நாங்கள் எங்கள் வீட்டைக் கட்டியபோது, ​​​​அது ஒரு சரளைக்கல் சாலையின் முடிவிலே, சேறும் காலியுமான இடத்தை விடச் சற்று உயரமாக இருந்தது. சுற்றியிருந்த மலையடிவாரங்களுக்கு ஏற்ப பொருந்துவதற்குப் புற்கள், மரங்கள் மற்றும் புதர்கள் எங்களுக்குத் தேவைப்பட்டன. புல்வெளி வெட்டும் கருவிகளை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்லும்போது, ​​மனிதர்களுக்காகக் காத்திருந்த முதல் தோட்டத்தைப் பற்றி நான் நினைத்தேன்: “நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை.. நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை” (ஆதியாகமம் 2:5).

ஆதியாகமம் 1 இல் உள்ள சிருஷ்டிப்பின் விவரிப்பில், தேவன் “நல்லது” அல்லது “மிகவும் நன்றாயிருந்தது” (வ. 4, 10, 12, 18, 21, 25, 31) என்று மீண்டும் மீண்டும் தனது படைப்பை மதிப்பீடு செய்ததைக் கூறுகிறது. இருப்பினும், அது முழுமையடையவில்லை. ஆதாமும் ஏவாளும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது, தேவனின் படைப்பின் மீதான உக்கிராணத்துவத்தை  செயல்படுத்த வேண்டும் (வ.28). அவர்கள் நிலைமாறாத பரதீசில் அல்ல, மாறாகப் பராமரிப்பும் மேம்பாடும் தேவைப்படும் ஒன்றில் வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டனர்.

ஆதியிலிருந்தே, தேவன் தனது சிருஷ்டிப்பில் தன்னுடன் பங்காளியாக மனிதர்களை அழைத்தார். அவர் அதை ஏதேன் தோட்டத்தில் செய்தார்; மேலும் நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, அவர் நம்மில் உண்டாக்கும் “புதிய சிருஷ்டியை” கொண்டும் அதைச் செய்கிறார் (2 கொரிந்தியர் 5:17). இரட்சிக்கப்படுகையில், நாம் பூரணம் ஆக்கப்படவில்லை. அப்போஸ்தலன் பவுல் சொல்வது போல், “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” (ரோமர் 12:2), “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” (8:29) அவருக்குப் பிரியமான வாழ்க்கையை நாம் நாடும்போது தேவன் நம்மில் செயல்படுகிறார்.

நிலத்தைப் பராமரிப்பதோ அல்லது கிறிஸ்துவில் நம்முடைய புதிய வாழ்க்கையைப் பராமரிப்பதோ, தேவன் நமக்கு வரமாக ஈந்துள்ளார் நாம் அதைப் பண்படுத்த வேண்டும்.