் தந்தையாக, நான் அடுத்த சில தசாப்தங்களை  ஒரு பரந்த வெளியாக நினைக்க முனைந்தேன். நேட்டியும் நத்தானியேலும் வளர்ந்து முதிர்ச்சியடைவதை நான் பார்ப்பேன் என்று கருதினேன். ஆனால் நோய் கண்டறியப்பட்டதில். ஒரு குறுகல் நடைபெறுகிறது"

இந்த வரம்புகளைப் பற்றிச் சிந்திக்கையில், பில்லிங்ஸ் சங்கீதம் 31 இல், தேவன் தாவீதை எப்படி "விசாலத்திலே" (வ.8) வைத்தார் என்பதையும் அவதானிக்கிறார். தாவீது தனது சத்துருக்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றிப் பேசினாலும், தேவனே தனது பலத்த துருகமும் அடைக்கலமான அரணுமானவர் என்று அவர் அறிந்திருந்தார் (வ.2). இந்த பாடலின் மூலம், சங்கீதக்காரன் தேவன் மீதான தனது நம்பிக்கைக்குக் குரல் கொடுத்தார்: "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" (வ.15).

தேவன் மீது நம்பிக்கை வைப்பதில், பில்லிங்ஸ் தாவீதை பின்பற்றுகிறார். இந்த இறையியலாளர், கணவன், தந்தை தனது வாழ்க்கையில் குறுகலை எதிர்கொண்டாலும், அவரும் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஏன்? ஏனென்றால், கிறிஸ்துவின் பலியின் மூலம் மரணத்தின் மீது தேவன் பெற்ற வெற்றி என்பது, “கற்பனைக்கு எட்டாத விசாலமான இடமான” கிறிஸ்துவில் நாம் வாழ்வதைக் குறிக்கிறது. அவர் விளக்குவது போல், "பரிசுத்த ஆவியானவரால் அவருடைய வாழ்க்கையில் பங்கெடுப்பதை விடப் பரந்த மற்றும் விசாலமானது எது?"

நாமும் புலம்பி அழலாம், ஆனால் நம்மை வழிநடத்தவும் வழிகாட்டவும்  தேவனிடம் அடைக்கலம் புகலாம் (வ.1,3). நாம் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறோம் என்பதை தாவீதுடன் உறுதிப்படுத்த முடியும்.

தாழ்ந்திருப்பினும் தேவனால் நேசிக்கப்படுதல்

ஒரு நாள் சபையில், வருகை தந்திருந்த ஒரு குடும்பத்தை வாழ்த்தினேன். அவர்களோடிருந்த சிறுமியின் சக்கர நாற்காலி அருகே மண்டியிட்டு, எனது வளர்ப்பு நாயான கேலீக்கு அவளை அறிமுகப்படுத்தி, அவளுடைய இனிய தோற்றத்தையும், இளஞ்சிவப்பு கண்ணாடிகள் மற்றும் காலணிகளையும் பாராட்டினேன். அவளால் பேசமுடியாது என்றாலும், அவள் எங்கள் உரையாடலை ரசித்ததாக அவளுடைய புன்னகையே எனக்குச் சொன்னது. எனது புதிய தோழியின் கண்ணில் படுவதைத் தவிர்த்து, மற்றொரு சிறுமி நெருங்கினாள். அவள், "அவளுடைய உடை எனக்குப் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லுங்கள்" என்று கிசுகிசுத்தாள். நான், “நீயே அவளிடம் சொல்லு. அவள் உன்னைப் போலவே அன்பானவள்" என்றேன். எங்கள் புதிய தோழி வித்தியாசமான முறையில்  பேசினாலும், அவளுடன் உரையாடுவது எவ்வளவு எளிது என்பதையும், அவளைப் பார்த்துப் புன்னகைப்பது அவள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நேசிக்கப்படுவதையும் உணர உதவும் என்பதை விளக்கினேன்.

வேதாகமத்திலும் இந்த உலகத்திலும், மக்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மாறுபட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எவ்வாறாயினும், நமது மகாதேவன் நம் வேறுபாடுகளில் மகிழ்கிறார், அவருடனும் அவருடைய குடும்பத்துடனும் நெருங்கிட நம்மை அழைக்கிறார். சங்கீதம் 138ல் தாவீது, “உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; 'தேவர்களுக்கு' முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்றார் (வ.1). அவர், "கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்" (வ.6) என்று கூறுகிறார்.

தேவன், உன்னதர் மற்றும் பரிசுத்தர், அவருடைய சிருஷ்டியாக நம்மை, குறிப்பாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது, கருணையுடன் பார்க்கிறார். நாம் பிறரை அன்பாகப் பார்க்கவும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும் உதவுமாறு அவரிடம் கேட்கும் அதேநேரம் ​​நாம் தாழ்ந்தவர்களாயினும் அவரால் நேசிக்கப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம்!

கிறிஸ்துவின் காட்சிப்படுத்தப்பட்ட முரண்பாடு

காலத்திற்கும் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஐசக் வாட்ஸ், "நான் அதிசயமான சிலுவையை ஆராய்கையில்" பாடலை எழுதினார். அதன் பாடல் வரிகளை எழுதுவதில், அவர் கவிதையில் முரண்பாடென்னும் யுத்தியைப் பயன்படுத்தி கருப்பொருள்களில் ஒரு மாறுபாட்டைக் காட்டினார்: "எனது செழிப்பான ஆதாயத்தை நான் நஷ்டமாக எண்ணுகிறேன்" மற்றும் "என் பெருமையின் மீது அவமதிப்பை ஊற்றுங்கள்" என்று வரிகள் இருக்கும். நாம் சில சமயங்களில் இதை ஆக்ஸிமோரான் (முரண்தொகை) அதாவது "முரண்பட்ட இரட்டைகளை இணைக்கும் வார்த்தைகள்" என்று அழைக்கிறோம். "கசப்பான இனிப்பு" மற்றும் "இருண்ட வெளிச்சம்" போன்றவை. வாட்ஸின் பாடல் வரிகளைப் பொறுத்தவரை, இந்த யுத்தி மிகவும் ஆழமானது.

இயேசு அடிக்கடி முரண்பாட்டைப் பயன்படுத்தினார். "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:3), நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பெறுவார்கள் என்று அவர் கூறினார். நீங்களோ அல்லது நானோ, நாம் நேசித்த ஒருவரின் இழப்பிற்காகத் துக்கமடைந்து துயரப்படுகையில், ​​​​நாம் ஆறுதலடைவோம் (வ.4) என்று இயேசு கூறுகிறார். பொதுவான இவ்வாழ்க்கைக்குரிய விதிகள் தேவனுடைய ராஜ்யத்தில் எவ்வாறு பொருந்தாது என்பதைக் கிறிஸ்து காட்டினார்.

கிறிஸ்துவுக்குள் வாழ்வது, எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறுகிறது என்று இந்த முரண்பாடுகள் நமக்குக் கூறுகின்றன: அடையாளமற்றிருந்த நாம் யாரோ ஒருவராகப் போற்றப்படுகிறோம். சிலுவையிலும் இயேசு ஒரு முரண்பாட்டைக் காட்சிப்படுத்தினார்; அங்கே முள் கிரீடத்தை அணிந்திருந்தார். ஐசக் வாட்ஸ் இந்த ஏளனச் சின்னத்தை எடுத்து, முரண்பாடாக, அதற்கு மிகவுயர்ந்த அழகைக் கொடுத்தார்: "இத்தகைய அன்பும் சோகமும் சந்தித்ததா, அல்லது முட்கள் இத்தனை விலையேறப்பெற்ற கிரீடத்தை உருவாக்கினதா?".இந்த மெய்சிலிர்க்கும் வரிகள், நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன: "இந்த அன்பு மிகவும் அற்புதமானது, மிகவும் தெய்வீகமானது; என் ஆன்மா, என் வாழ்க்கை, என் அனைத்தையும் கோருகிறது"