சிறுவயதில், “நீ பெரியவனாகி என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டாலே, முகில், “நான் மனோஜை போல இருக்க விரும்புகிறேன்” என்பான். முகிலின் மூத்த சகோதரன் தடகள வீரன், சகஜமாகப் பழகுபவன் மற்றும் மரியாதைக்குரிய மாணவன். மறுபக்கம் முகிலோ “நான் விளையாட்டில் மோசமானவன், பயந்தவன், கற்றல் குறைபாட்டுடன் போராடினேன். நான் எப்போதும் மனோஜுடன் நெருங்கிய உறவை விரும்பினேன், ஆனால் அவனோ விரும்பவில்லை. அவன் என்னை ‘சலிப்பானவன்’ என்று அழைத்தான்” என்றான்.

முகில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, தனது மூத்த சகோதரனின் அன்பைப் பெறுவதிலேயே வீணாகச் செலவிட்டான். மாறாக, முகில் இயேசுவைப் பின்பற்றுபவனாக ஆனபோதுதான், தன் இரட்சகரின் அன்பில் இளைப்பாறிடக் கற்றுக்கொண்டான்.

யாக்கோபின் முதல் மனைவியான லேயாள், தன் வாழ்நாளின் பெரும்பகுதியில் தன் கணவனின் அன்பை நாடினாள் (ஆதியாகமம் 29:32-35). இருப்பினும், யாக்கோபு ராகேலிடம் பட்சமாய் இருந்தார். ஆனால் தேவன் லேயாளின் அவல நிலையைக் கண்டு அவள் வாழ்வில் நிராகரிக்கப்பட்டதற்கு ஈடுசெய்தார். அவர் அவளை ஒரு தாயாக அனுக்கிரகம் செய்து ஆசீர்வதித்தார், அக்காலத்தில் அவளுடைய கலாச்சாரத்தில் அது ஒரு பெரிய கனம் (வ.31). தன் கணவனால் கண்டுகொள்ளப்படாதவளாக, செவிகொடுக்கப்படாதவளாக இருந்த லேயாள்,  தேவனில் அன்புடன் பார்க்கப்பட்டாள், கேட்கப்பட்டாள் (வ.32-33). அவள் ஒரு மகளையும் ஆறு மகன்களையும் பெற்றெடுத்தாள், அவர்களில் ஒருவர் யூதா, இயேசுவின் முன்னோர். அவள் அவனுடைய பிறப்பின்போது, ” இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” (வ.35) என்று கூறினாள். லேயாள் கானானில் நீண்ட காலம் வாழ்ந்தாள், மேலும் யாக்கோபின் குடும்பத்துடன் கனத்துக்குரிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள் (49:29-32).

நாம் நிராகரிப்பை அனுபவிக்கும் போது, ​​லேயாளின் கதையால் ஆறுதல் காண்போம். நாம் இழந்ததை ஈடுசெய்யும் தேவனின் அன்பில் நாம் இளைப்பாறலாம்.