ஒரு நாள் சபையில், வருகை தந்திருந்த ஒரு குடும்பத்தை வாழ்த்தினேன். அவர்களோடிருந்த சிறுமியின் சக்கர நாற்காலி அருகே மண்டியிட்டு, எனது வளர்ப்பு நாயான கேலீக்கு அவளை அறிமுகப்படுத்தி, அவளுடைய இனிய தோற்றத்தையும், இளஞ்சிவப்பு கண்ணாடிகள் மற்றும் காலணிகளையும் பாராட்டினேன். அவளால் பேசமுடியாது என்றாலும், அவள் எங்கள் உரையாடலை ரசித்ததாக அவளுடைய புன்னகையே எனக்குச் சொன்னது. எனது புதிய தோழியின் கண்ணில் படுவதைத் தவிர்த்து, மற்றொரு சிறுமி நெருங்கினாள். அவள், “அவளுடைய உடை எனக்குப் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லுங்கள்” என்று கிசுகிசுத்தாள். நான், “நீயே அவளிடம் சொல்லு. அவள் உன்னைப் போலவே அன்பானவள்” என்றேன். எங்கள் புதிய தோழி வித்தியாசமான முறையில் பேசினாலும், அவளுடன் உரையாடுவது எவ்வளவு எளிது என்பதையும், அவளைப் பார்த்துப் புன்னகைப்பது அவள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நேசிக்கப்படுவதையும் உணர உதவும் என்பதை விளக்கினேன்.
வேதாகமத்திலும் இந்த உலகத்திலும், மக்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மாறுபட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எவ்வாறாயினும், நமது மகாதேவன் நம் வேறுபாடுகளில் மகிழ்கிறார், அவருடனும் அவருடைய குடும்பத்துடனும் நெருங்கிட நம்மை அழைக்கிறார். சங்கீதம் 138ல் தாவீது, “உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; ‘தேவர்களுக்கு’ முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்றார் (வ.1). அவர், “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்” (வ.6) என்று கூறுகிறார்.
தேவன், உன்னதர் மற்றும் பரிசுத்தர், அவருடைய சிருஷ்டியாக நம்மை, குறிப்பாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது, கருணையுடன் பார்க்கிறார். நாம் பிறரை அன்பாகப் பார்க்கவும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும் உதவுமாறு அவரிடம் கேட்கும் அதேநேரம் நாம் தாழ்ந்தவர்களாயினும் அவரால் நேசிக்கப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம்!
தேவனுடன் ஒப்பிடுகையில் நீங்கள் தாழ்ந்தவர் என்பதை நினைவில் கொள்வது மற்றவர்களைப் பார்க்கும் விதத்தை எவ்வாறு மாற்றுகிறது? நமது சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளிடம் நீங்கள் எப்படி அன்பைக் காட்ட முடியும்?
அன்பு தேவனே, ஒவ்வொரு நாளும் நீர் என்னிடம் காட்டும் அதே அளவு கருணை மற்றும் நிபந்தனையற்ற அன்புடன் அனைவரையும் வாழ்த்த எனக்கு உதவும்.