வருடாந்திர தேசிய கால்பந்து போட்டிகளுக்கான தேர்வுகளின் போது, தொழில்முறை கால்பந்து அணிகள் புதிய வீரர்களைத் தேர்வு செய்கின்றன. வருங்கால வீரர்களின் திறமை மற்றும் உடல் தகுதியை மதிப்பிடுவதற்குப் பயிற்சியாளர்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். 2022 இல், ப்ராக் பர்டி கடைசி 262வது இடத்தைப் பிடித்தார் மற்றும் “திரு. ovvvadhavar” என்று முத்திரை குத்தப்பட்டார். கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் புனைபெயர் அது. வரும் போட்டி தொடரில் அவர் விளையாடுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, பர்டி தனது அணியை இரண்டு பிளேஆஃப் (சமநிலை உடைக்கும் போட்டிகள்) வெற்றிகளுக்கு வழிநடத்தினார். உண்மை என்னவென்றால், அணியின் நிர்வாகிகள் எப்போதும் திறனைக் கண்டறியும் வேலையைத் திறம்படச் செய்வதில்லை. நாமும் அப்படிதான்.
பரீட்சயமான பழைய ஏற்பாட்டுக் கதை ஒன்றில், ஈசாயின் குமாரரிலிருந்து இஸ்ரேலின் அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுக்க சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேவன் அனுப்பினார். சாமுவேல் அந்த ஆண்மக்களைப் பார்த்தபோது, அவர்களின் உடல் தோற்றத்தால் அவர் சற்றே தடுமாறினார். ஆனால் தேவன் அவரிடம், “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்” (1 சாமுவேல் 16:7) என்றார். மாறாக, தேவன் அவரை மூத்தவனையோ அல்லது பராக்கிரமசாலியையோ தெரிந்துகொள்ளும்படி வழிநடத்தாமல், இளையவனும் வெளித்தோற்றத்தில் பொருத்தமற்றவனாகவும் தோன்றும் தாவீதையே தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தினார். இவரே பின்னர் இஸ்ரவேலின் மிகப் பெரிய பூமிக்குரிய ராஜாவானார்.
மக்களை மதிப்பிடுவதில் அடிக்கடி நாம் ஏன் மோசமாகத் தவறுகிறோம்? ” மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (வ.7) என்பதை நமது வேதாகம பகுதி நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு பணிக்குழுவில் பணியாற்றவோ அல்லது ஒரு தன்னார்வ குழுவில் சேவைசெய்யவோ எவரையாகிலும் தேர்ந்தெடுக்கும்படி நாம் கேட்கப்படும்போது, தேவனுக்குமுன் விலையேறப்பெற்ற சுபாவங்களின் அடிப்படையில் தேர்வுகளைச் செய்வதற்கான ஞானத்தைத் தரும்படி அவரிடம் கேட்கலாம்.
நீங்கள் எப்போது "ஒவ்வாதவராக" உணர்ந்தீர்கள்? தேவனின் கண்ணோட்டத்தில் ஜனங்களை நீங்கள் எவ்வாறு பார்க்க முடியும்?
பரலோகத் தகப்பனே, நீர் பிறரை எப்படிப் பார்க்கிறீரோ, அவ்வாறே நானும் பார்க்க எனக்குப் புரிதலைத் தாரும்.