நானும் என் மனைவியும் சைக்கிள் ஓட்டும்போது, நாங்கள் எத்தனை மைல்கள் கடந்துள்ளோம் என்பதை அறிய விரும்பினோம். எனவே, நான் தூரமானி (தூரத்தை அளக்கும் கருவி) ஒன்றை வாங்க ஒரு சைக்கிள் கடைக்குச் சென்று, அதனுடன் ஒரு கையடக்க கணினியையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். கணினியோடு இணைப்பது சற்று சிக்கலாயிருந்தது.
மீண்டும் சைக்கிள் கடைக்குச் சென்றேன், அதை எனக்கு விற்றவர் சிறிது நேரத்திலேயே வேலை செய்ய வைத்தார். நான் எண்ணியது போல அதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல என்பதை உணர்ந்தேன்.
வாழ்க்கையில், புதிய விஷயங்கள் மற்றும் புதிய யோசனைகள் சிக்கலானதாகத் தோன்றலாம். உதாரணமாக, இரட்சிப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். தேவனின் பிள்ளையாக மாறுவது சிக்கலானது என்று சிலர் நினைக்கலாம்.
ஆயினும்கூட, வேதாகமம் அதை எளிய வார்த்தைகளில் அறிவிக்கிறது: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31). பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எதுவும் இல்லை. தீர்க்க வேண்டிய புதிர்களும் இல்லை.
இதுவே எளிய உண்மை: நாம் எல்லாரும் பாவஞ்செய்து (ரோமர் 3:23), நம்முடைய பாவத்தின் தண்டனையான மரணம் மற்றும் தம்மிடமிருந்து நித்திய பிரிவினையிலிருந்து நம்மை இரட்சிக்க, இயேசு பூமிக்கு வந்தார் (மத்தேயு 1:21; 1 பேதுரு 2:24). அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் (ரோமர் 10:9). அவர் நமக்காகச் செய்ததை நம்புவதன் மூலம் நாம் ஆவிக்குரிய மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கென இரட்சிக்கப்படுகிறோம் (யோவான் 3:16)
நீங்கள் வெறுமனே இயேசுவை நம்புவதும் விசுவாசிப்பதும் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுக்கு, ஜீவனை பரிபூரணமாக (யோவான் 10:10) அருளுவாராக.
நீங்கள் இயேசுவில் இரட்சிப்பைப் பெறுவதன் அர்த்தம் என்ன? நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் அவர் மீதுள்ள விசுவாசம் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தியது?
அன்பு தேவனே, நான் ஒரு பாவி என்பதை நான் உணர்கிறேன், உம் பார்வையில் தவறான காரியங்களைச் செய்கிறேன். என் பாவங்களுக்காகச் சிலுவையில் மரிக்க இயேசுவைப் பூமிக்கு அனுப்பினீர் என்பதையும் நான் உணர்கிறேன். தயவாய் என் பாவங்களை மன்னித்து என்னை மீட்டுக்கொள்ளும். நீர் அருளிய இரட்சிப்பிற்காக உமக்கு நன்றி!