என் இளம் பிராயத்தில், நான் பனிச்சறுக்கு விளையாட்டால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். வேகமான சுழல்கள், உயரம் தாண்டுதல் மற்றும் நேர்த்தியான தோரணைகளுடன் பனிக்கட்டி மேல் வெளிப்படும் கலைத்திறன் மற்றும் தடகளத்தின் கலவையை நான் விரும்பினேன். பல தொழில்முறை பனிச்சறுக்கு வீரர்களின் செயல் யுத்திகளைப் பார்த்த பிறகு, இறுதியாகப் பனிச்சறுக்கு விளையாடவும், குழுவாக அதைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. சறுக்குவதும் நிறுத்துவதும் எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதோடு, எந்த நிலையிலும் பனிச்சறுக்கு வீரருக்கு வேண்டிய சில முக்கியமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டோம்; அது விழுந்தவுடனே எழுவது எப்படி என்பதே. பின்னர், நான் தனிப்பட்ட பாடங்களில் பல சுழல்களையும் தாவல்களையும் கற்றுக்கொண்டேன், ஆனால் வீழ்ச்சிக்குப் பிறகு எப்படி எழுவது என்ற அடிப்படைகளை எப்போதும் நான் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

“வீழ்ச்சி” என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அறிய, நாம் தடகள வீரர்களாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை நாம் பாவம் செய்ததால் விழுந்திருக்கலாம், ஒரு தவற்றின் காரணமாக நாம் தடுமாறலாம் அல்லது ஒரு மிகக்கடினமான சூழ்நிலையால் நாம் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை நாம் ஏதோவொரு வழியிலே பிசாசால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். “நாங்கள்.. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரிந்தியர் 4:8-9). காரணம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் வாழ்க்கையில் விழுந்து தோல்வியை அனுபவிக்கிறோம்.

ஆனால் நாம் தோல்வியிலோ, அவமானத்திலோ அல்லது வருத்தத்திலோ வாழ வேண்டிய அவசியம் இல்லை. துஷ்டன் நமக்கு விரோதமாய்ப் பதிவிருந்து,  நம்மைப் பாழாக்கிப்போட முயலும்போது (நீதிமொழிகள் 24:15), தேவன் நமக்காக யுத்தம் செய்கிறார், நாம் மீண்டும் எழுந்திருக்க உதவுவார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” (வ.16).

நாம் விழும்போது, ​​விரைவாகத் தேவனிடம் திரும்புவோம், மீண்டும் எழுவதற்கு நமக்குப் பலத்தைத் தருகிறவர் மீது நம் கண்களைப் பதிப்போம்.