பிப்ரவரி, 2025 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

Archives: பிப்ரவரி 2025

வானவில்களும் தேவனின் வாக்குகளும்

நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புதமான ஆற்றலை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, ​​மற்ற சுற்றுலாப் பயணிகள் திடீரென புகைப்படம் எடுக்கத் தொடங்கியதைக் கவனித்தேன். அதே திசையில் பார்த்தபோது, ​​ஒரு வானவில் தோன்றியதைக் கண்டேன் , அது ஆற்றின் குறுக்கே வளைந்திருந்தது. இது குதிரைக் குளம்பு வடிவ கனேடிய நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தொடங்கி, அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் முடிவடைவது போல் தோன்றியது.

உண்மையில், வானவில்லுக்கு முடிவே இல்லை. வானவில் என்பது ஒரு முழு வட்டம், நான் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் விமானத்தின் ஜன்னலில் பார்த்துக் கொண்டிருந்தேன், சூரியன் சரியான திசையில் பிரகாசித்து, மேகங்களுக்கு மேலே ஒரு முழு வட்ட வானவில்லை வெளிக்காட்டியது. விமானம் திரும்பி, வட்டம் மறையும் வரை, இந்த  காட்சியால் பரவசமாக அமர்ந்திருந்தேன்.

நான் சிந்திக்கும்படி, அந்த வானவில் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. தேவனுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை, நாம் எங்கிருந்தாலும் அவர் தம் வாக்குத்தத்தங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். முடிவில்லாத, நம் நித்திய தேவன் "[அவரது] வில்லை மேகத்தில் வைத்(தார்)தேன்" (ஆதியாகமம் 9:13). "எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு" (வ.15) அது வாக்குத்தத்தமாக இருந்தது. இன்றும் கூட, நம் சிருஷ்டிகர் அந்த வாக்குத்தத்தத்தின் நினைவூட்டலை அவருடைய படைப்பாகிய நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் (வ.13-16).

ஏசாயா 40:28, “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன்.... அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” என்கிறது. என்ன ஒரு அற்புதமான சிந்தனை! தம் வாக்குத்தத்தத்தைக் காப்பவரைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு நித்தியமே இருக்கும், மேலும் அவருடைய புத்தியின் ஆழத்தை நாம் ஒருபோதும் அடைய மாட்டோம்.

 

நீர்க்கால்களின் ஓரம் நடப்பட்டது

சுந்தரம் ஒரு வயதான ஓய்வுபெற்ற கண்ணியமானவர், அவர் தனியாக வசிக்கிறார், சமீபத்தில் வாகனம் ஓட்டுவதைக் கைவிட வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்கவும் மற்றும் சபைக்குச் செல்லவும் அவருக்கு உதவி தேவை. "ஆனால் உங்களுக்குத் தெரியுமா, நான் வீட்டில் இருக்கும் நாட்களையே விரும்புகிறேன். நான் நாள் முழுவதும் இணையத்தில் இலவச ஆராதனை பாடல்களையும், தொலைக்காட்சியில் வேதாகம பாடங்களையும் அனுபவித்து மகிழ்கிறேன்" என்று சுந்தரம் கூறுகிறார். சுந்தரம் தனது நாட்களை வேதாகமம், ஜெபம் மற்றும் துதி ஆகியவற்றுடன் கழிக்கிறார்

நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், நம் இதயங்கள் எங்கு நாட்டப்பட்டுள்ளன என்பதைத் தீர்மானிக்கின்றன. சங்கீதம் 1, தேவதயவைப் பெற்ற ஒருவரின் பழக்கவழக்கங்களை விவரிக்கிறது: அவர்கள் அவருடைய சத்தியத்தில் மகிழ்கிறார்கள், அதை அடிக்கடி தியானிக்கிறார்கள், எனவே உலகின் முரட்டாட்டமான முறையைப் பின்பற்றுவதில்லை (வ.1-2). எல்லோருக்கும் கஷ்டம் வரும், ஆனால் தேவனின் வழிகளில் வேரூன்றிய வாழ்க்கை “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,.. இலையுதிராதிருக்கிற" (வ.3) மரத்தைப் போலிருக்கும். நம் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, வேதவாசிப்பில் ஒரு நாளைக்குப் பல மணிநேரம் செலவிட முடியாமல் போகலாம். இருப்பினும், தாகமாக தம்மிடம் வருவார் எவரையும் அவர் திருப்தியாக்குவார் என்றும், பரிசுத்த ஆவியானவர் தம்மைப் பின்பற்றுபவர்களை ஒரு நதியைப் போல நிரப்புகிறார் என்றும் இயேசு கூறினார் (யோவான் 7:37-39). துதி மற்றும் வேதாகமத்தின் மூலமாகவும், பிறரிடம் கரிசனை கொள்வதன் மூலமாகவும், நாம் வேலை செய்யும் போதும் தேவனிடம் பேசுவதன் மூலமாகவும், நாம் தவறும் போது மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும் நம் இதயங்களை ஜீவத் தண்ணீரில் மூழ்கடிக்க முடியும்.

தேவனின் ஞான ஆலோசனைகளைப் பின்பற்றுதல், வளமான மண்ணில் நம் இதயங்களை நடுகிறது. அந்த வாழ்க்கை நீதியென்று அழைக்கப்படுகிறது, தேவன் அதைக் காப்பாற்றுகிறார் (சங்கீதம் 1:6).

இயேசுவிலான அன்பின் சொத்து

ஸ்வீடனில், தோஸ்தத்னிங் எனப்படும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. இதன் பொருள் "மரண சுத்திகரிப்பு". நமக்கு வயதாகும்போது, ​​​​"பொருட்களை" குவிப்பதை நிறுத்திவிட்டு, நம் வாழ்நாள் முழுவதும் வாங்கி குவித்துள்ள தேவையற்றவைகளை அகற்றிட ஆரம்பிக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. "ஸ்வீடிஷ் மரண சுத்திகரிப்பு" என்பது, உண்மையில் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்குமான நமது அன்பின் பரிசாகும், ஏனென்றால் இது நாம் விட்டுச்செல்லும் விஷயங்களை வைத்துக்கொண்டு அவர்கள் அலைந்து திரிவதைத் தடுக்கிறது.

இயேசுவின் விசுவாசிகளாக, ஒரு குறிப்பிட்ட வயதில் நமக்கு எஞ்சியிருக்கும் நம் சொத்துக்களைப் பற்றிச் சிந்திக்கிறோம். இது பெரும்பாலும் பணம், பரம்பரை சொத்து அல்லது தானம் செய்வதின் (இதைக்குறித்து நிறையச் சொல்லலாம்) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் இயேசுவின் கடைசி நேரத்தில், அவருடைய சீடர்களுடன் அவர் உரையாடியதைப்  பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்: "நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய்" (யோவான் 13:36). இரண்டு வசனங்களில் (வ.34-35), அவர் அன்பைக் குறிக்கும்  வார்த்தைகளை நான்கு முறை பயன்படுத்துகிறார். அவருடைய சொத்து அன்பே. அவர் அவர்களிடம் கூறினார்: "நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" (வ.34).

ஒழுங்கீனத்தை நீக்கி, மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே விட்டுச்செல்லும்படி நம் வாழ்விலும் சில "ஸ்வீடிஷ் மரண சுத்திகரிப்பு" செய்வது நல்லது. ஆனால் அது உண்மையில் பொருட்களையோ பணத்தையோ பற்றியது அல்ல. நீங்கள் விட்டுச் செல்லக்கூடிய மிக முக்கியமான சொத்து, இயேசுவின் மீதான உங்கள் அன்பே. குழந்தைகளும் நண்பர்களும் உங்களை இயேசுவை நேசிப்பவராக நினைவுகூரும்போது, ​​அதுவே சிறந்த பரிசு. "விட்டுச் செல்லுதல்" என்ற சொற்றொடருக்கு இது புதிய அர்த்தத்தை அளிக்கிறது.

மீண்டும் எழுதல்

என் இளம் பிராயத்தில், நான் பனிச்சறுக்கு விளையாட்டால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். வேகமான சுழல்கள், உயரம் தாண்டுதல் மற்றும் நேர்த்தியான தோரணைகளுடன் பனிக்கட்டி மேல் வெளிப்படும் கலைத்திறன் மற்றும் தடகளத்தின் கலவையை நான் விரும்பினேன். பல தொழில்முறை பனிச்சறுக்கு வீரர்களின் செயல் யுத்திகளைப் பார்த்த பிறகு, இறுதியாகப் பனிச்சறுக்கு விளையாடவும், குழுவாக அதைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. சறுக்குவதும் நிறுத்துவதும் எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதோடு, எந்த நிலையிலும் பனிச்சறுக்கு வீரருக்கு வேண்டிய சில முக்கியமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டோம்; அது விழுந்தவுடனே எழுவது எப்படி என்பதே. பின்னர், நான் தனிப்பட்ட பாடங்களில் பல சுழல்களையும் தாவல்களையும் கற்றுக்கொண்டேன், ஆனால் வீழ்ச்சிக்குப் பிறகு எப்படி எழுவது என்ற அடிப்படைகளை எப்போதும் நான் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

"வீழ்ச்சி" என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அறிய, நாம் தடகள வீரர்களாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை நாம் பாவம் செய்ததால் விழுந்திருக்கலாம், ஒரு தவற்றின் காரணமாக நாம் தடுமாறலாம் அல்லது ஒரு மிகக்கடினமான சூழ்நிலையால் நாம் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை நாம் ஏதோவொரு வழியிலே பிசாசால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். “நாங்கள்.. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரிந்தியர் 4:8-9). காரணம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் வாழ்க்கையில் விழுந்து தோல்வியை அனுபவிக்கிறோம்.

ஆனால் நாம் தோல்வியிலோ, அவமானத்திலோ அல்லது வருத்தத்திலோ வாழ வேண்டிய அவசியம் இல்லை. துஷ்டன் நமக்கு விரோதமாய்ப் பதிவிருந்து,  நம்மைப் பாழாக்கிப்போட முயலும்போது (நீதிமொழிகள் 24:15), தேவன் நமக்காக யுத்தம் செய்கிறார், நாம் மீண்டும் எழுந்திருக்க உதவுவார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்" (வ.16).

நாம் விழும்போது, ​​விரைவாகத் தேவனிடம் திரும்புவோம், மீண்டும் எழுவதற்கு நமக்குப் பலத்தைத் தருகிறவர் மீது நம் கண்களைப் பதிப்போம்.

எளிய உண்மை

நானும் என் மனைவியும் சைக்கிள் ஓட்டும்போது,  ​​நாங்கள் எத்தனை மைல்கள் கடந்துள்ளோம் என்பதை அறிய விரும்பினோம். எனவே, நான் தூரமானி (தூரத்தை அளக்கும் கருவி) ஒன்றை வாங்க ஒரு சைக்கிள்  கடைக்குச் சென்று, அதனுடன் ஒரு கையடக்க கணினியையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். கணினியோடு இணைப்பது சற்று சிக்கலாயிருந்தது.

மீண்டும் சைக்கிள் கடைக்குச் சென்றேன், அதை எனக்கு விற்றவர் சிறிது நேரத்திலேயே வேலை செய்ய வைத்தார். நான் எண்ணியது போல அதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல என்பதை உணர்ந்தேன்.

வாழ்க்கையில், புதிய விஷயங்கள் மற்றும் புதிய யோசனைகள் சிக்கலானதாகத் தோன்றலாம். உதாரணமாக, இரட்சிப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். தேவனின் பிள்ளையாக மாறுவது சிக்கலானது என்று சிலர் நினைக்கலாம்.

ஆயினும்கூட, வேதாகமம் அதை எளிய வார்த்தைகளில் அறிவிக்கிறது: "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31). பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எதுவும் இல்லை. தீர்க்க வேண்டிய புதிர்களும் இல்லை.

இதுவே எளிய உண்மை: நாம் எல்லாரும் பாவஞ்செய்து (ரோமர் 3:23), நம்முடைய பாவத்தின் தண்டனையான மரணம் மற்றும் தம்மிடமிருந்து நித்திய பிரிவினையிலிருந்து நம்மை இரட்சிக்க, இயேசு பூமிக்கு வந்தார் (மத்தேயு 1:21; 1 பேதுரு 2:24). அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் (ரோமர் 10:9). அவர் நமக்காகச் செய்ததை நம்புவதன் மூலம் நாம் ஆவிக்குரிய மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கென இரட்சிக்கப்படுகிறோம் (யோவான் 3:16)

நீங்கள் வெறுமனே இயேசுவை நம்புவதும் விசுவாசிப்பதும் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுக்கு, ஜீவனை பரிபூரணமாக (யோவான் 10:10) அருளுவாராக.