வினிதாவின் கண்கள் அவள் அருகே இருந்த சாம்பல் நிற காரின் மீதே பதிந்திருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற அவள் பாதையை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது, மற்ற ஓட்டுநரும் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது. இறுதியாக, அவள் முன்னால் முந்த முடிந்தது. தன் அற்பமான வெற்றியின் தருணத்தில், வினிதா பின் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தாள். அதே சமயம், அவள் செல்லவேண்டிய இடத்தை, தான் கடந்து செல்வதைக் கவனித்தாள்.
ஒரு கசப்பான புன்னகையுடன், அவள்: “நான் முந்திச் செல்வதிலேயே நோக்கமாய் இருந்தேன், ஆகவே நான் வெளியேறும் வழியைத் தவறவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டாள்.
தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் இப்படிப்பட்ட சறுக்கல் ஏற்படலாம். யூத நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்காததற்காக மதத் தலைவர்கள் இயேசுவை நெருக்குகையில் (யோவான் 5:16), நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய நபரைக் கவனிக்காமல், அவர்கள் நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகவும் உறுதியாகிவிட்டனர் என்று எச்சரித்தார்: “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (வ.39-40).
தேவனுக்கு முன்பாக நீதிபரராய் இருக்க முயன்றதில், மதத் தலைவர்கள் யூத நியாயப்பிரமணத்தை தாங்கள் பின்பற்றுவதுமின்றி, மற்றவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினர். அவ்வாறே, தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் சபை கூடுதல், வேத வாசிப்பு, சமூக சேவை போன்ற நல்ல காரியங்களை நாமும் செய்து, பிறரையும் நம்முடன் சேரச் செய்யலாம். ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அவற்றை நாம் யாருக்காகச் செய்கிறோமோ, அந்த இயேசுவானவரையே கவனிக்கத் தவறக்கூடும்.
நாம் செய்யும் அனைத்திலும், கிறிஸ்துவின் மீதே நம் கண்களைப் பதிந்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்போம் (எபிரெயர் 12:2). அவர் ஒருவரே “வழியும் சத்தியமும் ஜீவனும்” (யோவான் 14:6) ஆனவர்.
இன்று நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்கள்? நீங்கள் இயேசுவின் மீது உங்கள் கண்களைப் பதிப்பதின் அர்த்தம் என்ன?
அன்பு தேவனே, கிறிஸ்து மூலம் எனக்கு ஜீவனைக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரை மையமாக வைத்துக்கொள்ள எனக்கு உதவும்.